அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali)
திருமுறை : ஏழாம்-திருமுறை | நெய்யும் பாலுந்
அ௫ளியவர் : சுந்தரர், பண் : இந்தளம்
நாடு : தொண்டைநாடு
தலம் : கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்)
வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் திரு ஓணகாந்தன் தளி | நெய்யும் பாலும் பதிகம்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யின் அல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் தளியு ளீரே. 1
திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரள வீசுங்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே. 2
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி யும்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஓண காந்தன் தளியு ளீரே. 3
வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
பல்லை யுக்கப் படுத லையிற்
பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் தளியு ளீரே. 4
கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓண காந்தன் தளியு ளீரே. 5
வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்
மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்
தைய லாள்உல குய்ய வைத்த
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
ஓண காந்தன் தளியு ளீரே. 6
பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை அன்றே எம்பெ ருமான்
ஓண காந்தன் தளியு ளீரே. 7
வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைஅ மைத்த சிந்தை யாலே
திருவ டிதொழு துய்யி னல்லாற்
கலைஅ மைத்த காமச் செற்றக்
குரோத லோப மதம வரூடை
உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன்
ஓண காந்தன் தளியு ளீரே. 8
வார மாகித் திருவ டிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊரும் காடு உடையும் தோலே
ஓண காந்தன் தளியு ளீரே. 9
ஓவ ணமேல் எருதொன் றேறும்
ஓண காந்தன் றளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய் தாளுங்கொண்ட
வரைது கில்லொடு பட்டு வீக்கிக்
கோவ ணமேற் கொண்ட வேடம்
கோவை யாகஆ ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. 10