Narasimha Gayatri mantra in Tamil – நரசிம்மர் காயத்ரி மந்திரம்

ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்

சிங்கத் தலையோடும் மனித உடலோடும் மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம். தன்னுடைய பக்தனாக பிரகலாதனை காத்து இரணியனை வதம் செய்யவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தார். பல சிறப்புகள் மிக்க நரசிம்மரை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்பதன் பலனாக எத்தகைய ஆபத்தில் இருந்தும் அவர் நம்மை காத்தருள்வார். இதோ அந்த மந்திரம்.

நரசிம்மர் காயத்ரி மந்திரம் :

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே

தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்

பொது பொருள்:

வஜ்ரம் போன்ற சிங்க நகங்களை கொண்டவரும், தன் பக்தர்களுக்கு எப்போதும் அருளை வாரி வழங்குபவருமான நரசிம்ம பெருமானே என்னை காத்தருளுங்கள்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவதன் பயனாக மனதில் உள்ள அச்சம் விலகும், கண்ணுக்கு தெரியாத ஆபத்துக்கள் விலகும், பகைவர் தொல்லை நீங்கும்.

நரசிம்மர் வழிபாடு

தன்னை வைபவர்களையும் வாழ வைக்கும் தெய்வம் மகாவிஷ்ணு எனப்படும் பெருமாள் ஆவார். வைகுண்டத்தில் வாசம் செய்யும் அந்த மகாவிஷ்ணுவானவர் மொத்தம் 9 அவதாரங்கள் எடுத்து பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். அதில் நான்காவது அவதாரமாக அவர் எடுத்தது தான் நரசிம்ம அவதாரம் ஆகும். மனிதனின் உடலும், சிங்கத்தின் தலையும் கொண்ட நரசிம்மர் என்கிற ரூபத்தில் தோன்றிய பெருமாள் அரக்கர் குல அரசனான ஹிரண்யகசிபுவை வதம் செய்து, தனது பக்தனான பிரகலாதனுக்கு அருளாசிகளை வழங்கினார். தீமைகள் அனைத்தையும் அழித்து, தர்மத்தை நிலைநாட்ட செய்தவரான நரசிம்ம மூர்த்தியை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் அனைத்து விதமான துக்கங்கள், துயரங்கள் முற்றிலும் நீங்கி வாழ்வில் வளமை பெருகும்.

நரசிம்மர் வழிபாட்டிற்குரிய தினங்கள்

நரசிம்ம மூர்த்தியை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறப்பான தினங்கள் தான் என்றாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நரசிம்ம மூர்த்திக்கு தாமரைப்பூ சமர்ப்பித்து, பானகம் படைத்து, தீபங்கள் ஏற்றி வழிபடுவது நீங்கள் விரும்பிய பலனை அளிக்க வல்லதாகும். மேலும் வைகாசி மாதத்தில் வருகின்ற நரசிம்ம ஜெயந்தி தினத்திலும், கார்த்திகை மாதம் முழுவதும் நரசிம்ம வழிபாடு மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த காலமாக இருக்கின்றன. இக்காலத்தில் நரசிம்மருக்கு முறைப்படி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் அருள்வர் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி.

நரசிம்மர் வழிபாடு பலன்கள்

உக்கிர தெய்வமான நரசிம்ம மூர்த்திக்குரிய காயத்ரி மற்றும் இதர மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக தீய ஆவிகள், எதிரிகளின் செய்வினை மாந்திரீக பாதிப்புகள் அனைத்தும் ஒழியும். உடல் மற்றும் மன நலம் மேம்படும். தைரிய குணமும், எதிரிகளை ஒழிக்கும் பராக்கிரமம் உண்டாகும். கர்மவினைகள் மற்றும் எத்தகைய தோஷங்களும் உங்களை பாதிக்காது. செவ்வாய்க்கிழமையில் வருகின்ற பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷ தினத்தில் நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவர்களுக்கு விரைவிலேயே கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீருவதற்கு வழி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்பட்டிருந்த முடக்க நிலை நீங்கி, வியாபாரம் செழித்து மிகுதியான லாபங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வீட்டில் தரித்திர நிலை நீங்கி செல்வ சேர்க்கை அதிகரிக்கும் புதிய வீடு, வாகனம் போன்ற வசதிகளும் ஏற்படும்.

“அக்கிரமங்கள் எப்போதெல்லாம் தலை தூக்குகின்றதோ அப்போதெல்லாம் நான் அவதரித்து தீயவற்றை அழித்து தர்மத்தை நிலை பெற செய்கிறேன்” என குருச்சேத்திர யுத்ததின் போது அர்ஜுனனுக்கு அந்த மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், தனது நிரந்திரமான செயல்பாட்டை பற்றி போதித்திருக்கிறார். இந்த கிருஷ்ணாவதாரத்திற்கு முன்பே, தீய சக்திகளை அழிக்க பல அவதாரங்களை மகாவிஷ்ணு எடுத்திருந்தாலும், மக்கள் பலர் இன்றும் பயபக்தியுடன் வழிபடும் ஒரு அவதாரம் இருப்பின் அது நரசிம்மர் அவதாரமே ஆகும். வேத காலத்தில் ஹிரண்யாட்சகன் எனும் அரக்கனின் சகோதரனான ஹிரண்யகசிபு மூன்று லோகங்கங்களையும் அரசனாக ஆட்சி புரிந்த போது அக்கிரமங்கள் எங்கும் தலைவிரித்தாடின. அதே நேரத்தில் அவனது மகன் பிரகலாதன் அந்த நாராயணின் பக்தனாக இருந்து, அவன் தந்தையின் துன்புறுத்தல்களுக்காளானான். எனவே பிரகலாதன் மற்றும் அனைத்து உலகங்களையும் காக்க மகாவிஷ்ணு “நரசிம்ம அவதாரம்” எடுத்து அரக்கன் ஹிரண்யகசிபுவை வதம் புரிந்தார். அப்படிப்பட்ட நரசிம்மரின் இம்மந்திரத்தை ஜெபிப்பதால் நமக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாமல் காக்கும்.