நமச்சிவாயத் திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan Lyrics Tamil
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்து
ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
திருச்சிற்றம்பலம்