சிவன் எங்கே இருக்கிறார் | Where is Lord Shiva?

சிவன் எங்கே இருக்கிறார் | Where is Lord Shiva?

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது…

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன… தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்…”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக…வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்…சென்று வா”…என்றார் குரு.

பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..

காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது… நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது…..
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்…உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது…

பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்…கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது…

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்…அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின…

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக…

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்…

தானே சிவமானான்…

———————————-ஓம்—————————–
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் – 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.