Thayumanavar Songs – கற்புறுசிந்தை

  1. கற்புறுசிந்தை

கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர்
இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்
தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம்
பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணா னந்த வாழ்வே. 1.

முருந்திள நகையார் பார முலைமுகந் தழுவிச் செவ்வாய்
விருந்தமிர் தெனவ ருந்தி வெறியாட்டுக் காளாய் நாளும்
இருந்தலோ காய தப்பேர் இனத்தனாய் இருந்த ஏழை
பொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணா னந்த வாழ்வே. 2.

தீதெலாம் ஒன்றாம் வன்மை செறிந்திருட் படலம்போர்த்த
பாதகச் சிந்தை பெற்ற பதகனுன் பாத நீழல்
ஆதர வடைய உள்ளன் பருளகிலை யாயின் மற்றியார்
போதனை செய்ய வல்லார் பூரணா னந்த வாழ்வே. 3.

நாதனை நாதா தீத நண்பனை நடுவாய் நின்ற
நீதனைக் கலந்து நிற்க நெஞ்சமே நீவா என்றால்
வாதனை பெருக்கி என்னை வசஞ்செய்து மனந்துன் மார்க்க
போதனை செய்தல் நன்றோ பூரணா னந்த வாழ்வே. 4.

எண்ணிய எண்ண மெல்லாம் இறப்புமேற் பிறப்புக் காசை
பண்ணிஎன் அறிவை எல்லாம் பாழக்கி எனைப்பா ழாக்குந்
திண்ணிய வினையைக் கொன்று சிறியனை உய்யக் கொண்டால்
புண்ணியம் நினக்கே யன்றோ பூரணா னந்த வாழ்வே. 5.

பத்திநீ பத்திக் கான பலனுநீ பலவாச் சொல்லுஞ்
சித்திநீ சித்தர் சித்தித் திறமுநீ திறமார் மோன
முத்திநீ முத்திக் கான முதலுநீ முதன்மை யான
புத்திநீ எனக்கொன் றுண்டோ பூரணா னந்த வாழ்வே. 6.

தாயினும் இனிய நின்னைச் சரணென அடைந்த நாயேன்
பேயினுங் கடைய னாகிப் பிதற்றுதல் செய்தல் நன்றோ
தீயிடை மெழுகாய்நொந்தேன் தெளிவிலேன விணே காலம்
போயின தாற்ற கில்லேன பூரணா னந்த வாழ்வே. 7.