கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும் ஸ்ரீரங்கம் லட்சுமி நரசிம்ம பெருமாள்
ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதியில் காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவு வன விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது.
இதனால் ரிஷிகள் பெருமாளை வேண்டியுள்ளனர். இதனால் நரசிம்ம பெருமாள் அவதரித்தாகவும், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் ஆகிய கோவில்களின் எல்லை தெய்வமாகவும் அவர் விளங்கி வருகிறார். பெருமாள் தனக்காக கோவில் அமைத்து தானே வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
இங்கு அவதரித்துள்ள நரசிம்மர் மேற்கு பார்த்த முகத்துடன், தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். இதனால் லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார்.
பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினம், பிரோதஷ தினம் மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் துளசி, பழங்களை வைத்து படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம். இங்கு வீற்றிருக்கும் நரசிம்ம பெருமாள் லட்சுமி தேவியுடன் சாந்தமாக காட்சி தருகிறார்.
மேலும் பக்தர்களின் வேண்டும் வரங்களை அவர்களின் விருப்பம் போல் லட்சுமி நரசிம்மர் வழங்கி அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் வெல்லம், சுக்கு கலந்த பானகம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலாக எதை எடுத்து வந்தாலும் அவையும் படைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும், அதன் உபகோவிலாக விளங்கும் காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலின் மூலவரான லட்சுமி நரசிம்மருக்கும் செய்யப்படுகின்றன.