Mahabharatham Episode 9 – மகாபாரதம் பகுதி 9

Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-9

அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை மணந்து கொண்டு சந்தோஷமாக இரு, என வாழ்த்தி, தக்க படைபலத்துடன் அவளை சாளுவ தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.அம்பா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாளுவதேசத்துக்கு சென்றாள். அரண்மனைக்குச் சென்று பிரம்மதத்தனை அப்படியே அள்ளி அணைத்தாள்.மன்னவரே! பீஷ்மரிடம் பிடிபட்டவர்கள் தப்பித்த வரலாறு உண்டா? நான் உங்கள் மீது கொண்ட காதலை அவரிடம் தெரிவித்தேன்.

அவரது தம்பியை மணந்து நிம்மதியாக வாழ முடியாது. மனதில் ஒருவனையும், வீட்டில் ஒருவனையும் சுமந்து கொண்டு வாழ முடியாது என்றேன். என் கருத்தை பீஷ்மர் ஏற்றார். என்னை விடுவித்து விட்டார். பிரம்மதத்தரே! இனி நம்மை பிரிக்க யாருமில்லை. நம் மணநாளைக் குறியுங்கள், என படபடவென பொரிந்தாள். சீ மானம் கெட்டவளே! வெளியே போ, என அரண்மனையே அதிரும் வகையில் கத்தினான் பிரம்மதத்தன். அம்பா அதிர்ந்தாள். ஏ அம்பா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்.

அந்த பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரியனுக்காக உன்னை அழைத்துச் சென்றான். அவன் உன்னிடம் உல்லாசமாக இருந்திருப்பான். அங்கே இருந்துவிட்டு இங்கே வர உனக்கு எப்படி தைரியம் வந்தது? இங்கிருந்து ஓடிவிடு. உன்னை நான் இனியும் திருமணம் செய்ய மாட்டேன். ஏற்கனவே ஒருவனால் கடத்தப்பட்ட உன்னை திருமணம் செய்துகொள்ள நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல, என்று வாய்க்கு வந்தபடி பேசினான்.மனம் உடைந்துபோன அம்பா, தலைகுனிந்து அவமானப்பட்டு அங்கிருந்து அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள்.

பீஷ்மரின் முன்னால் சென்ற அவள் நடந்த சம்பவத்தை அழுதபடியே விவரித்தாள். பீஷ்மர் அவளுக்கு ஆறுதல் கூறினார்.அம்பா பீஷ்மரிடம், அன்பரே! உங்களால் கடத்தி வரப்பட்டதால்தான் என்னை திருமணம் செய்ய முடியாது என பிரம்மதத்தன் சொல்லி விட்டான். உங்கள் தம்பியை திருமணம் செய்தால் நீ பிரம்மதத்தனுடன் எத்தனை நாள் இருந்தாய் என அவர் என்னிடம் கேள்வி கேட்பார். இந்த நிலையில் நான் உங்களை மட்டுமே நம்பியுள்ளேன். நீங்கள்தான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள், என்றாள்.

பீஷ்மர் தன் நிலைமையை அவளிடம் விளக்கி சொன்னார். தனது தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் ஏற்றிருப்பதையும், இந்தப்பிறவியில் தனக்கு திருமணம் என்ற ஒன்று இல்லை என்றும் அழுத்தமாக சொன்னார். அம்பா பிடிவாதம் செய்தாள்.இருந்தாலும், அவளது வாதம் எடுபடாததால் தந்தை காசிராஜனின் வீட்டிற்கே திரும்பிவிட்டாள். மகளின் நிலைமையைக் கண்டு காசிராஜன் நொந்துபோனான்.

அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னான்.மகளே! பீஷ்மர் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பது உண்மையே. ஆனால் அதை உடைக்கும் சக்தி இந்த உலகில் ஒரே ஒருவருக்குத்தான் இருக்கிறது. அவர்தான் பரசுராமர். பரசுராமரிடம் பீஷ்மர் வில்வித்தை கற்றார். குருவின் சொல்லை சீடனால் மறுக்கமுடியாது. மேலும் பரசுராமர் அரசகுலத்திற்கு எதிரானவர். அரசர்கள் ஏதேனும் தவறுசெய்தால் அவர்களை கொல்லவும் தயங்கமாட்டார். நீ பரசுராமரிடம் செல். அவரது பாதங்களில் விழுந்து கதறி அழு. உன் நிலைமையை எடுத்துச்சொல். நிச்சயமாக அவர் உனக்கு உதவுவார். சென்று வா, எனச்சொல்லி வழியனுப்பி வைத்தான்.

அம்பா பரசுராமரின் ஆஸ்ரமத்திற்கு சென்றாள். ஒரு அபலைப்பெண் தன் ஆதரவைத்தேடி வந்திருப்பதை அறிந்த பரசுராமர் அவளிடம் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். நிச்சயமாக அவளுக்கு உதவுவதாக வாக்களித்தார். அவளை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார்.பரசுராமர் தன்னை பார்க்க வருகிறார் என்பதை அறிந்த உடனேயே பீஷ்மர் அவர் வரும் வழியிலேயே சென்று வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குருவைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரை வெகுவாக விசாரித்தார்.சீடனே! இந்த அம்பாவுக்காக பரிந்துபேச நான் வந்திருக்கிறேன். இவளை நீ திருமணம் செய்ய முடியாது என சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.

எந்த ஆண் மகனால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளோ, அவனே அவளை ஏற்றுக்கொள்வதுதான் தர்மம். என் சீடனான நீ, தர்மத்தை மீறி நடக்கமாட்டாய் என நம்புகிறேன். உன் குரு என்ற முறையில் அம்பாவை திருமணம் செய்துகொள்ள கட்டளையிடுகிறேன். திருமணத்திற்கு ஏற்பாடு செய். நானே இருந்து நடத்தி வைக்கிறேன், என்றார்.குருவின் இந்த வார்த்தைகள் பீஷ்மரின் காதுகளில் அம்பெனப் பாய்ந்தது. அவர், குருவே! என் தந்தைக்காக நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ளேன். எனக்கு திருமணம் என்பதே கிடையாது. ஒரு வேளை நான் கங்கா மாதாவின் வயிற்றில் இன்னொரு முறை பிறந்தால் அது நடக்கலாம். நடக்காத ஒன்றுக்காக தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள், என்று பணிவோடு சொன்னார்.

பரசுராமருக்கு கோபம் வந்துவிட்டது. கண்களில் அனல் பறந்தது.உனக்கு நான் குருவாக இருந்து சொல்லிக்கொடுத்தது அனைத்தும் இந்த நிமிடத்தோடு வீணாகப் போயிற்று. குரு சொல் கேளாதவன் மனிதனே அல்ல. கடைசியாக சொல்கிறேன். இவளை மணக்க முடியுமா? முடியாதா? என்றார்.பீஷ்மர் மறுத்துவிட்டார்.

அப்படியானால் இந்த பிரச்னைக்கு போர் ஒன்றுதான் தீர்வு. நான் உன்மீது போர் தொடுக்கப் போகிறேன். நீ தோற்றுப்போனால் நான் சொன்னதை ஏற்கவேண்டும், என்று சொல்லியபடியே வில்லையும் அம்பையும் எடுத்தார் பரசுராமர்.