Mahabharatham story in Tamil 82 – மகாபாரதம் கதை பகுதி 82

மகாபாரதம் பகுதி – 82

கர்ணா! தவறாக நினைக்காதே! நீ சேனாதிபதியாகி விட்டால், போரின் பெரும் பொறுப்பு உனக்கு வந்துவிடும். என் அருகில் இருக்க உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்? என்னைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக் கிறேன், என்றான். கர்ணனும் சரியென ஒப்புக்கொண்டான். பின்பு துரோணச்சாரியாரை தனது படையின் சேனாதிபதியாக்கினான். பத்துநாட்கள் பீஷ்மர் போர் புரிந்து அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்பார்த்து படுத்திருந்த வேளையில், துரோணர் வில்லெடுத்தார். பதினோராம் நாள் போர் துவங்கியது. அன்று சகா
தேவனும், சகுனியும் மோதினர். சகாதேவனின் வில்லாற்றல் முன்பு சகுனியின் பலம் அடிபட்டு போனது. அவன் புறமுதுகிட்டு ஓடினான்.

அப்போது சிங்கக்கொடி கட்டிய தேரில் வந்த பீமன், துரியோதனனை அன்று அழித்தே தீருவதென்ற வைராக்கியத்துடன் போரிட்டான். ஆனால், பீமனின் வல்லமைக்கு முன்னால் நிற்க முடியாமல் போகவே, பின் வாங்கினான். இதைக் கண்டு நகுல, சகாதேவனின் தாய்மாமனும், சந்தர்ப்ப வசத்தால் துரியோதனின் படையில் சேர்ந்தவனுமான சல்லியன், பீமனை எதிர்க்க வந்தான். அப்போது, நகுலன் குறுக்கிட்டான். சல்லியரே! உமக்கு பீமனுடன் போராடும் ஆற்றல் இல்லை என்று தெரிந்தும் ஏன் மோதுகிறீர்? நீர் நல்ல ஆண்மகன் என்றால், முதலில் என்னுடன் மோதும். ஒரு மாத்திரைப் பொழுதில் உம்மை அழித்து விடுகிறேன், என்று வீராவேசம் பேசினான். நகுலன் தன்னை அவமானப்படுத்தி பேசியதால் உக்கிரமடைந்த சல்லியன், அவனுடன் மோதினான். நகுலன், ஐந்து அம்புகளை அவனுடைய மார்பில் பாய்ச்சினான். உயிர் தப்புவதற்காக சல்லியன் அங்கிருந்து ஓடிவிட்டான். இன்னொரு புறத்தில் கர்ணனும், விராடராஜனும் போரிட்டனர். ஓரிடத்தில் பீமனால் கொல்லப்பட்ட அசுரனின் சகோதரனான பகதத்தனும், பாஞ்சால தேச அரசன் யாகசேனனும் போரிட்டனர். பீஷ்மரை சாய்த்த சிகண்டி, சோமதத்தன் என்ற அரசனுடன் போரிட்டான். அன்றையப் போரில் முக்கிய வீரர்கள் மோதியதால், பூமியே கிடுகிடுத்தது.

ஓரிடத்தில் துரியோதனனின் மகன் லட்சணகுமாரனும், அபிமன்யுவும் மோதினர். அவர்கள் விட்ட அம்புகள் வானத்தையே மறைத்தது. ஒரு கட்டத்தில், அபிமன்யுவின் வில்லை லட்சணகுமாரன் முறித்து விட்டான். சற்றும் தைரியம் குறையாத அபிமன்யு, உடைந்த வில்லைக் கொண்டே லட்சணகுமாரனின் தேர்ச்சாரதியை ஒரே அடியில் வீழ்த்தி விட்டு, குதிரைகளையும் கொன்றான். பின்னர் தேரை அடித்து நொறுக்கி, லட்சண
குமாரனை சிறைபிடித்தான். அவனது தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.இதைக் கண்ட கர்ணன், தன் இடத்தில் இருந்து ஓடிவந்து, அபிமன்யுவை எதிர்த்தான். சிந்துநாட்டு அரசன் ஜயத்ரதனும் கர்ணனுடன் இணைந்தான். பெரிய வீரர்களெல்லாம் ஒரு சின்னஞ்சிறுவனை சூழ்ந்து கொண்டாலும், அபிமன்யு தன் கையில் இருந்த அம்புகளைச் சுழற்றி, அவர்களது நெற்றியில் ரத்தப் பொட்டு வைத்ததை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. கர்ணனே தோற்றோடி விட்டான் என்றால் அபிமன்யுவை எப்படி புகழ்வது? மீண்டும் லட்சணகுமாரனை இழுத்துக் கொண்டு முன்னேறும் போது, சல்லியன் அபிமன்யுவைத் தடுத்தான். அப்போது, பீமன் குறுக்கிட்டு சல்லியனை அடித்து விரட்டி விட்டான். அபிமன்யுவுக்கு வருத்தம்.

