வரூதினீ ஏகாதசி
சித்திரை- வைகாசி மாதம் – கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.
சித்திரை- வைகாசி மாதம் – கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை வரூதினீ ஏகாதசியாக கொண்டாடுவர். வரூதினீ ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.
அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்,” ஹே பிரபு !, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை -வைகாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியம், அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம், விரத விதிமுறைகள், விரதத்தை அனுஷ்டிப்பதால் விளையும் நற்பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விஸ்தாரமாக வர்ணிக்க வேண்டுகிறேன்.” என்றான்.
ஸ்ரீ கிருஷ்ணர்,” ஹே குந்தி நந்தனா! சித்திரை- வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, வரூதினீ ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லா செளபாக்கியம் கிடைக்கும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதர்களின் சர்வ பாவங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினை பெறுவர். வரூதினீ என்றால் ஸேனை. எவ்வாறு ஸேனை யஜமானனைக் காக்குமோ அவ்வாறு இந்த வ்ரதத்தை அநுஷ்டிப்பவனை இந்த ஏகாதசி காக்குமாம். நெய் குடத்தை ஏறும் எரும்புபோல் நம்மிடம் பாபங்கள் மொய்த்துக் கொண்டுள்ளன. அவை நமக்கு எதிரி. நல்ல பலனை அடைய முடியாத வகையில் நம்மை எதிர்க்கின்றன. இந்த ஏகாதசியில் வ்ரதம் இருந்தால் எதிரியான பாவங்களை வென்று நமக்கு ஸெளபாக்யங்களை அளிக்கும் நாம் பிறவிக்கடலைத் தாண்ட உபயோகப்படுகிறது
பிரம்ம தேவனின் தலையைக் கிள்ளியதால் உண்டான பாபம் நீங்க சிவன் இந்த ஏகாதசியில் உபவாஸம் இருந்து வ்ரதத்தை நடத்தினார். அதனால் தான் ஸ்ரீமன்நாராயணன் ஸந்துஷ்டனாய் இவனது கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபால ஓட்டை அகற்றினான். இந்த ஏகாதசியில் வ்ரதம் இருந்தால் எல்லா தான பலனையும் அடையலாம். மேலும் இந்த ஏகாதசியில் சிறியதான தானம் செய்தாலும் பெரிய புண்யத்தைக் கொடுக்கும். இதில் செய்யும் தானம் ஆலமரத்தின் விதைக்கு ஒப்பானது. அது எவ்வாறு பெரிய மரமாக ஆகிவிடுமோ அது போல் இதுவும் உயர்ந்த புண்யமாக மாறி அளவற்ற இன்பத்தை அளிக்கும்.
வரூதினீ ஏகாதசியின் புண்ணியபலனின் பிரபாவத்தால் ராஜா மாந்தாதா, ரிஷி சௌபாரி ,ஸ்வர்க்கலோகப் பிராப்தியை பெற்றார்கள். இஷ்வாகு அரச பரம்பரையில் வந்த மஹாராஜா தந்துமாரா, சிவபெருமானின் சாபத்தால் தான் பெற்ற குஷ்டரோகத்திலிருந்து விடுதலை பெற்று, இவ்விரத மேன்மையால் ஸ்வர்க்க லோகப் பிராப்தியும் பெற்றார்.
வரூதினீ ஏகாதசி விரத புண்ணியபலன், பத்தாயிரம் (10,000) வருடங்கள் தவம் செய்வதால் கிடைக்கப் பெறும் புண்ணியத்திற்கு இணையானதாகும். இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய பலன், குருக்ஷேத்ர பூமியில் சூரிய கிரஹண காலத்தில் சொர்ண (தங்கம்) தானம் ஒரு முறையாவது செய்வதால் கிடைக்கப் பெறும் புண்ணியத்திற்கு சமமானதாகும். உத்தமமான இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால், மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவித்துடன்,முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர்.
