Thayumanavar Songs – பாயப்புலி

  1. பாயப்புலி

பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில
மாயைப் பெரும்படைக்கேஇலக் காவெனை வைத்தனையோ
நீயெப் படிவகுத் தாலுநன் றேநின் பெருங்கருணை
தாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரமே. 1.

தற்பர மாஞ்சிற் பரமாகி மன்றந் தனில்நடித்து
நிற்பர்அம் போருகன் மால்பணி நீதரென் நெஞ்சகமாங்
கற்பரந் தாங்குக் கரைந்திட வானொத்த காட்சிநல்கும்
பொற்பர மாயென் வினைக்கருந் தாதைப் பொடிசெய்ததே. 2.

செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே
கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி
உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே. 3.

அத்தனைச் சிற்றம் பலவனை யென்னுயி ராகிநின்ற
சுத்தனைச் சுத்த வெளியா னவனைச் சுகவடிவாம்
நித்தனை நித்த நிராதார மாகிய நின்மலனை
எத்தனை நாள்செல்லு மோமன மேகண் டிறைஞ்சுதற்கே. 4.

கண்டா ருளத்தினிற் காலூன்றிப் பெய்யுங் கருணைமுகில்
அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனிதன்னைக்
கொண்டாடி னார்முனங் கூத்தாடும் மத்தன்றன்கோலமெல்லாம்
விண்டாலம் மாவொன்றுங் காணாது வெட்ட வெறுவெளியே. 5.

வெளியான நீயென் மனவெளி யூடு விரவின்ஐயா
ஒளியாருங் கண்ணும் இரவியும் போல்நின் றுலாவுவன்காண்
அளியாருங் கொன்றைச் சடையாட அம்புலி யாடக்கங்கைத்
துளியாட மன்றுள் நடமாடும் முக்கட் சுடர்க்கொழுந்தே. 6.

கொழுந்தா துறைமலர்க் கோதையர் மோகக் குரைகடலில்
அழுந்தாத வண்ணம்நின் பாதப் புணைதந் தருள்வதென்றோ
எழுந்தா தரவுசெய் எம்பெரு மான்என் றிறைஞ்சிவிண்ணோர்
தொழுந்தா தையேவெண் பொடிபூத்த மேனிச் சுகப்பொருளே. 7.

சுகமாகு ஞானந் திருமேனி யாநல்ல தொண்டர்தங்கள்
அகமேபொற் கோயில் எனமகிழ்ந் தேமன்றுள் ஆடியகற்
பகமேஉன் பொன்னடி நீழல்கண் டாலன்றிப் பாவிக்கிந்தச்
செகமாயை யான அருங்கோடை நீங்குந் திறமிலையே. 8.

நீங்கா துயிருக் குயிராகி நின்ற நினையறிந்தே
தூங்காமல் தூங்கின்அல் லாதே எனக்குச் சுகமும்உண்டோ
ஓங்கார மாம்ஐந் தெழுத்தாற் புவனத்தை உண்டுபண்ணிப்
பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே. 9.

சிவமாதி நான்முகக் கோவந்த மாமறை செப்புகின்ற
நவமாய் இலக்கிய ஒன்றே இரண்டற்ற நன்மைபெறா
தவமே தரும்ஐம் புலப்பொறிக் கேயென் னறிவுபொல்லாப்
பவமே விளைக்கவென் றோவெளி மானெனப் பாய்ந்ததுவே. 10.

ஆறொத் திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய்
வீறிப் பரந்த பரமான ஆனந்த வெள்ளமொன்று
தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர் சித்தத்திலே
ஊறிப் பரந்தண்ட கோடியெல் லாம்நின் றுலாவியதே. 11.

நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறொரு நாட்டமின்றிக்
கிடக்கினுஞ் செவ்வி திருக்கினும் நல்லருட் கேள்வியிலே
தொடக்கும்என் நெஞ்சம் மனமற்ற பூரணத் தொட்டிக்குளே
முடக்குவன் யான்பர மானந்த நித்திரை மூடிடுமே. 12.

எண்ணாத தெண்ணிய நெஞ்சே துயரொழி என்னிரண்டு
கண்ணே உறங்குக என்னாணை முக்கட் கருணைப்பிரான்
தண்ணார் கருணை மவுனத்தி னால்முத்தி சாதிக்கலாம்
நண்ணாத தொன்றில்லை யெல்லா நலமு நமக்குளவே. 13.

நானென் றொருமுத லுண்டென்ற நான்தலை நாணஎன்னுள்
தானென் றொருமுதல் பூரண மாகத் தலைப்பட்டொப்பில்
ஆனந்தந் தந்தென் அறிவையெல் லாமுண் டவசநல்கி
மோனந் தனைவிளைந் தால்இனி யாதுமொழிகுவதே. 14.

தானந் தவஞ்சற்றும் இல்லாத நான்உண்மை தானறிந்து
மோனம் பொருளெனக் கண்டிடச் சற்குரு மோனனுமாய்த்
தீனன் தனக்கிங் கிரங்கினை யேஇனிச் சிந்தைக்கென்றும்
ஆனந்தந் தானல்ல வோபர மேசச்சி தானந்தமே. 15.

எனக்கோர் சுதந்திர மில்லையப் பாஎனக் கெய்ப்பில்வைப்பாய்
மனக்கோ தகற்றும் பரம்பொரு ளேஎன்னை வாழ்வித்திட
நினக்கே பரம்நின்னை நீங்காத பூரண நீள்கருணை
தனக்கே பரமினிச் சும்மா விருக்கத் தகுமென்றுமே. 16.

இடம்பெறு வீடும்மின் னார்செய் சகமும் இருநிதியும்
உடம்பைவிட் டாருயிர் போம்போது கூடி உடன்வருமோ
மடம்பெறு மாயை மனமே இனியிங்கு வாமவுனி
திடம்பெற வைத்த மவுனஞ் சகாயந் தெரிந்துகொள்ளே. 17.

நாற்றச் சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையைச்
சோற்றுப் பசையினை மும்மல பாண்டத் தொடக்கறையை
ஆற்றுப் பெருக்கன்ன கன்மப் பெருக்கை அடர்கிருமிச்
சேற்றைத் துணையென்ற நாய்க்குமுண் டோகதி சேர்வதுவே. 18.

பொய்யா ருலக நிலையல்ல கானற் புனலெனவே
மெய்யா அறிந்தென்ன என்னால் இதனை விடப்படுமோ
கையால் மவுனந் தெரிந்தேகல் லால்நிழற் கண்ணிருந்த
ஐயாஅப் பாஎன் அரசேமுக் கண்ணுடை ஆரமுதே. 19.

ஆரா அமுதென மோனம் வகித்துக்கல் லால்நிழற்கீழ்ப்
பேராது நால்வ ருடன்வாழ்முக் கண்ணுடைப் பேரரசே
நீரா யுருகவுள் ளன்புதந் தேசுக நிட்டையைநீ
தாரா விடின்என் பெருமூச்சுத் தானத் தனஞ்சயனே. 20.

வாயுண்டு வாழ்த்த மவுனஞ்செய் போது மவுனஅருள்
தாயுண்டு சேயென்ன என்னைப் புரக்கச் சதானந்தமாம்
நீயுண்டு நின்னைச் சரண்புக நானுண்டென் நெஞ்சம்ஐயா
தீயுண் டிருந்த மெழுகல வோகதி சேர்வதற்கே. 21.

கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச்
சொல்லால் துதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம்
எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன்
கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே. 22.

முன்னிலைச் சுட்டொழி நெஞ்சேநின் போதம் முளைக்கில்ஐயோ
பின்னிலைச் சன்மம் பிறக்குங்கண் டாயிந்தப் பேய்த்தனமேன்
தன்னிலை யேநில்லு தானே தனிச்சச்சி தானந்தமாம்
நன்னிலை வாய்க்கும்எண் சித்தியுங் காணும் நமதல்லவே. 23.

சொல்லால் மவுன மவுனமென் றேசொல்லிச் சொல்லிக்கொண்ட
தல்லால் மனமறப் பூரண நிட்டையி லாழ்ந்ததுண்டோ
கல்லாத மூடன் இனிஎன்செய் வேன்சகற் காரணமாம்
வல்லாள னான மவுன சதானந்த மாகடலே. 24.

ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள்மவுன
காரண மூலங்கல் லாலடிக் கேயுண்டு காணப்பெற்றால்
பாரணங் கோடு சுழல்நெஞ்ச மாகிய பாதரசம்
மாரண மாய்விடும் எண்சித்தி முத்தியும் வாய்ந்திடுமே. 25.

சித்த மவுனி வடபால் மவுனிநந் தீபகுண்ட
சுத்த மவுனி யெனுமூவ ருக்குந் தொழும்புசெய்து
சத்த மவுன முதல்மூன்று மவுனமுந் தான்படைத்தேன்
நித்த மவுனமல் லாலறி யேன்மற்றை நிட்டைகளே. 26.

கண்டேன் நினதருள் அவ்வரு ளாய்நின்று காண்பதெல்லாம்
உண்டே யதுவும் நினதாக்கி னேன்உவட் டாதஇனபம்
மொண்டே அருந்தி இளைப்பாறி னேன்நல்ல முத்திபெற்றுக்
கொண்டேன் பராபர மேயெனக் கேதுங் குறைவில்லையே. 27.

மேற்கொண்ட வாயுவுங் கீழ்ப்பட மூலத்து வெந்தழைச்
சூற்கொண்ட மேக மெனவூமை நின்று சொரிவதைஎன்
னாற்கண்ட தன்று மவுனோப தேசிய ளிக்கையினிப்
பாற்கண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே. 28.

சொல்லால் தொடர்பொரு ளால்தொட ராப்பரஞ் சோதிநின்னை
வல்லாளர் கண்ட வழிகண்டி லேன்சக மார்க்கத்திலுஞ்
செல்லாதென் சிந்தை நடுவே கிடந்து திகைத்துவிம்மி
அல்லான தும்பக லானதும் வாய்விட் டரற்றுவனே. 29.

அறியாத என்னை அறிவாயும் நீயென் றகம்புறமும்
பிறியா தறிவித்த பேரறி வாஞ்சுத்தப் பேரொளியோ
குறியாத ஆனந்தக் கோவோ அமுதருள் குண்டலியோ
சிறியேன் படுந்துயர் கண்டுகல் லால்நிழற் சேர்ந்ததுவே. 30.

எல்லாம் உதவும் உனையொன்றிற் பாவனை யேனுஞ்செய்து
புல்லா யினும்ஒரு பச்சிலை யாயினும் போட்டிறைஞ்சி
நில்லேன்நல் யோக நெறியுஞ்செ யேன்அருள் நீதியொன்றுங்
கல்லேன்எவ் வாறு பரமே பரகதி காண்பதுவே. 31.

ஒன்றுந் தெரிந்திட இல்லைஎன் னுள்ளத் தொருவஎனக்
கென்றுந் தெரிந்த இவைஅவை கேள்இர வும்பகலுங்
குன்றுங் குழியும் வனமும் மலையுங் குரைகடலும்
மன்றும் மனையும் மனமாதி தத்துவ மாயையுமே. 32.

பழுதுண்டு பாவையர் மோக விகாரப் பரவையிடை
விழுகின்ற பாவிக்குந் தன்தாள் புணையை வியந்தளித்தான்
தொழுகின்ற அன்பர் உளங்களி கூரத் துலங்குமன்றுள்
எழுகின்ற ஆனந்தக் கூத்தனென் கண்மணி யென்னப்பனே. 33.

அழுக்கார்ந்த நெஞ்சுடை யேனுக்கை யாநின் அருள்வழங்கின்
இழுக்காகு மென்றெண்ணி யோஇரங் காத இயல்புகண்டாய்
முழுக்காத லாகி விழிநீர் பெருக்கிய முத்தரெனுங்
குழுக்காண நின்று நடமாடுந் தில்லைக் கொழுஞ்சுடரே. 34.

ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண் டவர்செய்இந்த்ர
சாலம் படைத்துத் தளர்ந்தனை யேயென்றுந் தண்ணருள் கூர்
கோலம் படைத்துக்கல் லாலடிக் கீழ்வைகுங் கோவுக்கன்பாங்
காலம் படைக்கத் தவம்படை யாதென்கொல் கல்நெஞ்சமே. 35.

சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந் தோஎன் விதிவசமே. 36.

தினமே செலச்செல வாழ்நாளும் நீங்கச் செகத்திருள்சொப்
பனமே யெனவெளி கண்டே யிருக்கவும் பாசபந்த
இனமே துணையென் றிருந்தோம் நமன்வரின் என்செய்குவோம்
மனமே நம்போல வுண்டோசுத்த மூடரிவ் வையகத்தே. 37.

கடலெத் தனைமலை எத்தனை அத்தனை கன்மமதற்
குடலெத் தனையத் தனைகடல் நுண்மணல் ஒக்குமிந்தச்
சடலத்தை நான்விடு முன்னே யுனைவந்து சாரஇருட்
படலத்தை மாற்றப் படாதோ நிறைந்த பராபரமே. 38.

நினையும் நினைவும் நினையன்றி யில்லை நினைத்திடுங்கால்
வினையென் றொருமுதல் நின்னையல் லாது விளைவதுண்டோ
தனையுந் தெளிந்துன்னைச் சார்ந்தோர்க ளுள்ளச்செந் தாமரையாம்
மனையும்பொன் மன்றமும் நின்றாடுஞ் சோதி மணிவிளக்கே. 39.

உள்ளத் தையுமிங் கெனையுநின் கையினில் ஒப்புவித்தும்
கள்ளத்தைச் செய்யும் வினையால் வருந்தக் கணக்குமுண்டோ
பள்ளத்தின் வீழும் புனல்போற் படிந்துன் பரமஇன்ப
வெள்ளத்தின் மூழ்கினர்க் கேயெளி தாந்தில்லை வித்தகனே. 40.

கள்ளம் பொருந்தும் மடநெஞ்ச மேகொடுங் காலர்வந்தால்
உள்ளன் பவர்கட்குண் டோஇல்லை யேயுல கீன்றஅன்னை
வள்ளம் பொருந்து மலரடி காணமன் றாடும்இன்ப
வெள்ளச்செம் பாதப் புணையேயல் லாற்கதி வேறில்லையே. 41.

தன்மய மானசு பாவத்தில் மெள்ளத் தலைப்படுங்கால்
மின்மய மான சகம்யா துரைத்தென் வெளியில்உய்த்த
சின்மய முத்திரைக் கையேமெய் யாகத் தெளிந்தநெஞ்சே
நின்மயம் என்மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே. 42.

ஆரிங் கலையுஞ் சுருதியுங் காண்டற் கரியவுனைத்
தோயும் படிக்குக் கருணைசெய் வாய்சுக வான்பொருளே
தாயும் பிதாவுந் தமருங் குருவுந் தனிமுதலும்
நீயும் பரையுமென் றேயுணர்ந் தேனிது நிச்சயமே. 43.

அல்லும் பகலும் உனக்கே அபயம் அபயமென்று
சொல்லுஞ்சொ லின்னந் தெரிந்ததன் றோதுதிப் பார்கள்மனக்
கல்லுங் கரைக்கும் மவுனா உனது கருணைஎன்பால்
செல்லும் பொழுதல்ல வோசெல்லு வேனந்தச் சிற்சுகத்தே. 44.

எல்லாஞ் சிவன்செயல் என்றறிந் தாலவன் இன்னருளே
அல்லாற் புகலிடம் வேறுமுண் டோஅது வேநிலையா
நில்லாய் உன்னால்தமி யேற்குக் கதியுண்டிந் நீள்நிலத்தில்
பொல்லா மயக்கத்தி லாழ்ந்தாவ தென்ன புகல்நெஞ்சமே. 45.

ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகைபொங்குங்
களியே களிக்குங் கருத்தே கருத்தைக் கவளங்கொண்ட
வெளியே வெளியின் விளைசுக மேசுகர் வீறுகண்டுந்
தெளியேன் தெளிந்தவரைப் போற்றிடேன் என்ன செய்குவனே. 46.

மறக்கின்ற தன்மை இறத்தலொப் பாகும் மனமதொன்றில்
பிறக்கின்ற தன்மை பிறத்தலொப் பாகும்இப் பேய்ப்பிறவி
இருக்கின்ற எல்லைக் களவில்லை யேஇந்தச் சன்மஅல்லல்
துறக்கின்ற நாளெந்த நாள்பர மேநின் தொழும்பனுக்கே. 47.

காட்டிய அந்தக் கரணமும் மாயைஇக் காயமென்று
சூட்டிய கோலமும் நானா இயங்கத் துறையிதனுள்
நாட்டிய நான்றனக் கென்றோர் அறிவற்ற நான்இவற்றைக்
கூட்டிநின் றாட்டினை யேபர மேநல்ல கூத்திதுவே. 48.

