திருவெம்பாவை பாடல் 12
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
பொருள்:
தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, “சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.