ஆதி பராசக்தி துதி
அகணித தாரா கணங்களின் நடுவே
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க
ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள் (அகணித தாரா)
அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள்
அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா)
அகிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா)
கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் பொருளைக்
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம் நானிதோ என்று தோன்றும்
ஞான பரமேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா)
இதயவீணை எழும் இன்னிசை அவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே
நாற்பத்து மூன்று கோண நாகமணி மண்டபத்தில்
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா)
அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக் காட்படுவாள் ஆனந்த கல்யாணிஅவள்
அருட்கவி மாலைபாடும் அகத்தியன் அகத்திலே
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகின்றாள்
ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்
அகஸ்திய ஸித்தேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா)