Mahabharatham story in Tamil 55 – மகாபாரதம் கதை பகுதி 55

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 55

ஆனால், இறுதியில் பீமன் அவனது தொடையை வளைத்து தூக்கி தரையில் அடித்துக் கொன்றான். விராட மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எனது சமையல் பணியாளன் உலகிலேயே சிறந்த மல்யுத்த வீரனும் கூட என பராட்டியத்துடன், அவனை அருகில் அழைத்து, தன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, மன்னனுக்குரிய அந்தஸ்தையும், செல்வத்தையும் வாரிக்கொடுத்தான். இங்கே, இப்படி பீமனுக்கு சகல மரியாதையும் நடக்க, திரவுபதிக்கு மற்றொரு சோதனை வந்தது. அவளது கற்புக்கு இரண்டாம் முறையாக ஏற்பட்ட சோதனை அது. ஏற்கனவே, துரியோதனின் அவையில், கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்ட அவள், இப்போது, கீசகன் என்ற காமப்புலியிடம் சிக்கிக் கொண்டாள். கீசகன் என்பவன், விராடமகாராஜாவின் மைத்துனன். அதாவது, மாகராஜா இவனது சகோதரி சுதேஷ்ணையைத் தான் மணந்திருந்தார். அவன் விராடநாட்டின் சேனாதிபதியும் கூட. அழகில் மன்மதன். பெண்கள் விஷயத்தில் பல வீனமானவன். அவன், தன் சகோதரியைப் பார்க்க அரண்மனைக்கு வந்தான். சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, நந்தவனம் வழியே திரும்பும்போது, ஒரு அழகு மங்கை பூப்பறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

லோகத்தில் இப்படி ஒரு பேரழகியா? இதுவரை அவன் பல ரோஜாக்களை முகர்ந்திருக்கிறான். ஆனால், இப்படி ஒரு அகன்று விரிந்த தாமரையைப் பார்த்ததே இல்லை. அவளருகில் சென்றான். அழகின் வடிவமே! நீ பூலோகத்தில் பிறந்தவளா? தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தவளா? பெண் தெய்வமா? ஒரு வேளை மலை மகள் பார்வதியோ? தாமரையில் எழுந்தருளிய திருமகளோ? பாதாளத்தை உடைத்து கொண்டு வந்த மோகினியோ? சமுத்திரத்தில் இருந்து வந்த ஜலகன்னியோ? சித்திரம் ஏதேனும் உயிர் பெற்று வந்ததோ? என புகழ்ந்தான். திரவுபதி அவனது மோசமான பார்வையைக் கண்டு செடிகளுக்கிடையே சென்று ஒளிந்து தன்னை மறைத்துக் கொண்டாள். விடவில்லை அநதக் கொடியவன்! பின்னாலேயே வந்து அவளை நெருங்கினான். ஒதுங்கிக் கொண்ட திரவுபதி, வீரனே! நான் ஐந்து தேவர்களுக்கு என்னை தாரை வார்த்தவள். மாற்றான் மனைவியை ஏறெடுத்துப் பார்க்க கூடாது என்பதை நமது தர்ம சாஸ்திரங்கள் சொல்வதை நீ அறியமாட்டாயோ? ஒரு பெண்ணை அவள் சம்மதமின்றி விரும்புபவன், இப்பிறப்பில் மட்டுமல்ல, மறுபிறப்பிலும் கடும் விளைவுகளைச் சந்திப்பான். ஒருவேளை, உன்னை என் அழகு கவர்ந்து, மன்மதனின் வலைக்குள் சிக்கியிருந்தாலும் கூட, அதை உதறிவிட்டுப் போகும் பக்குவத்தை நீ வளர்த்துக் கொள். போய்விடு, என்றாள்.