பொல்லாத மாமர்க் கடமன மேஎனைப் போல்அடுத்த
எல்லாவற் றையும்பற்றிக் கொண்டனை யேயென்னை நின்மயமா
நில்லாய் அருள்வெளி நீநான்நிற் பேன்அருள் நிட்டையொரு
சொல்லாற் பதிந்து பரிபூர ணானந்தந் தோய்குவனே. 49.

வாராய்நெஞ் சேயுன்றன் துன்மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டிங்
காராய் அடிக்கடி சுற்றுகின் றாயுன் அவலமதிக்
கோரா யிரம்புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓகெடுவாய்
பாரா யுனைக்கொல்லு வேன்வெல்லு வேன்அருட் பாங்குகொண்டே. 50.

மாதத்தி லேயொரு திங்களுண் டாகி மடிவதைநின்
போதத்தி லேசற்றும் வைத்திலை யேவெறும் புன்மைநெஞ்சே
வேதத்தி லேதர்க்க வாதத்தி லேவிளங் காதுவிந்து
நாதத்தி லேயடங் காதந்த வான்பொருளே நாடிக்கொள்ளே. 51.

எங்கும் வியாபித் துணர்வாய் உனக்கென் இதயத்துள்ளே
தங்குந் துயரந் தெரியாத வண்ணந் தடைசெய்ததார்
அங்கங் குழைந்துள் ளுருகுமன் பாளர்க் கணைகடந்து
பொங்குங் கருணைக் கடலேசம் பூரண போதத்தனே. 52.

வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயைமல
மெய்யையும் மெய்யென்று நின்னடி யார்தம் விவேகத்தையும்
ஐயமில் வீட்டையும் மெய்ந்நூலை யும்பொய்ய தாகஎண்ணும்
பொய்யர்தம் நட்பை விடுவதென் றோபரி பூரணமே. 53.

அளியுங் கனியொத் தருவினை யால்நொந் தயர்வுறுவேன்
தெளியும் படிக்குப் பரிபாக காலமுஞ் சித்திக்குமோ
ஒளியுங் கருணையும் மாறாத இன்பமும் ஓருருவாய்
வெளிவந் தடியர் களிக்கநின் றாடும் விழுப்பொருளே. 54.

அடையார் புரஞ்செற்ற தேவேநின் பொன்னடிக் கன்புசற்றும்
படையாத என்னைப் படைத்திந்தப் பாரிற் படர்ந்தவினைத்
தடையால் தளையிட்டு நெஞ்சம்புண் ணாகத் தளரவைத்தாய்
உடையாய் உடைய படியன்றி யான்செய்த தொன்றிலையே. 55.

ஆடுங் கறங்குந் திரிகையும் போல அலைந்தலைந்து
காடுங் கரையுந் திரிவதல் லால்நின் கருணைவந்து
கூடும் படிக்குத் தவமுய லாத கொடியர்எமன்
தேடும் பொழுதென்ன செய்வார் பரானந்த சிற்சுடரே. 56.

கற்றும் பலபல கேள்விகள் கேட்டுங் கறங்கெனவே
சுற்றுந் தொழில்கற்றுச் சிற்றின்பத் தூடு சுழலின்என்னாங்
குற்றங் குறைந்து குணமே விடுமென்பர் கூட்டத்தையே
முற்றுந் துணையென நம்புகண் டாய்சுத்த மூடநெஞ்சே. 57.

நீயென நானென வேறில்லை யென்னும் நினைவருளத்
தாயென மோன குருவாகி வந்து தடுத்தடிமைச்
சேயெனக் காத்தனை யேபர மேநின் திருவருளுக்
கேயென்ன செய்யுங்கைம் மாறுள தோசுத்த ஏழையனே. 58.

ஆத்திரம் வந்தவர் போல்அலை யாமல் அரோகதிட
காத்திரந் தந்தென்னை யேஅன்னை போலுங் கருணைவைத்திம்
மாத்திரம் முன்னின் றுணர்த்தினை யேமவு னாஇனிநான்
சாத்திரஞ் சொன்ன படிஇய மாதியுஞ் சாதிப்பனே. 59.