மோட்சம் யாருக்கு? சிவன் பார்வதி கங்கை ஒரு ஆன்மீக கதை | Shivan Parvathi Gangai Spiritual Story

மோட்சம் யாருக்கு? சிவன் பார்வதி கங்கை ஒரு ஆன்மீக கதை | Shivan Parvathi Gangai Spiritual Story

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம்” என சொல்கிறார்கள் , ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார். சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக் கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு, ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் “ என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதிதேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்க” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின் வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும்? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை “அப்பா நீ பாவமே செய்யவில்லையா?“ என வினவினார். அவன் சொன்னான் எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவர் சொன்னார் ” குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை“ என சொல்லி அழைத்து சென்றார்.
“நம்பியவர்க்கே மோட்சம் கிடைக்கும்”