Mahabharatham story in Tamil 98 – மகாபாரதம் கதை பகுதி 98

மகாபாரதம் பகுதி-98

அவன் சல்லி யனிடம், சல்லியா! இகழ்ந்து பேசாதே! இப்போது பார் என் வலிமையை! என் ஒரே பாணத்தால் பீமன் மட்டுமல்ல, அர்ஜுனனையும் சேர்த்து அழிப்பேன், என்றான் வீரத்துடன். ஆனால், சல்லியன் சொன்னதே நடந்தது. பீமன் தனது தேரில் கர்ணன் முன்னால் வந்து நின்றான். அவனது பாணங்கள் கர்ணனை காயப்படுத்தின. கர்ணன் மயங்கி விழுந்து விட்டான். பின்னர், சல்லியன் தான் அவனுக்கு மயக்கம் தெளிவிக்க வேண்டியதாயிற்று. மயக்கம் தெளிந்து எழுந்த கர்ணன், பீமனைச் சுற்றி நின்ற அரசர்களை அம்பெய்து கொன்றான். இதனால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பீமன் பின்வாங்கினான். பீமனின் நிலையைக் கண்ட கிருஷ்ணர், தேரை கர்ணன் அருகே ஓட்டினார். இப்போது அர்ஜுனன், கர்ணன் மீது பாணங்களைப் பொழிந்தான். அஸ்வத்தாமன் கர்ணனுக்கு உதவியாக வந்தான். இருவருமாக கிருஷ்ணர் மீதும், அர்ஜுனர் மீதும் பதில் பாணங்களைத் தொடுத்தனர். அஸ்வத்தாமனின் பாணங்களுக்கு அர்ஜுனனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் சோர்வடைந்தான். இதைக் கண்ட கிருஷ்ணர், அர்ஜுனா! அஸ்வத்தாமனின் பாணங்களுக்கு கலங்காதே. அவனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியாது என்பது நிஜமே. ஆனால், அவனும் தோற்கடிக்கத் தக்கவன் தான்! அவனது மார்பை குறிவைத்து அம்புகளை விடு, என்றார். கிருஷ்ணர் சொல்லி முடிப்பதற்குள், அர்ஜுனன் தன்னிடமிருந்த சக்திவாய்ந்த சந்திரபாணத்தை அவன் மீது எய்ய, அஸ்வத்தாமன் மயங்கிச் சாய்ந்தான். இதைப் பார்த்த துச்சாதனன் அவனைக் காப்பாற்றி ஒரு தேரில் ஏற்றிச்சென்று விட்டான். அவனுக்கு மயக்கம் தெளிந்ததும், மீண்டும் கர்ணனின் அருகில் வந்து போர் செய்தான்.

இது ஒருபுறம் நடக்க, பீமன் தன் சபதத்தை நிறைவேற்ற துச்சாதனன் அருகில் சென்றான். துச்சாதனா! நீ பெரும் வீரன்! அன்றைய தினம் சபையிலே நீ ஒரு பெண்ணின் துயிலை உரிந்து வீரத்தைக் காட்டினாயே! அந்த வீரத்தை இன்றும் இந்த உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பராக்கிரமம் மிக்க உன்னுடன் போரிடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அநேகமாக, திரவுபதி இன்று தன் கூந்தலை முடிந்து விடுவாள் என்றே எண்ணுகிறேன். இன்று நீ; நாளை துரியோதனன். இருவரையும் கொன்று விடுவேன், என்று எக்காளமாகப் பேசி சிரித்தான்.
துச்சாதனன் பதிலுக்கு ஏதும் சொல்லவில்லை. அமைதியாக நின்ற அவன் அருகில் கவுரவ சகோதரர்கள் ஒன்பது பேர் வந்து நின்றனர். அவர்கள் ஒன்பது பேரையும் பாணம் எய்து கொன்றான் பீமன். இதனால், ஆத்திரமடைந்த துச்சாதனன் பீமனுடன் கடுமையாகப் போரிட்டான். இரண்டு மலைகள் மோதியது போல் இருந்தது. மிக நீண்டநேரம் போர் நீடித்தது. ஒரு கட்டத்தில், துச்சாதனனின் கழுத்தை ஒடித்து அவனது முதுகுப்புறமாக திருப்பிய பீமன், அவனது தொடைகளைப் பிடித்து இழுத்து துண்டித்தான். ரத்தம் வழிய குற்றுயிராக கிடந்த அவனது கைவிரல்களை பிடித்த அவன், இந்த விரல்கள் தானே என் திரவுபதியைத் தொட்டன, என்றவாறே அவற்றை ஒடித்து தள்ளினான். பெண் பாவம் பொல்லாதது. பெண்களை அவர்களின் விருப்பமின்றி யார் ஒருவன் தொடுகிறானோ, அவர்களுக்கெல்லாம் இதுதான் கதி. கொலைப் பாவமான பிரம்மஹத்தி தோஷத்துக்கு கூட விடிவு கிடைத்து விடும். ஆனால், ஒரு பெண்ணை இம்சைப்படுத்துபவனுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பிராயச் சித்தம் கிடையாது.