“ஹே ராஜன் ! இவ் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், இவ்வுலகில் சுக போகங்களுடன் வாழ்வதுடன், இறுதியில் முக்தியும் பெறுவர். சாஸ்திரங்களில், குதிரை(அஸ்வ) தானத்தை விட யானை(கஜ) தானம் மேலானது எனவும், யானை தானத்தை விட, பூமி தானம் மேலானது எனவும், பூமி தானத்தை விட, தில (எள்) தானம், மேலானது எனவும், தில தானத்தை விட சொர்ணதானம் பன்மடங்கு மேலானது எனவும், தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும் போது கூறியுள்ளனர். மேலும், சொர்ண தானத்தை விட அன்னதானம் மேன்மையானதும், சிரேஷ்டமானதும் ஆகும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை. அன்னதானம் பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
தகுதியானவருக்கு கன்யாதானம் செய்து கொடுப்பது, அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும், அறியாமையில் உழல்பவருக்கு ஜீவன் முக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதை விட மேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர்.
வித்யா தானப் பலனை அளிக்கக்கூடியது வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், கோதானம் அன்னதானத்திற்கு இணையானது என்று கூறியுள்ளார். கன்யாதானம், அன்னதானம், கோதானம் மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்த புண்ணிய பலனை, ஒருவர் வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர்.
பேராசை, சோம்பல், வேலை செய்ய உடல் வணங்காமை இவை காரணமாக, தன் மகளின் செல்வத்தில் வாழ்பவர், செல்வத்தை அனுபவிப்பவர் பிரளய காலம் வரை நரகத்தில் தண்டனை அனுபவிப்பதுடன், மறு ஜென்மத்தில் இழி பிறப்பெடுத்து கஷ்டமும், துக்கமும் அனுபவிப்பர். ஒருவர் அன்புடனும், பாசத்துடனும் ஹோம அக்னி வளர்த்து, இறைவணக்கத்துடன், மந்திரங்கள் ஒலிக்க, அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம் செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக் கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது. அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணிய பலனை, வருதினீ ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம்.
வருதினீ ஏகாதசி இரவு முழுவதும் கண் விழித்து, பாகவதம், புராணங்கள் ஸ்ரவணம் செய்தல், பஜனை, கீர்த்தனை என்று இருத்தல் வேண்டும்.
ஹே ராஜன்!, எவர் ஒருவர் ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ, அவருக்கு ஸ்வர்க்கலோகப் பிராப்தி கிட்டும். மனிதர்கள் பாவவினைகளைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். வருதினீ ஏகாதசி விரத மஹாத்மியத்தை ஸ்ரவணம் செய்வதால் ஒரு ஆயிரம் கோதானம் (பசு) செய்த புண்ணியம் கிட்டப் பெறும். இவ் ஏகாதசி விரத புண்ணியமானது புனித நதியான கங்கையில் நீராடுவதால் கிட்டப் பெறும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானதாகும்.
கதாசாரம்
தன் உணர்ச்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் ஆதாரமாகும். அனைத்துவித நடவடிக்கைகளிலும் சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல், சுகத்திற்கும் சௌபாக்கியத்திற்கும் வளர்ச்சியை கொடுக்கும். சுயக்கட்டுப்பாடு இல்லையெனில் அவர் மூலம் செய்யப்படும் தவம், தியாகம், பக்தி, பூஜை இவை யாவும் சக்தியை இழக்கும்.
