சரவணபவ தத்துவம்
சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர்.
பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.
உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).
மு – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.
ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.