Mahabharatham story in Tamil 51 – மகாபாரதம் கதை பகுதி 51

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 51

காதயுதம் கீழே விழுந்தால் பீமனின் தலை நொறுங்கி விடும். அந்த சமயத்தில் பகவான் அங்கு வந்தார். கதாயுதத்தை கையில் தாங்கி பீமனைக் காப்பாற்றியதுடன், அவன் தந்த உணவையும் ஏற்றார். இப்போது, பழத்தை மரத்தில் ஒட்ட வைத்தாக வேண்டுமென்ற கட்டாய நிலையில், அவர்கள் கண்ணனையே நினைத்தனர். கண்ணனும் வந்துவிட்டான். கண்ணன் பாண்டவர்களின் மைத்துனர். அதாவது கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கையே குந்திதேவி. கண்ணனுக்கு அவள் அத்தை. அத்தையும், அத்தை பிள்ளைகளும் நாராயணனின் பக்தர்கள். உறவுக்காக அல்லாமல், தனது பக்தர்கள் என்ற முறையிலே, கண்ணன் அவர்களுக்கு உதவி செய்வான். கண்ணனை அவர்கள் வரவேற்றனர். திரவுபதி கண்ணனிடம், அண்ணா ! உன்னை அவசரமாக இங்கே அழைத்ததின் காரணம், அமித்ர மகரிஷிக்கு சொந்தமானது என அறியாமல், இதோ இந்த நெல்லிக்கனிக்கு நான் ஆசைப்பட்டேன். அர்ஜுனன் பறித்து தந்தார். ஏற்கனவே, கஷ்டத்தில் இருக்கும் நாங்கள், அவரது சாபத்தையும் பெற்றால் நிலைமை என்னாகுமோ என தெரியவில்லை. உன்னைச் சரணடைந்து விட்டோம். நீ தான் எங்களைக் காப்பாற்றவேண்டும் அனாதரட்சகனே! என்றாள்.

தங்கையே! என் கையில் என்ன இருக்கிறது! பறித்தவர்கள் யாரோ, அவர்கள் தான் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏற்கனவே, ஒருமுறை புடவை தந்து உதவியது போல், இப்போதும் இதை என்னால் ஒட்ட வைக்க முடியாது. இருந்தாலும், உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நீங்கள் எந்த வழியைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை ஒளிக்காமல் சொல்ல வேண்டும். பதில் சரியாக இருந்தால், இந்தக் கனி மரத்தில் ஒட்டிக்கொள்ளும், என்றார் கண்ணன். தர்மர் கண்ணனிடம், கிருஷ்ணா! பாவமும், பொய்யும், கோபமும், அசுரர் குலமும் தோற்க வேண்டும். நீ மட்டுமே எதிலும் ஜெயிக்க வேண்டும் என்று கருதுபவன் நான், என்றார். பீமன் தன் பதிலாக, கண்ணா! என் உயிரே போனாலும் சரி… பிறர் மனைவியை பெற்ற தாயாக நான் நேசிக்கிறேன். பிறர் சொத்துக்கு ஆசைப்படமாட்டேன். பிறரை ஏளனமாகப் பேசமாட்டேன். பிறருக்கு ஏற்படும் துன்பத்தை எனக்கு ஏற்பட்டதாகக் கருதுவேன், என்றான். அர்ஜுனன் கண்ணனிடம், மைத்துனா! உயிரை விட மானமே பெரிதெனக் கருதுபவன் நான். அதுவே பூவுலகில் பிறந்தவனுக்கு பெருமை தரும் என்றான்.

நகுலன் கண்ணபிரானிடம், பாஞ்சஜன்யத்தை முழக்கி உலகையே அதிரச் செய்பவனே! செல்வம், நல் லகுலம், அழகு, தர்மம் ஆகியவற்றை விட இவ்வுலகில் கல்வியே சிறந்ததென கருதுபவன் நான். கல்வியறியற்றவனுக்கு எல்லா வசதியும் இருந்தாலும், அவன் மணமற்ற மலருக்கு ஒப்பாவான் என்றான். இத்தனை பேர் பதில் சொல்லியும் பழம் மரத்தில் ஒட்டவில்லை. மனம் திக்திககென அடிக்க திரவுபதி கண்ணோரம் கண்ணீர்முட்ட நின்று கொண்டிருந்தாள். சாந்த சொரூபியும், சகலகலா வல்லவனுமான சகாதேவனின் பக்கம் திரும்பினார் கண்ணன். சக்ரதாரியே! ஒரு மனிதனுக்கு சத்தியமே தாய். ஞானமே தந்தை. தர்மமே சகோதரன், கருணையே நண்பன், சாந்தமே மனைவி, பொறுமையே பிள்ளை, இந்த ஆறுபேரையும் தவிர அவனுக்கு வேறு எந்த உறவுகளும் உதவி செய்யாது. இதேயே நான் கடைபிடிக்கிறேன் என்றான். பழம் பட்டெனப் போய் ஒட்டிக்கொண்டது.

