எந்நாளும் இறைவனோடிரு

எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு)

ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் அழுவதைப் பார்த்தார்.

உடன் அவன் அருகிற் சென்று ” சகோதரனே ஏன் அழுகின்றாய்? ” என்று விசாரித்தார்.

அதற்கு அவன் ” இந்தத் திரிகல்லில் அகப்பட்டு நெரியும் அரிசி போல நானும் இவ்வுலகில் அகப்பட்டுக்கொண்டேன். அதனை நினைத்து அழுகின்றேன் ” என்றான்.

அதற்கு அச்சந்நியாசியார் அவனை நோக்கி ” திரிகல்லின் மேலே உள்ள சுழற்றும் கல்லை எடுத்துவிட்டு நடுவில் உள்ள கட்டைக்கருகில் உள்ள அரிசிகளைக் கவனி. கட்டைக்கருகில் உள்ள அத்தனை அரிசிகளும் நெரிபடாமல், முழு அரிசிகளாகவே இருக்கின்றன. இதோ பார்! நீயும் இறைவனை-ஏகப்பொருளை-ஏகனை சதா நேரமும் மனதில் தியானித்தவண்ணம் இருந்தாயானால் உலக வலைக்குள் சிக்கித் தவிக்கமாட்டாய். இறைவனுக்கே ஆட்பட்டுவிடுவாய்! அவ்வாறு வாழ்ந்தால் திரிகல்லின் கட்டைக்கருகில் காணப்படும் அரிசி போல நீயும் காப்பாற்றப்படுவாய். உலகில் சம்பவிக்கும் துரதிஷ்டங்கள், துன்பங்கள் வந்து உன்னைப் பற்றாது ” என்றார்.

இதைக் கேட்ட அவன் உள்ளம் தெளிந்தது.

நீதி : இறைவன் மேல் மனதை நிறுத்தி, செய்யும் வேலைகளை அவருக்குச் செய்வதாகவே நினைத்து செய்யும் போது, இவ்வுலக மாயைகள் ஒருவனை எந்த விதத்திலும் துன்பத்தில் ஆழ்த்தாது. மாறாக இறைவனை மறந்து நான் என்ற அகங்காரத்தில் வேலைகளில் ஈடுபடும்போது துன்பங்கள் நம்மை எளிதில் சூழ்ந்துவிடும்.

எனவே இறைவனை நம் மனதில் எப்போதும் இருந்தி, இந்த உலக மாயைகளில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழ்ந்திடுவோம்.