குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் தனுசு | Dhanusu Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil
வியாழன் கிரகம் தான் தேவர்களின் ‘குரு’ என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது 1 வருடம்)எடுத்துக் கொள்வார்.
அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், தனுசு ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024
குரு பகவான் உங்க ராசிக்கு 4வது வீட்டிலிருந்து 5வது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியின் போது ஏழரை சனியின் பிடியிலிருந்து தப்பித்த தனுசு ராசியினர் இப்போது அர்த்தாஷ்டம குருவின் பிடியிலிருந்தும் தப்பிக்க போகிறீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரும் குரு பகவானால், ராகு பகவானால் ஏற்பட்ட கெடுபலன்கள் அனைத்தும் குறைய தொடங்கும். தடைப்பட்டு நின்ற திருமண முயற்சிகள் விரைவில் நடந்து முடியும். காதல் உறவில் இருப்பவர்கள் தம்பதிகளாவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இந்த முறை நிச்சயம் குழந்தை பாக்கம் கிட்டும்.
புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் அதிகமாகவே உள்ளது. சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபெயரும் யோகம் ஏற்படும். தடைப்பட்டு நின்ற வீடு கட்டுமான பணிகள் நல்ல முறையில் நடந்து முடியும். படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பார்கள். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் பெற்றோர்களின் ஆதரவு உண்டு. தேவையற்ற அலைச்சல் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி மீண்டும் எழுச்சி பெரும்.
மேலும், குரு பகவான் தனது 5 வது பார்வையாக 9வது வீடான பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுவதால், தந்தையிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. சிலருக்கு பணி மாற்றம், இடமாற்றம் ஏற்படும். வேலையில்லாத தனுசு ராசியினருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். புதிய தொழில் தொடங்க அற்புதமான காலம். தொட்டது துலங்கும். நஷ்டத்தில் சென்றுக் கொண்டிருந்த தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத லாபம் அதிகரிக்கும். அதேபோல், குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 11 வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால், கடன் பிரச்சனை முழுவதுமாக விலகும். பணவரவு அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். அடகு வைத்த தங்க நகைகள் மீட்கப்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக சுய ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெறும். புதிய நட்பு அறிமுகமாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த மனக்குழப்பத்தில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவீர்கள். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் அற்புதமாக காலம் என்றே சொல்லலாம்.