How and Where to Start Girivalam in Thiruvannamalai? – திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? எங்கிருந்து தொடங்குவது?

திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? எங்கிருந்து தொடங்குவது?

 

 

திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது அண்ணாமலையை வலம் வந்து வணங்குவது. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, அவரது பெயரை உச்சரித்தவாறே கிரிவலம் வரும்போது ஏற்படும் சுகானுபவம் அலாதியானது. திருவண்ணாமலையை கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.

திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? எங்கிருந்து தொடங்குவது? 

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. ஈசன் நெருப்பாக நின்று, மலையாகக் குளிர்ந்த தலம்; நினைத்தாலே முக்தி தரும் தலம்; உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராகத் திகழும் தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது அண்ணாமலையை வலம் வந்து வணங்குவது. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, அவரது பெயரை உச்சரித்தவாறே கிரிவலம் வரும்போது ஏற்படும் சுகானுபவம் அலாதியானது. திருவண்ணாமலையைக் கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.

கிரிவலம்

திருவண்ணாமலையானது கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபுரயுகத்தில் பொன் மலையாகவும் தற்போது கலியுகத்தில் கல் மலையாகவும் விளங்குகிறது. திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும், அனைத்துப் பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோயிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அனுமதி பெற வேண்டும். பூத நாராயணர்தான் திருவண்ணாமலையின் காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை. பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதி.

 

உலகிலிருக்கும் பழைமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. இதன் வயது 260 கோடி வருடங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது அண்ணாமலை. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவனவாகும். இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. இது மட்டுமல்லாமல் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், பதினாறு விநாயகர் கோயில்கள், ஏழு முருகன் கோயில்கள், ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோயில்கள் கொண்ட தெய்விகப் பாதை கிரிவலப் பாதையாகும்.

 

கிரிவலம் நன்மைகள்

 

திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன. அங்குப் பக்தர்கள் அவரவரது தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்துத் தங்கலாம். முழு முதற்கடவுளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி வலம்வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலம் மேம்படுவதோடு, மலையின் சக்தி மிகுந்த அதிர்வுகள் நம் வாழ்வைச் சிறப்பானதாக மாற்றும்.

 

நிறைமாத கர்ப்பிணிப் பெண் எப்படி அமைதியாக, ஆனந்தமாக, வயிற்றிலிருக்கும் குழந்தையை மட்டும் நினைத்து நடந்து செல்வாளோ, அதேபோன்றுதான் நாமும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து, அவருடைய திருப்பெயரை உச்சரித்துக்கொண்டு பொறுமையாகவும், பக்தியுடனும் நடந்து செல்லவேண்டும். கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ அல்லது சாப்பிடவோ கூடாது. எண்ணம் முழுவதும் அருணாசலேசுவரர் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். கிரிவலம் செல்லும்போது எறும்புப் புற்றுகளுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் வந்து சேரும். எத்தனை ஆயிரம் எறும்புகள் உண்கிறதோ அத்தனை ஆயிரம் உயிர்களுக்கு உணவிட்ட புண்ணியம் கிடைக்கும்.

 

கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினங்கள்தாம். அதிலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிகச் சிறப்பு உண்டு என்று ஞானிகளும், யோகிகளும் கூறியிருக்கிறார்கள். ஊழ்வினையை நீக்கும் திருவண்ணா மலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும். `வலம் வர வேண்டும்’ என்று நினைத்த மாத்திரத்தில் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

 

திருவண்ணாமலை கிரிவலம்

 

கிரிவலம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…

 

ஞாயிற்றுக்கிழமை – சிவலோக பதவி கிட்டும் .

 

திங்கள்கிழமை  – இந்திர பதவி கிடைக்கும்

 

செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .

 

புதன்கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.

 

வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.

 

வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.

 

சனிக்கிழமை – பிறவிப் பிணி அகலும்.

 

கிரிவலத்தைப் பற்றி ரமண மகரிஷி கூறிய கதை…

 

ராஜா ஒருவர் குதிரையில் அமர்ந்து காட்டுப் பூனையைத் துரத்தியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டுப்பூனை, குதிரை, ராஜா ஆகியோர் இறந்து போனார்கள். மூவரும் ஒரே நேரத்தில் இறந்துபோனாலும் குதிரையும், காட்டுப் பூனையும் மோட்சம் அடைந்துவிட்டன. ஆனால், ராஜாவுக்கு மட்டும் மோட்சம் கிடைக்கவில்லை.

 

திருவண்ணாமலை

 

காரணம்…

 

ராஜாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் காட்டுப் பூனைக்கு இருந்தது. ராஜாவின் ஆணையைக் கேட்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் குதிரைக்கு இருந்தது. ஒரே சிந்தனையுடன் ஓடியதால் குதிரைக்கும், பூனைக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது. ஆனால், பல சிந்தனைகளுடன் காட்டுப் பூனையைத் துரத்தியதால் ராஜாவுக்கு மட்டும் மோட்சம் கிடைக்க வில்லை.

 

இதேபோன்றதுதான் கிரிவலமும். மனதில் எந்தவிதச் சிந்தனையும் இல்லாமல் `அண்ணா மலையான்’ ஒருவனை மட்டுமே நினைத்துக்கொண்டு கிரிவலம் மேற்கொண்டால் இறைவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.

 

நாளை வியாழக்கிழமை (22.11.18) கார்த்திகை மாத பௌர்ணமி தினம். கிரிவலம் மேற்கொள்வதற்கு உகந்த நாள். கிரிவலம் சென்று அண்ணாமலையானின் அருள் பெற்று அனைத்து வளங்களும் பெறுவோமாக.