ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மதியம் 1 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளி பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தை அடைகிறார்.
அப்போது பொதுமக்கள் அரையர் சேவையுடன் நம்பெருமாளை தரிசிக்க முடியும். இரவு 9.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். வருகிற 26-ந்தேதி வரை நம்பெருமாள் தினமும் இதேபோல் புறப்பாடாகி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
24-ந்தேதி திருக்கைத்தல சேவை என்பதால் மாலை 3 மணிக்கும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி கண்டருள்வதற்காக மாலை 4.30 மணிக்கும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். ராப்பத்து உற்சவத்தின்போது இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும்.
24-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், 26-ந்தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 27-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 25-ந்தேதி வேடுபறி நிகழ்ச்சியன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.