மகாபாரதம் – பகுதி 67
அவன் திருதராஷ்டிரனிடம், தந்தையே! தங்கள் ஆட்சியில் புதிய புதிய நடைமுறைகளைப் பார்க்க முடிகிறது. தூதனாக வந்தவர்களைக் கொன்ற அரசர்கள் எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நல்ல யோசனைகள் எல்லாம் தங்கள் மனதில் எப்படித்தான் உதிக்கிறதோ தெரியவில்லை. பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், புலவர்கள் ஆகியோரைக் கொல்வது பெரும்பாவம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில் தூதர்களும் இருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர்கள்? இதனால், கொடிய நரகமல்லவா நமக்கு கிடைக்கும். அது மட்டுமா? நம்மைத் தேடி வந்தவர்களை கொல்வது பாவம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இங்கிருக்கிற வீராதி வீரர்களும், சூராதி சூரர் களும் கண்ணபிரானை சூழ்ந்து நின்று தாக்கினாலும், அவன் உங்கள் வலைக்குள் சிக்குவான் என்றா நினைக்கிறீர்கள். அவன் மாயவன். அவனைப் பிடிக்க யாரால் முடிகிறது பார்ப்போம், எனச் சொல்லி ஏளனமாக சிரித்தான். இதைக் கேட்ட துச்சாதனனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
நல்ல விஷயங்கள் பேசும்போது, இதுபோன்ற சிறுவர்களை ஏன் அழைக்கிறீர்கள்? நான் ஒருவன் போதாதா? அந்தக் கண்ணனை அழிக்க. விதுரனுடன் அவன் தங்கியிருக்கிறான். அந்த மாளிகைக்கு தீ வைப்போம். அந்த விதுரனும் சேர்ந்து அழிந்து போகட்டும், என்று சொல்லி எக்காளச் சிரிப்பை உதிர்த்தான். கர்ணன் இன்னும் அதிகமாக துள்ளிக் குதித்தான். அவனைக் கொல்வதற்காக ஒரு மாளிகையையே எரித்து வீணாக்க வேண்டுமா? தேவையில்லை. எனது ஒரு பாணம் போதும், அவனது உயிர் பறந்து விடும், என்று தற்பெருமை வெளிப்பட பேசினான். அப்போது சகுனி எழுந்தான். சிறுவர்களே! அனுபவஸ்தனான நான் சொல்வதைக் கேளுங்கள். தூதனைக் கொல்வது சரியல்ல என்ற விகர்ணனின் வாதம் சரிதான். இருந்தாலும், அவனைப் பிடித்துக் கட்டி வைத்தாக வேண்டும். நாளையே கண்ணன் பாண்டவர்களைச் சந்திக்க புறப்படுகிறான். அவன் புறப்படுவதற்குள் அவனை வஞ்சகமாக நம் மாளிகைக்கு வரச் செய்ய வேண்டும். வழியில் பெரிய பள்ளத்தை தோண்டி வைத்து, அதற்குள் வீரர்களை மறைந்திருக்கச் செய்வோம். கண்ணன் பள்ளத்திற்குள் விழுவான். அப்போது, நம் வீரர்கள் அவனைக் கட்டித் தூக்கிச் சென்று பாதாளச் சிறையிலே அடைத்து விட வேண்டும். சரிதானே, என்றதும், துரியோதனன் எழுந்தான்.
மாமா! நீங்கள் சொல்வது தான் சரியான யோசனை, என்றான். அத்துடன் அவன் நிற்கவில்லை. ஒரு நாழிகை நேரத்துக்குள் பெரிய பள்ளம் ஒன்றைத் தோண்டி, நான்கு லட்சம் வில்லேந்திய வீரர்களையும், இரண்டு லட்சம் மற்போர் வீரர்களையும், ஒரு லட்சம் ராட்சதர்களையும் இறங்கி நிற்கச்சொன்னான். பள்ளத்தின் மேல் மூங்கில் கட்டைகளை அடுக்கி, அதன் மேல் ரத்தினக் கம்பளம் ஒன்றை விரித்து, சிம்மாசனம் ஒன்றை வைத்து விட்டான். மறுநாள் காலையில் கிருஷ்ணரை அழைத்து வர ஆட்கள் சென்றனர். கிருஷ்ணரும் தன் படைகளுடன் துரியோதனனின் அரண்மனைக்கு வந்தார். அவர் மட்டுமே உள்ளே வர வேண்டும். மற்றவர்கள் வெளியில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்டான் துரியோதனன். அதன்படி கிருஷ்ணர் மட்டும் உள்ளே சென்றார். அவரை ஆசனத்தில் அமரும்படி முகமலர்ச்சியுடன் சொன்னான் துரியோதனன். கண்ணனும் அமர்ந்தார். அமர்ந்த வேகத்தில் மூங்கில் கட்டைகள் சரிய பாதாளத்தில் விழுந்து விட்டார். துரியோதனன் கைகொட்டி சிரித்தான்.
