ஆடிவெள்ளி நாளன்று | Aadi Velli Naalandru Amma
ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்!
தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்
கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றது
நாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்!
நெருக்கி நின்ற பக்தர்குழாம் நெட்டித் தள்ளியது
ஒருவர் மீது ஒருவர்மோதி அமைதி குலைந்தது
விருப்புடனே நின்னைக் காண என்னால் முடியாமல்
வெறுப்புடனே விலகிவந்து வியர்வை துடைத்தேன்!
காணவந்த என்னை நீயும் மறுத்தல் நியாயமா
மோனமொழி பேசிநிற்கும் தாயே சொல்லம்மா
நாணமில்லையோ உனக்கு இந்தச் செய்கையால்
ஏனோ என்னைநீயும் புலம்பிடவே செய்தாய்!
என்றெல்லாம் நினைத்தபடி சன்னதி நோக்கினேன்
முன்நின்ற மக்கள்தலை அதனை மறைத்தது
என்னெதிரே அப்போதொரு குழந்தை வந்தது
என்னைப் பார்த்துச் சிரித்தபடி அருகில் நின்றது!
பெண்ணழகைப் பார்த்துநின்றேன் கண்நிறைந்தது
வண்ணமுக வடிவினிலே உளம் நிறைந்தது
மீன்விழிகள் தேனிதழ்கள் பட்டுக்கன்னம்
பால்போலும் சிரிப்பலைகள் பட்டுப்பாவாடை!
அலைபாயும் கூந்தலையே அளவாக முடிந்திருந்து
விலையில்லாப் பொன்நகைகள் கைகளிலே அணிந்திருந்து
பிஞ்சுமலர்ப்பாதங்களில் கொஞ்சுகின்ற கொலுசணிந்து
வட்டநிறைப் பொட்டிட்டு கைகட்டி எதிரில்நின்றது!
தேவமகள் இவள்தானோ என்றொருகணம் நினைத்திட்டேன்
பூவினைப்போல் பொலிந்தவளைப் பார்த்தே சிரித்திட்டேன்
‘சாமி பாக்கப் போகலியா’வென எனைப் பார்த்துக் கேடது
‘கூட்டம் சற்று குறைந்தபின்னர்..’ என இழுத்தேன்! பெண் சிரித்தாள்!
‘உள்ளேயா? வெளியிலா?’ என்றவளின் சொல்கேட்டு அதிர்ந்துபோனேன்
‘என்னவிங்கு சொல்லுகிறாய்?’ என ஒன்றும் புரியாமல் கேட்டேன்
‘கூட்டமிங்கு குறையாது! நீதான் குறையணும்’ என்று மேலும் சொன்னாள்
‘நானெப்படிக் குறைவது?’ மீண்டும் அவளைப் பார்த்துக் கேட்டேன்!
‘பார்க்கணும்னு ஆசைவைச்சா, கூட்டமெல்லாம் ஒண்ணுமில்ல!
நோக்கமிங்கு ஒண்ணானா பாக்கறதும் ஒண்ணாயிடும்!
சேர்த்ததெல்லாம் தொலைச்சுபுட்டு சீக்கிரமா வந்துசேரு!’
சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்தாள்! விக்கித்து நின்றேன் நான்!
எனைத் தேற்ற என்னன்னை என்முன்னே வந்தாளா?
எனைக் காட்டி எனைக் காட்ட என்னையேதான் தந்தாளா?
எனைக் குறையச் சொல்லியிவள் என்னவிங்கு சொல்லிப்போனாள்?
பிறர்குறையைப் பார்ப்பதிங்கு உனக்கெதுக்கு என்றாளா?
ஆசைகளைத் தொலைத்துவிட்டு நேசமெல்லாம் அவளில்வைத்து
வேசமேதும் போடாமல் வீம்பெதுவும் செய்யாமல்
அசையாத மனத்துள்ளே அவளை வைத்திருந்தால்
பூசனைகள் தேவையில்லை தேவியவள் வந்திருப்பாள்!
ஆடிவெள்ளி நன்நாளில் அன்னையவள் அருள்வேண்டி
ஆலயத்துள் செல்லுகையில் அனைத்தையுமே மறந்திருப்போம்
அடிமனத்தில் அன்போடு அனுதினமும் நினைத்திருந்தால்
ஆலயமும் செல்லவேண்டா! அன்னையிவள் ஓடிவருவாள்!
படித்ததெல்லாம் பயிற்சியினால் மட்டுமே பயனாகும்
படித்ததுவும் பிடித்ததுவும் இத்தோடு போதுமிங்கு
படித்ததெல்லாம் பயின்றிடுவோம் நலிந்தவரை வாழவைப்போம்
அவரெல்லாம் சிரிக்கையிலே அங்கேநாம் அன்னையைக் காண்போம்!
ஏதோ ஒன்று புரிந்ததுபோல் இருந்தது
தலையைத் திருப்பி சன்னதியைப் பார்த்தேன்
கூட்டம் குறைந்திருந்தது! கர்ப்பக்கிரகம் தெரிந்தது!
அன்னை சிரித்திருந்தாள்! அன்போடு எனைப்பார்த்து!