அது துச்சாதனன் விஷயத்தில் உண்மையானது. அத்தோடு விட்டானா பீமன்! வெறி அவனது தலைக்கு ஏறியது. அவனது வயிற்றைக் கிழித்து குடலை உருவினான். பின்னர் அலக்காகத் துõக்கி, அவனது ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்து விட்டான். அந்தக்காட்சி, இரணியனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தி போல இருந்தது. என்ன தான் கொடுமைக்காரன் என்றாலும், ஒருவனை இந்தளவுக்கு இம்சைப்படுத்திக் கொல்வது என்பது போர்க்களத்தில் நின்றவர்களுக்கே பிடிக்கவில்லை. அவர்கள் கண்ணீர் வடித்தனர். இதைப் பார்த்த கிருஷ்ணர் பீமனிடம், பீமா! துச்சாதனனைக் கொன்றது சரி. ஆனால், ரத்தம் குடிக்கக்கூடாது, என்று கடுமையாகச் சொன்னதும், அவனது உடலை கீழே போட்டுவிட்டு சென்ற பீமன், தர்மரிடம் அதைச் சொல்லி ஆனந்தப்பட்டான். துச்சாதனனின் மரணம், கவுரவர் படைத் தலைவனான கர்ணனை மிகவும் பாதித்து விட்டது. அவன் அயர்ச்சியுடன் நின்றான். பின்னர், சல்லியனின் வார்த்தைகளால் சுதாரித்த அவன் பாண்டவர் படையுடன் கடுமையாக மோதினான். ஆனால், அர்ஜுனன் கர்ணனின் மகனான விருஷசேனனை அந்த சமயத்தில் கொன்று விட்டான். இதனால், கர்ணன் மீண்டும் மூர்ச்சித்து விழுந்தான். சல்லியன் அவனுக்கு மயக்கம் தெளிவித்து, ஆறுதல் வார்த்தைகள் சொன்னான். இந்த சமயத்தில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. துரோணரின் மகன் அஸ்வத்தாமன் துரியோதனனிடம் சென்றான். மகாராஜா! நீங்களும், தருமரும் தொடங்கிய இந்தப்போர் 17 நாட்களாகியும் முடிந்தபாடில்லை. என் தந்தை மட்டுமின்றி, பீஷ்மர் போன்ற மகாத்மாக்களும், தங்கள் சகோதரர்களும், பலநாட்டு மன்னர்களும் அழிந்து போனார்கள். போனது போகட்டும். இப்போது எஞ்சியுள்ள உங்கள் தம்பிமார் களுடன் சென்று தர்மருடன் சமாதானம் செய்து, இருவரும் அவரவருக் குரிய பூமியை ஆண்டுவாருங்கள், என்று அறிவுரை சொன்னான். துரியோதனன் அதை ஏற்கவில்லை. அஸ்வத்தாமா! ஒன்று இந்தப் போரில் வெற்றி, அல்லது வீரமரணம். இதைத் தவிர எந்த சமாதானத் துக்கும் நான் தயாராக இல்லை, என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டான். பின்பு கர்ணனிடம் சென்று, மகனை இழந்து தவித்த அவனுக்கு ஆறுதல் சொன்னான். கர்ணன் ஆவேசத்துடன், துரியோதனா! இனியும் பொறுக்கமாட்டேன். அர்ஜுனனின் தலையை அறுக்கும் அம்பை போரில் பயன்படுத்தப் போகிறேன். அவனைக் கொல்லாமல் திரும்பமாட்டேன், என்று சொன்னான். அவனது தேர் அர்ஜுனனை நோக்கிப் பாய்ந்தது.