திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்:
- திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயம்… இங்கே முருகப்பெருமானுக்கும் தேவயானைக்கும் திருமணம் நடந்தது என்பது நாம் அறிந்ததே! இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது திருமணத்தடையை நீக்கும்.
- திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், திருமணத் தடைகளை முற்றிலுமாக அகற்றி திருமணத்தை விரைவாக நடத்தி தரக்கூடிய ஆலயம். கருமாரி அம்மனை தரிசித்து வேண்டுதல் வைத்து வந்தால் உடனே திருமணம் நடக்கும்.
- திருமணஞ்சேரி என்னும் திருத்தலம், கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. இந்தத் திருத்தலம் திருமணத் தடைகளை அகற்றி திருமணத்தை நடத்தித் தரும் என்பது உலகறிந்தது! இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தாலே தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை!
- கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் என்னும் ஊரில் இருக்கக்கூடிய ஆலயம், இங்கு இறைவன் உமா மகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அன்னை அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் போல் இருப்பதால் இந்தத் தலம் திருமணத் தடைகளை அகற்றி விரைவாக திருமணம் நடத்தி தரும் ஆலயம் என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனையும் பராசக்தியையும் வணங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
- சென்னை – மகாபலிபுரம் சாலையில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் ஆலயத்தில் பெருமாளை சேவித்து வேண்டுதல் வைத்து வந்தால் விரைவாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோயில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தித்து வருவது நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடும் திருமணத் தடையை அகற்றி வம்சம் செழிக்க வழிவகை செய்யும். எனவே தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., திருமணத்தடை மட்டுமல்லாமல், குடும்ப வளர்ச்சி, வம்சவிருத்தி போன்றவற்றுக்கும் துணையாக இருக்கும்.
மேலும் ஒரு சில பரிகாரங்கள்
- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது,
- புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது,
- கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாகும்.