Thiruthanigai Maalai

Thiruthanigai Maalai

Thiruthani Malai is the 5th house of Lord Murugan. Thiruthanigai Maalai is the song that to praise the Thiruthani Murugan. Here we are posting the Thiruthanigai Maalai Song Lyrics in Tamil for all of you.

திருத்தணிகை மாலை

சீர்கொண்ட தெய்வ
வதனங்களாறுந் திகழ் கடப்பந்,
தார்கொண்ட பன்னிரு தோள்களுந்
தாமரைத் தாள்களுமோர்
சீர்கொண்ட வேலும் மயிலும்
நற்கோழிக் கொடியு மருட்
கார்கொண்ட வண்மைத்,
தணிகாசலமுமென் கண்ணுற்றதே.

கண்மூன்றுறு செங்கரும்பின்
முத்தே பதங் கண்டிடுவான்
மண்மூன்றுலகும் வழுத்தும்
பவள மணிக்குன்றமே,
திண்மூன்று நான்கு புயங்கொண்
டொளிர வச்சிரமணியே,
வண்மூன்றலர் மலைவாழ்
மயிலேறிய மாணிக்கமே:

மாணிக்க ஞான மருந்தேயென்
கண்ணினுண் மாமணியே
ஆணிப்பொன்னே யெனதாருயிரே
தணிகாசலனே
தாள்நிற்கிலே னினைத்தாழாத
வஞ்சர் தமதிடம் போய்ப்,
பேணித்திரிந்தனன் அந்தோ
என் செய்வனிப் பேதையனே.

நல்காத ஈனர்தம் பாற்சென்றிரந்து
நவைப்படுதல்
மல்காத வண்ணமருள்
செய்கண்டாய் மயில்வாகனனே,
பல்காதல் நீக்கிய நல்லோர்க்கருளும்
பரஞ்சுடரே அல்காத
வண்மைத் தணிகாசலத்தில்
அமர்ந்தவனே.

அமரா வதியிறைக்
காருயிரீந்த அருட்குன்றமே
சமரா புரிக்கரசே
தணிகாசலத் தற்பரனே
குமரா பரமகுருவே
குகாவெனக் கூவிநிற்பேன்
எமராஜன் வந்திடுங்கா
லையனே யெனையென்று கொள்ளே.

கொள்ளுண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு
வாழ்க்கையில் குட்டுண்டு – மேல்
துள்ளுண்ட நோயினிற் சூடுண்டு
மங்கையர் தோய்வெனுமோர்
கள்ளுண்ட நாய்க்குள்
கருணையுண்டோ நற் கடலமுதத்
தெள்ளுண்ட தேவர்புகழ்
தணிகாசலச் சிற்பரனே.

சிற்பரன் மேவுமித் தேகத்தை
யோம்பித் திருவனையார்,
தற்பகமே விழைந் தாழ்ந்தேன்
தணிகை தனிலமர்ந்த,
கற்பகமே நின்கழல்
கருதேனிக்கடைப் படுமென்,
பொற்பக மேவிய நின்னரு
ளென்னென்று போற்றுவதே.

போற்றே னெனினும் பொறுத்திடல்
வேண்டும் புவிநடையாஞ்,
சேற்றே விழுந்து
தியங்குகின்றேனைச் சிறிதுமினி,
ஆற்றே னெனதரசேயமுதே
யென்னருட் செல்வமே
மேற்றேன் பெருகு பொழிற்
றணீகாசல வேலவனே

வேல்கொண்ட கையும்
விறல்கொண்ட தோளும் விளங்கு மயில்,
மேல்கொண்ட வீறும்
மலர்முக மாறும்
விரைக்கமலக் கால்கொண்ட வீரக் கழலுங்
கண்டாலன்றிக் காமனெய்யுங்,
கோல்கொண்ட வன்மை யறுமோ
தணிகைக் குருபரனே.

அண்ணாவோ என்னருமை
ஐயாவோ பன்னிரண்டு
கண்ணாவோ வேல்பிடித்த
கையாவோ செம்பவள
வண்ணாவோ நற்றிணிகை
மன்னாவோ என்றென்றே
எண்ணாவோ துன்பத்
திருங்கடற்குன் மன்னினனே

சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
செம்பாகவே யெனதுகுல தெய்வமே நற்
கூர்பூத்த வேன்மலர்க்கை யரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை
பிழைக்கவருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
பார்பூத்த பவத்திலுற விடினென் செய்கிகேன்
பாவியே னந்தோ வன்பயந் தீரேனே.

தீராத துயர்க்கடலி லழுந்தி நாளும்
தியங்கியழு தேங்குமிந்தச் சேய்க்கு நீகண்
பாராத செயலென்னே யெந்தா யெந்தாய்
பாவியென விட்டனையோ பன்னாளாக
ஏராய அருள் தருவா யென்றே யேமாந்
திருந்தேனே யென்செய்கேன் யாருமில்லேன்
சீராருந் தணிகைவரை யமுதே யாதி
தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.

அண்ணாவே நின்னடியை யன்றி வேறோர்
ஆதரவிங் கறியேன் நெஞ்சழிந்து துன்பால்
புண்ணாவேன் றன்னையின்னும் வஞ்சர் பாற்போய்ப்
புலந்துமுக வாட்டமுடன் புலம்பி நிற்கப்
பண்ணாதே யாவனின் பாவிக் குள்ளும்
படுபாவி யென்றென்னைப் பரிந்து தள்ள
எண்ணாதே யான்மிகவு மேழை கண்டாய்
இசைக்கரிய தணிகையில் வீற்றிருக்குங் கோவே.