குன்றுதோறாடல் திருமுருகாற்றுப்படை | Kundruthoradal Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும்

குன்றுதோறாடல்

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)

அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறற (195)

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் (200)

முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண்மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உ டீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205)

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டனன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் (210)

கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குரும்பெறிக் கொண்ட நறுந்தண்சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215)

மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று.