Arupadai Veedu Konda Thiru Muruga

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு – அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது – நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து – நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை – எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு – கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு – உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு – வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து – வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை – எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு – நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)