சகாதேவா உன்னிலும் உயர்ந்தவர் இந்த பூமியில் இல்லை. எனது கருத்துக்களை உலகம் பின்பற்றினால் மனிதர்கள் உய்வடைவார்கள் என ஆசியருளிய கண்ணன், அவர்களிடம் விடை பெற்று துவாரகையை அடைந்தான். இப்படி, பாண்டவர்கள் பல சோதனைகளை அனுபவித்த நிலையில் காட்டில் நாட்டை — கயவர்களான துரியோதரன், துச்சாதனன், கர்ணன், சகுனி போன்றவர்கள் அஸ்தினாபுரத்திலே சதித்திட்டம் ஒன்றை தீட்டினர். காட்டில் — பாண்டவர்களை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்பதே அந்த திட்டம். இதை செயல்படுத்த காளமாமுனிவர் என்பவரை தங்கள் அவைக்கு வரவழைத்தனர். அவரிடம் தங்கள் திட்டத்தை சொன்னான் துரியோதரன். காளமாமுனிவர் அதிர்ந்து விட்டார். துரியோதனா! பாண்டவர்களைக் கொல்வதென்பது இயலாத காரியம். ஏனெனில், அவர்களுக்கு பகவான் கிருஷ்ணர் துணையாக இருக்கிறார். கிருஷ்ண பக்தர்களைக் கொல்வதென்பது நடக்கூடியதா? மேலும், இந்த விபரீத எண்ணம் உங்களுக்கு எதற்கு? வனவாசம் முடிந்து அவர்கள் வந்ததும், அவர்களுக்குரியதை அவர்களிடம் ஒப்படைப்பதே உங்களுக்கு உசிதமானது என்றார்.

அந்தக் கயவர்கள் முனிவரை விடவில்லை. முனிவரே! தாங்கள் பகைவரை அழிக்கும் அபிசாரயாகம் தெரிந்தவர். தங்களால் முடியாத செயலைத் நாங்கள் சொல்லவில்லை, என்று காலில் விழுந்து புலம்பினர். முனிவருக்கு புரிந்து விட்டது. இந்தக் கயவர்களால், தன் வாழ்க்கை முடியப் போகிறது என்று! நடப்பது நடக்கெட்டுமென யாகம் செய்ய ஒப்புக்கொண்டார். யாகம் துவங்கியது. அதிபயங்கரமான யாகம் அது. ஏராளமான உயிர்கள் யாக குண்டத்தில் பலியிடப்பட்டன. அப்போது, யாககுண்டத்தில் இருந்து ஒரு பயங்கர பூதம் கிளம்பியது. இந்த நேரத்தில், பாண்வர்களுக்கு காட்டில் ஒரு சோதனை நிகழ்ந்தது. நெல்லிக்கனி சமாச்சாரத்துக்கு பிறகு, அவர்கள் விஷ்ணுசித்தர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தனர். அங்கு வசித்த ஒரு முனிவரின் மகன் அணிந்திருந்த ஒரு புலித்தோலை, அவன் அருகில் வந்த மான் பறித்துச் சென்றது. அந்த காட்டுக்குள் பாய்ந்தோடியது.

புலித்தோலுடன் முனிபுத்திரனின் பூணூலும் சிக்கிக் கொண்டது. இதனால், அவன் அழுது புலம்பினான். தனது பூணூலையும், புலித்தோலையும் மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் ஓடி வந்து வேண்டினான். பாண்டவர்கள் மானைத்தேடி புறப்பட்டனர். ஓரிடத்தில், அந்த கபடமான், புலித்தோலுடன் நின்றது. அதன் மீது அர்ஜுனன் அம்பெய்தான். ஆனால், மான் மாயமாக மறைந்து விட்டது.