கீசகன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. பெண்ணே! உன்னை விட்டுப் போவதா? அதை விட என் உயிரை போக்கிக் கொள்கிறேன். தாபம் என்னை வாட்டுகிறது. மறுகாதே, வா, என்றான். ஒரு கட்டத்தில் தாபம் தாங்காமல் அவள் காலிலும் விழுந்தான். அவனுக்கு பெண் பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட திரவுபதி, அவனிடமிருந்து தப்பி, சுதேஷ்ணையிடம் ஓடினாள். அம்மா! தங்கள் தம்பி என்னைப் பார்த்து சொல்லத்தகாத வார்த்தைகளை பேசினான். நான் எவ்வளவோ, எடுத்துச் சொல்லியும் என் மீது காமப்பார்வை வீசுகிறான். நீங்கள் அவனைத் தடுக்க வேண்டும். நான், இங்கு பணியில் சேரும்போது நான் விரதம் இருக்கும் விஷயத்தைச் சொல்லியுள்ளேன். உங்கள் தம்பியின் ஆசை எல்லை மீறிவிட்டது. அதைத் தணிக்க வேசியருக்கு ஏற்பாடு செய்யுங்கள். என்னைத் தொடுவதற்கு தாங்களும் அவனுக்கு உதவி விடாதீர்கள். அப்படி செய்தால், அவன் எரிந்து போவான்.இது நிச்சயம் என்றாள், உறுதிபட. சுதேஷ்ணை கலங்கி விட்டாள். தம்பியைத் திட்டினாள். அக்காவின் தலையீட்டால் அவனால் ஏதும் செய்யமுடியவில்லை. அவன் தன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அங்கு சென்றதும், அவனது விரகதாபத்தைப் போக்க பணிப் பெண்கள் அவன் உடலில் பூசிய சந்தணம், பன்னீர் எல்லாம் காய்ந்து விட்டது. அந்தளவுக்கு திரவுபதியின் நினைவு என்னும் வெப்பம் அவனைத் தகித்தது.

அவன் கட்டிலில் புரள்வதைப் பார்த்த பணிப்பெண்கள் இந்த நோயால் அவன் இறந்து விடுவானோ எனக் கருதினர். அவர்கள் சுதேஷ்ணையிடம் ஓடிவந்து, தங்களால் கீசகனின் விரகத்தை தீர்க்க முடியவில்லை என்று கூறியதுடன் அவர் இறந்து விடுவாரோ என்று பயப்படுவதாகக் கூறினர். மகாராணி! தாங்கள் நம் சேனாதிபதியைப் பாதுகாக்க, அவர் விரும்பும் பணிப்பெண்ணை அனுப்பி வையுங்கள். அவளது கற்புக்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். அவள் வந்தால் போதும், அவள் முகம் பார்த்தாலே அவரது காமநோய் தீர்ந்து விடும் என நம்புகிறோம், என்றனர். சுதேஷ்ணை, தன் தம்பியின் உயிருக்காக வருந்தினாள். திரவுபதியிடம் கெஞ்சிக் கூத்தாடி,பெண்ணே! நீ கீசகனின் உயிரைக் காப்பாற்றும் பணியைச் செய். இதோ! ஒரு மாலை, இதை அவன் கையில் கொடு. அதைப் பெற்றுக் கொண்டதும் வந்து விடு. வேறு எதுவும் செய்ய வேண்டாம். உன்னைப் பார்த்தால், போக இருக்கும் அவனது உயிர் பிழைக்கும், என்றாள்.

மகாராணியின் உத்தரவை இம்முறையும் மீற முடியாத நிலையில், அவளது கெஞ்சலுக்காக திரவுபதி மாலையைப் பெற்றுக்கொண்டாள். சூரியபகவானை நோக்கி, பகவானே! என் கற்பு இந்த கீசகனால் அழிந்து விடுமோ என அஞ்சுகிறேன். நீ தான் பாதுகாக்க வேண்டும், என மனமுருக வேண்டினாள். கீசகனின் மாளிகைக்குச் சென்றாள். அவளைப் பார்த்ததும், வந்து விட்டாயா? என் பேரழகே? என்றபடி கீசகன் கட்டிலை விட்டு இறங்கி ஓடிவந்தான். பல பெண்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் முன்னிலையிலேயே அவளை அணைத்துக்கொள்ள அவன் முயன்றான். திரவுபதி அவன் பிடியில் இருந்து தப்பி ஓடினாள். நேரே, விராட மகாராஜானின் அரசவைக்கே சென்று விட்டாள். அங்கு பலநாட்டு மன்னர்களுடன் விராடராஜன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். அவன் முன்பாக போய் விழுந்த திரவுபதியை விரட்டி வந்த கீசகன், அது ஒரு அவை என்றும் பாராமல், அவளை அணைத்துக் கொள்ள நெருங்கினான்.