Thiruvembavai Song 6 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்:

மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், “உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.