குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் ரிஷபம் | Rishabam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் ரிஷபம் | Rishabam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

வியாழன் கிரகம் தான் தேவர்களின் ‘குரு’ என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 1 வருடம் எடுத்துக் கொள்வார். அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினரே! எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவீர்கள். எதற்காகவும் ஆத்திரம்படவும் மாட்டீர்கள். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது உங்களுக்கு மட்டுமே பொருந்தும். பொறுமையின் சிகரமென்றே உங்களை சொல்லலாம். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தே செயல்படுவீர்கள். எந்த கஷ்டம் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற மனஉறுதி படைத்தவர். கிட்டத்தட்ட அனைத்து விஷயத்திலும் சரிசமமாக பார்க்கும் மனநிலைப்படைத்தவர்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. அதாவது, குரு பகவான் உங்க ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் அமருகிறார். இது பயணங்களை குறிக்ககூடிய இடமாக உள்ளது. இதனால், அடிக்கடி நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பல சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கையுடன் பரிகாரம் செய்யக்கூடிய அளவிற்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

இருப்பினும், விரைய ஸ்தானம் என்று கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், குரு சுப கிரகம் என்பதால் சுப செலவுகளை மட்டுமே உருவாக்குவார். அதாவது எதிர்பாரா திருமண செலவுகள், குழந்தை பிறப்பு செலவுகள் ஏற்படும். சிலருக்கு குடும்ப சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்கும் நிலையும் ஏற்படும். ஆனால், குறித்த காலத்தில் அந்த கடனை திருப்பி கொடுத்துவிடுவீர்கள்.

சந்தோஷம், குதூகலம், கேளிக்கை நிறைந்த ஆண்டாக இருக்கும். இந்த காலத்தில் பாஸ்போர்ட், விசா எடுக்க நினைப்பவர்களுக்கு மிக எளிதாக கிடைத்துவிடும். சிலருக்கு வெளிநாடுகளில் கல்வி வாய்ப்புகள் அமையக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மேலும், 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்க ராசிக்கு 5 ஆம் பார்வையாக 4 ஆம் இடம் என்னும் சுப ஸ்தானம், வீடு ஸ்தானம், வாகன ஸ்தானம், வியாபார ஸ்தானம், தாயார் ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

இதனால், நீண்டநாட்களாக இருந்த உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சில ரிஷப ராசியினருக்கு புதிய வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. இருப்பினும், புதுவீடு கட்டும்போது செலவுகள் மிகுந்து காணப்படும். தாயாரின் சொத்து உங்களுக்கு கிடைக்கூடிய வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு வியாபாரம் விருத்தி பெறும். புதிய தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்த வந்த இடஞ்சல்கள், நெருக்கடிகள் அனைத்தும் விலகும்.

மேலும், இந்த காலக்கட்டத்தில் உங்களுடன் நட்பாக பழகியவர்களின் போலி முகம் வெளிச்சத்திற்கு வரும், கவனமாக இருங்கள். 2023ல் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும். குறிப்பாக, இந்த காலத்தில் தொழில் ரகசியம், குடும்ப ரகசியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஆராய்ச்சி தொடர்பான படிப்பில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலம். விலையுயர்ந்த பொருட்களை அணிந்து கொண்டு பயணங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்:

  • ஒருமுறையாவது ஆலங்குடிக்கு சென்று குருபகவானை வழிபாடு செய்துவிட்டு வருவது மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்கும். அல்லது
  • ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரையும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் சனிக்கிழமை நாட்களில் வழிபாடு செய்து வாருங்கள்.