பெரியப்பா! தாங்கள் இப்படி செய்தால், என் வலிமையை நான் எப்படி வெளிக்காட்ட முடியும்! குருக்ஷேத்ர யுத்தத்தில் அபிமன்யுவுக்கு என்று ஒரு பெயர் இருந்தது என்பதை எதிர்கால சரித்திரம் எப்படி சொல்லும்? என்று தலை குனிந்தபடியே சென்றான். பீமன் அவனைத் தேற்றுவதற்காக தன்னோடு சேர்த்து அணைத்தான். இந்த உணர்ச்சிமிக்க கட்டத்தைப் பயன்படுத்தி, லட்சணகுமாரன் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவிட்டான். இப்படியாக பதினோராம் நாள் போரும், பாண்டவர்களுக்கு சாதகமாகவே முடிந்தது.அன்றிரவில், துரியோதனன் துõங்கவே இல்லை. தனது மகனை அபிமன்யு சிறைப்பிடித்து சென்ற காட்சி கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் துரோணரிடம் சென்று, வேதாச்சாரியாரே! இன்று என் மகன் போர்க்களத்தில் பட்ட அவமானத்தை நாளை தர்மர் அனுபவிக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாட்டை நீங்கள் தான் செய்ய வேண்டும், என்றான். துரோணர் சிரித்தார்.

துரியோதனா! குழந்தை மாதிரி பேசாதே. தருமரை தங்கள் கண்கள் போல் பீமனும், அர்ஜுனனும் போர்க்களத்தில் பாதுகாப்பதைக் கவனிக்கவில்லையா? ஒன்று செய். நீ அர்ஜுனனை சிறிது நேரம் மட்டும், தர்மரிடமிருந்து விலகிச் செல்லும்படி செய். தர்மனை நான் பிடித்துத் தருகிறேன், என்றார். உடனே பல நாட்டு ராஜாக்களும், துரியோதனனைத் திருப்திபடுத்தும் விதத்தில் பேசினர். ராஜாதி ராஜனே! நாங்கள் அந்த அர்ஜுனனை உணர்ச்சிவசப்படுத்தும் வார்த்தைகளால் அவன் இருக்கும் இடத்தில் இருந்து பிரித்து விடுகிறோம். பீமனுடன் ஒரு சாரார் மோதுகிறோம். இந்த குழப்பமான நிலையில், துரோணாச்சாரியார் அவரை சிறை பிடிக்கட்டும், என்றனர். துரியோதனனுக்கு முகஸ்துதி என்றால் விருப்பம். தனக்கு ஆதரவாகப் பேசிய அரசர்களுக்கு அவன் பொன்னும், பொருளும் வாரி வழங்கினான். இந்த சம்பவத்தை உளவு பார்த்த பாண்டவர் படை ஒற்றர்கள், இதை தர்மரிடம் சொல்லி விட்டனர். பன்னிரெண்டாம் போருக்கு தயாரான தர்மர் சுதாரித்து விட்டார். துரோணரின் பிடியில் சிக்கவும் கூடாது. அதே நேரம் துரோணர் ஒருஅந்தணர் என்பதால் அவரைக் கொல்லவும் கூடாது. இந்த இக்கட்டான நிலையை சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் புகுந்தார். அப்போது சில அரசர்கள், அர்ஜுனின் வீரத்தைப் பழித்துப் பேசினார்கள். ஏ அர்ஜுனா! மிகப் பெரிய வில்லாளி என்கிறாயே! இதோ! என் சிறுவில்லுக்கு பதில் சொல் பார்க்கலாம், என ஏளனமாகச் சொல்லி சிரித்தார்கள். அவர்களின் கேலி மொழி கேட்டு உணர்ச்சிவசப்பட்ட அர்ஜுனன், தர்மரை விட்டு விட்டு அவர்களை நோக்கிப் பாய்ந்தான். இதற்காகத்தானே காத்திருந்தார் துரோணாச்சாரியார்?