ஆனால், அவன் சிரிப்பு அடங்கும் வகையில் கிருஷ்ணர் வேகமாக வளர்ந்தார். விஸ்வரூபம் எடுத்தார். கோபம் பொங்க, துரியோதனா! ஒரு தூதனை எப்படி நடத்த வேண்டும் என்பது கூட உனக்குத் தெரியவில்லை. பாரதப்போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று நான் உனக்கு செய்து கொடுத்த சத்தியத்தாலும், உன்னை பாண்டவர்கள் அழிக்க வேண்டும் என்று எடுத்துள்ள சபதத்தாலும் பிழைத்தாய். இல்லாவிட்டால், இக்கணமே உன்னைக் கொன்றிருப்பேன், என்றவர், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் சங்கு சக்ரதாரியாக ஆயிரம் கைகளுடன் வளர்ந்தார். அவரது கைகளில் இருந்த ஆயுதங்கள் பறந்தன. அங்கிருந்த அரசர்கள் நடுங்கினர். ஏராளமானோர் அந்த விஸ்வரூபனை வணங்கினர். வானத்து தேவர்கள், பகவானே! அமைதியடையுங்கள். தாங்கள் மானிடப் பிறவி எடுத்துள்ளதை நினைவுபடுத்துகிறோம். ஆயுதங்களை அடக்கி வையுங்கள். உலகத்தை அழித்து விடாதீர்கள், என கெஞ்சினார் கள். பூலோக ரிஷிகளும் இந்த ரூபத்தைக் கண்டு, ஆதிமூலமே! கருணைக் கடலே, உலக நன்மை கருதி தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும், என பிரார்த்தித்தனர். பகவானின் திருவடியில் சிக்கி பள்ளத்தில் இருந்த ஏழு லட்சம் வீரர்களும் இறந்தனர். ஆனால், இந்த ரூபம் கண்டு துரியோதனன் சற்றும் கலங்கவில்லை. மற்ற அரசர்கள் அவரி டம் மன்னிப்பு கேட்டனர். நிலையில்லாத புத்தியை உடைய மானிடர்களான எங்களை மன்னிக்க வேண்டும் பெருமாளே! என கெஞ்சினர்.
இதுகேட்டு, கிருஷ்ணர் அமைதியாகி தன் வடிவத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்படும் சமயத்தில் கர்ணனை தனியாக அழைத்தார். கர்ணா! துரியோதனனுடன் நீயும் சேர்ந்திருக்கிறாயே. பாண்டவர்கள் யாரென்று தெரிந்து தான் அவர்களுடன் நீயும் போரிடப் போகிறாயா? என்றார். பாண்டவர்கள் என் நண்பனின் எதிரிகள். அதனால், அவர்களைக் கொல்லப் போகிறேன். இதிலென்ன தவறு கிருஷ்ணா, என்ற கர்ணனைப் பார்த்து சிரித்த கிருஷ்ணர், கர்ணா! தவறு செய்கிறாய். உன் தாய் யாரென்று உனக்கு தெரியுமா? உன் பிறப்பின் ரகசியத்தை நீ அறிவாயா? நீ தேரோட்டி அதிரதனின் பிள்ளை இல்லை என்பதை அறிவாயா? என்றதும் கர்ணன் அதிர்ந்தான். கிருஷ்ணா! நீ என்ன சொல்கிறாய்? நான் அதிரதனின் பிள்ளை இல்லையா? அப்படியானால், நான் யார் என்பதைச் சொல். என்னைக் குழப்பாதே, என்றான். மனதில் குழப்பம் வந்து விட்டால் எவ்வளவு பெரிய வீரனாயினும், அறிஞனாயினும் அவனால் செயல்களைச் சரிவர முடியாது. மாவீரன் கர்ணனை அடக்கிவிட்டால், துரியோதனின் பலம் பாதி குறைந்து போகும் என்பதை இந்த மாயக்கண்ணன் அறியமாட்டாரா என்ன? சமயம் பார்த்து உண்மையை உடைத்தார்.