குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் மீனம் | Meenam Guru Peyarchi Palan 2023 to 2024
வியாழன் கிரகம் தான் தேவர்களின் ‘குரு’ என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது எடுத்துக் கொள்வார்.
அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் மீனம்
குரு பகவான் உங்க ராசிக்கு சுய ஸ்தானத்திலிருந்து 2வது வீடான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். 12 வருடங்களுக்கு பிறகு உங்க ராசிக்கு 2வது இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பல நன்மைகளை அளிக்கவுள்ளார். பொருளாதார ரீதியான தட்டுப்பாடு, தடை, தாமதம் விலகி முன்னேற்றம் ஏற்படும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். இருப்பினும், விரைய சனி காலம் என்பதால், விரைய செலவுகள் அதிகரித்தே காணப்படும். அதாவது, வரவு இரு மடங்காக இருந்தால் ஒரு மடங்கு செலவுக்கே போய்விடும். எனவே, பார்த்து பக்குவமாக செலவுகளை செய்ய வேண்டும். வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
பேச்சினால் பல இடங்களில் பிரச்சனை, அவமானம் ஏற்பட்டிருக்கும். எதிரிகள் தொல்லை தலைவலியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்தும் விலகி அமைதியான சூழல் உருவாகும். எதிர்கள் நண்பர்களாகவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் விரைவில் நடந்து முடியும். சிலருக்கு புது வீட்டுக்கு குடியேறும் யோகம் உண்டு. வியாபாரத்தில் இருந்து வந்த மந்தத்தன்மை, நெருக்கடி, இழுபறிகள் அனைத்தும் விலகி சுமூகமாக நிலைக்கு வரும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை இருந்த வண்ணம் இருக்கும்.
கைக்கு வராமல் இழுத்தடித்த பணவரவு வசூலாகும். பணியிடத்தில் இருந்த சம்பள பிரச்சனை நீங்கி புதிய பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வேலையிழந்தவர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாத மீன ராசியினருக்கு குழந்தை பிறக்கும். புதிய வேலையில் சேர விரும்புவோருக்கு நல்ல காலக்கட்டம். அதேபோல், குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 6வது வீடான ருணரோக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால், மருத்துவ செலவுகள் குறையும். வீண் தகராறுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. புதிய தொழில் இறங்குவதை தவிர்க்க வேண்டும்.
கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பெரிய முதலீடுகளில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 8வது வீட்டை பார்வையிடுவதால், தூக்கமின்மையால் அவதிபட்டு வந்த மீன ராசியினருக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. வழக்கு பிரச்சனைகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பு.
மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக ராசிக்கு 10வது வீடான ஜீவன ஸ்தானத்தை பார்வையிடுவதால், சொந்த தொழில் செய்வோருக்கு வளர்ச்சி பெருகும். சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனை முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும் வாய்ப்புண்டு. நண்பர்கள் வழியில் ஆதாயம் அதிகரிக்கும். ஆக மொத்த இந்த குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு 70% நன்மை உண்டு.
பரிகாரம்
7 வாரம் வியாழக்கிழமை தோறும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து வருவது சிறப்பான பலனை தரும். அல்லது விஷ்ணு சரசுநாமத்தை பாராயணம் செய்யலாம். அதேசமயம் குலத்தெய்வ வழிபாடு செய்வதும் யோக பலன்களை கொடுக்கும்.