ராமர் சொன்ன கதை
வேடன் ஒருவன்; அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது. அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாகப் பங்காளிகள் அவனை விரட்டி விட்டார்கள். ஒருநாள், வேடன் காட்டில் இருந்தபோது மின்னலும் இடியுமாக, மழை பெய்யத் தொடங்கியது.
சற்று நேரத்தில், மேடு, பள்ளங்கள் தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு! பறவைகளும் விலங்கு களும் மழையில் நனைந்து, பசியால் சுற்றிக் கொண்டிருந்தன.குளிரால் நடுங்கிய வேடன், தன்னைப்போலவே நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் புறாவைப் பார்த்தான்; தன் இயல்புப்படி ‘படக்’கென்று அப்புறாவைப் பிடித்துக் கூண்டிற்குள் போட்டுக் கொண்டு விட்டான். மழை சற்று விடும்போல இருந்தது.
இதைப் பார்த்த வேடன் அங்கிருந்த ஒரு பெரும் மரத்தின் அடியில், தன் கையிலிருந்த புறா இருந்த கூண்டை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, தானும் அங்கேயே தங்கினான். இரவு நெருங்கியது. காட்டைவிட்டு வெளியேற வழியில்லை. பசியாலும் குளிராலும் நடுங்கிக் கொண்டிருந்தான் வேடன்.
அதே சமயம் வேடன் தங்கியிருந்த, மரத்தின் மேல் இருந்த புறாக் குடும்பத்தின் தலைவனான ஆண்புறா, இரை தேடிப்போன பெண் புறா இன்னும் திரும்பாததைக் கண்டு புலம்பத் தொடங்கியது. அதைக் கேட்டுக் கீழே வேடனின் கூண்டிலிருந்த பெண்புறா பேசத் தொடங்கியது. ‘‘வருத்தப்படாதீர்கள்! இரை தேடப் போன என்னை, இந்த வேடர் பிடித்துத் தன் கூண்டிற்குள் அடைத்து விட்டார். கீழே இருக்கும் கூண்டிற்குள்தான் இருக்கிறேன்.
கஷ்டமான இந்நேரத்தில் நாமிருக்கும் இடத்தை நாடிவந்த இந்த வேடரை உபசரித்துப் பசியாற்ற வேண்டியது, இல்லறத்தாரான நம் கடமை. இந்த வேடரின் குளிரைப்போக்கி, இவர் பசியைத் தீர்க்க ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்!’’ என்றது, பெண்புறா.அதைக் கேட்ட ஆண்புறா, தன் கூட்டைப் பிரித்து அதில் உள்ள சிறுசிறு குச்சிகளையெல்லாம் வேடன் முன் போட்டது. பறவைக் கூட்டிலிருந்த குச்சிகள் எல்லாம் காய்ந்து இருந்தன. சற்று நேரத்தில் ஒருவழியாக அவற்றைக் கொளுத்திக் குளிர் காய்ந்தான் வேடன். அவன் குளிர் காய்ந்ததும், அவனுக்கு முன்னால் எரியும் நெருப்பின் மேலாகப் பறந்த ஆண்புறா, ‘‘அப்பா! வேடா! எங்கள் இடம் தேடி விருந்தாளியாக வந்த உன் பசியைப் போக்க வேண்டியது என் கடமை.
இதோ! இந்த நெருப்பில் விழுந்து நான் இறக்கிறேன். என் இறைச்சியை உண்டு உன் பசியைத் தீர்த்துக்கொள்!’’ என்று கூறி நெருப்பில் விழுந்து இறந்தது. பார்த்த வேடன் பதறினான்; ‘‘சீ! பறவைகளுக்குள்ள அறிவுகூட, நமக்கில்லையே! வீடுதேடி வந்தவன் பசிபோக்க இப்பறவை தன் உயிரையே தந்திருக்கிறது. மனிதன் என்று பேர்படைத்த நானோ, அவை இருப்பிடம் தேடி அவற்றை கொல்ல அலைகிறேனே! இன்றிலிருந்து இக்கொலைத் தொழிலைச் செய்ய மாட்டேன்’’ என்று கூறி, தன் கூண்டில் இருந்த பெண் புறாவைத் திறந்து விட்டான்.
வெளியே வந்த பெண் புறாவோ,‘‘ வேடனே! என் கணவர் உடல் மட்டும் உன் பசியைத் தீர்க்கப் போதுமானதாக இருக்காது. இதோ! என்னையும் உண்டு உன் பசியைத் தீர்த்துக் கொள்!’’ என்று கூறி, தானும் தீயில் விழுந்து இறந்தது.வேடன் கண்களில் கண்ணீர் வர, அதேசமயம் ஆகாயத்திலிருந்து தெய்வீக விமானம் ஒன்று கீழே இறங்கி வந்தது. புறாக்கள் இரண்டும் தெய்வீக வடிவம் பெற்று அவ்விமானத்திலேறி, விண்ணுலகை அடைந்தன.
பேடையைப் பிடித்துத் தன்னைப்
பிடிக்க வந்தடைந்த பேதை
வேடனுக் குதவிசெய்வான்
விறகிடை வெந்தீ மூட்டி
பாடுறு பசியை நோக்கித்
தன்னுடல் கொடுத்த பைம்புள்
வீடுபெற் றுயர்ந்த வார்த்தை
வேதத்தின் விழுமிதன்றோ
(கம்ப ராமாயணம்)
இந்தக் கதை ஸ்ரீராமர் சொன்னது.