பிரமன் தலையைக் கொய்தது (காசி காண்டத்தில்): சிவபெருமானுக்கு இருப்பது போலவே, ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதனால் சிவபெருமானுக்குத் தான் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்று பிரம்மா கர்வம் கொண்டிருந்தார். இந்த ஐந்து முகத்துடன் அடிக்கடி கயிலையம்பதிக்கு வந்து போய்க் கொண்டிருக்க, சில சமயங்களில் கயிலைக்கு வருவது சிவனா அல்லது பிரம்மாவா என பார்வதி தேவி குழப்பமடைந்தார். சிவபெருமான் என நினைத்து பார்வதி தேவி பரபரப்புடன் வணங்குகையில், பிரம்மா ஆணவத்துடன் சிரித்துக் கொண்டே செல்வது குறித்து பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையிட்டார். பிரம்மாவின் செருக்கை சிவபெருமான் அறிந்தவராதலால் அவர் தானே திருந்தட்டும் என்று பொறுமை காத்தார். அவ்வாறிக்கையில் மேரு மலையில் திருமாலிடம் பிரம்மா தன்னை சிவபெருமான் என கருதி பார்வதி தேவி எழுந்து மரியாதையுடன் வணங்கியதைத் தெரிவித்து கேலி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த தேவர்களும், முனிவர்களும் அவர்களைச் சூழ்ந்து பரப்பிரம்மன் என்பது யார்? என்று கேட்டனர். அதற்கு பிரம்மா, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியே என்னைக் கண்டு எழுந்து வணங்குகிறார்கள் என்றால் பரப்பிரம்மம் நானாகத்தான் இருக்க முடியும் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? மேலும் பரப்பிரம்மனை என்பதில் என் பெயர் பிரம்மா இருப்பது நானே பரப்பிரம்மன் என்பதைப் புலப்படுத்தவில்லையா? என்றார்.
ஆனால் பிரம்மாவோ, என்னைப்போலவே ஐந்து தலைகள் கொண்டிருக்கும் சிவபெருமான் என்னைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர். ஆகவே நான்தான் பரம்பொருள் என்று மார்தட்டினார். ஆணவத்தின் காரணமாகத் தன்னை இகழ்ந்த பிரம்மாவுக்குத் தகுந்த புத்தி புகட்டிட பைரவக் கடவுளை அந்த இடத்திலே தோன்றச் செய்தார். தன்னுடைய நடுச்சிரத்தின் மூலம் சிவபெருமானை இகழ்ந்து பேசிய பிரம்மனின் நடுச்சிரம் பைரவரின் நக நுனியால் கிள்ளி எடுக்கப்பட்டது.
தலை அறுபட்ட பிறகுதான் பிரம்மாவுக்குப் புத்தி வந்தது. அகந்தையால் தான் பேசிய பேச்சினை மன்னிக்குமாறு சிவனிடம் கோரினான். தன்னுடைய ஆணவத்தை அடக்கியதற்குச் சான்றாக தன்னுடைய ஐந்தாவது தலை அவருடைய கையிலேயே இருக்கட்டும் என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். ஐந்து முகங்களைக் கொண்டிருந்த பிரம்மா இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே அன்று முதல் நான்முகன் என்று அழைக்கப்பட்டார். பிரம்மனின் தலை பைரவரால் கிள்ளி எறியப்பட்டதால் அவருக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. பிரம்மனின் தலை பைரவரின் கையில் ஒட்டிக்கொள்கிறது. பிரம்மனின் கபாலம் சுமந்த கையினராய் பைரவர் உலகம் முழுவதும் அலைந்து திரிந்து நர்மதா நதிக்கரைக்கு வருகின்றார். பின்னர் அங்குள்ள முனிவர்களை வணங்கி, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகும் வழியைக் கேட்க, அவர்களும் நீங்கள் பிரம்ம தேவனின் தலையைக் கிள்ளியதால் உண்டான பாபம் நீங்க வரூதினீ ஏகாதசியில் உபவாஸம் இருக்க கோரினார். அதனால் தான் ஸ்ரீமன்நாராயணன் ஸந்துஷ்டனாய் பைரவர் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபால ஓட்டை அகற்றினான். அதனால் காசிக்குச் சென்றால் உங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறுகின்றனர். அதன்பிறகு காலபைரவராகி காசியிலேயே நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார்