- உடல்பொய்யுறவு
உடல்பொய் யுறவாயின் உண்மையுற வாகக்
கடவாரார் தண்ணருளே கண்டாய் – திடமுடனே
உற்றுப்பார் மோனன் ஒருசொல்லே உண்மைநன்றாய்ப்
பற்றிப்பார் மற்றவெல்லாம் பாழ். 1.
பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின்
சீராக நிற்குந் திறங்கண்டாய் – நேராக
நிற்குந் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பதல்லால்
கற்குநெறி யாதினிமேற் காண். 2.
மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்
பொய்யான தன்மை பொருந்துமோ – ஐயாவே
மன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமை
என்னும்நிலை எய்துமா றென். 3.
அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங்
குறியேற் கறிவென்ற கோலம் – வறிதேயாம்
நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென்
றேயெனக்கோர் நாமமிட்ட தே. 4.
ஏதுக்குச் சும்மா இருமனமே என்றுனக்குப்
போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய்-வாதுக்கு
வந்தெதிர்த்த மல்லரைப்போல் வாதாடி னாயேயுன்
புந்தியென்ன போதமென்ன போ. 5.
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண். 6.
கற்கண்டோ தேனோ கனிரசமோ பாலோஎன்
சொற்கண்டா தேதெனநான் சொல்லுவேன் – விற்கண்ட
வானமதி காண மவுனிமவு னத்தளித்த
தானமதில் ஊறும்அமிர் தம். 7.
கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால்
வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ-நாட்டமுற்று
மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான்
பொய்யாம் பிறப்பிறப்புப் போம். 8.
மாயா சகத்தை மதியாதார் மண்முதலா
யேயான தத்துவத்தில் எய்துவரோ-நேயானு
பூதிநிலை நிற்கப் பொருந்துவர்கள் அன்னவர்தம்
நீதியையே ஓர்மனமே நீ. 9.
இகமுழுதும் பொய்யெனவே ஏய்ந்துணர்ந்தா லாங்கே
மிகவளர வந்தஅருள் மெய்யே-அகநெகிழப்
பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தைச்
சேரீர் அதுவே திறம். 10.
ஆரணங்கள் ஆகமங்கள் யாவுமே ஆனந்த
பூரணமே உண்மைப் பொருளென்னுங்-காரணத்தை
ஓராயோ உள்ளுள்ளே உற்றுணர்ந்தவ் வுண்மையினைப்
பாராயோ நெஞ்சே பகர். 11.
நேராயம் மௌனநிலை நில்லாமல் வாய்பேசி
ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர்-தேரீர்
திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
கரையுங் கரையுமனக் கல். 12.
அற்ப மனமே அகிலவாழ் வத்தனையுஞ்
சொற்பனங்கண் டாயுண்மை சொன்னேன்நான்-கற்பனையொன்
றில்லா இடத்தே எனைச்சும்மா வைத்திருக்கக்
கல்லாய்நீ தானோர் கவி. 13.
ஏதுந் திருவருளின் இச்சையாம் என்றென்றெப்
போதும் பொருந்தும் புனிதர்பால்-தீதுநெறி
செல்லுமோ செல்லாதே செல்லுமிடம் இன்பமலால்
சொல்லுமோ வேதத் தொனி. 14.
கல்லேறுஞ் சில்லேறுங் கட்டியே றும்போலச்
சொல்லேறப் பாழ்த்த துளைச்செவிகொண்-டல்லேறு
நெஞ்சனென நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே
வஞ்சனல்லேன் நீயெ மதி. 15.
அப்பொருளும் ஆன்மாவும் ஆரணநூல் சொன்னபடி
தப்பில்லாச் சித்தொன்றாஞ் சாதியினால்-எப்படியுங்
தேரில் துவிதஞ் சிவாகமமே சொல்லுநிட்டை
ஆருமிடத் தத்துவித மாம். 16.
வேத முதலாய் விளங்குஞ் சிவவடிவாம்
போத நிலையிற் பொருந்தாமல்-ஏதமிகு
மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சேஇத்
தேகாதி மெய்யோ தெளி. 17.
நோக்கற் கரிதான நுண்ணியவான் மோனநிலை
தாக்கற் குபாயஞ் சமைத்தபிரான்-காக்குமுயிர்
அத்தனைக்கும் நானடிமை ஆதலினால் யானெனதென்
றித்தனைக்கும் பேசஇட மில். 18.
ஒன்றுமற நில்லென் றுணர்த்தியநம் மோனகுரு
தன்துணைத்தாள் நீடுழி தாம்வாழ்க-என்றென்றே
திக்கனைத்துங் கைகுவிக்குஞ் சின்மயராந் தன்மையர்க்கே
கைக்குவரும் இன்பக் கனி. 19.
மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன
இனத்தாரே நல்ல இனத்தார்-கனத்தபுகழ்
கொணடவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி
கண்டவரும் அன்னவரே காண். 20.
கண்ணொளியே மோனக் கரும்பே கவலையறப்
பண்ணொளிக்கும் உள்ளளியாம் பான்மையினை-நண்ணிடவுன்
சித்த மிரங்கிலதென் சித்தந் தெளியாவே
றித்தனைக்கும் ஆதரவும் இல். 21.
அறியாமை சாரின் அதுவாய் அறிவாம்
நெறியான போததுவாய் நிற்குங்-குறியால்
சதசத் தருளுணர்த்தத் தானுணரா நின்ற
விதமுற் றறிவெனும்பேர் மெய். 22.
குருலிங்க சங்கமமாக் கொண்டதிரு மேனி
கருவொன்று மேனிநம்பாற் காட்டா-தருளென்று
கண்டவர்க்கே ஆனந்தங் கண்டுகொள லாம்அலது
கொண்டவர்க்கிங் கென்னகிடைக் கும். 23.
புலியின் அதளுடையான் பூதப் படையான்
பலியிரந்தும் எல்லாம் பரிப்பான்-மலிபுனல்சேர்
பொன்முடியான் முக்கட் புனிதன் சரண்புகுந்தோர்க்
கென்முடியா தேதுமுள தே. 24.
சொல்லுக் கடங்காச் சுகப்பொருளை நாமெனவே
அல்லும் பகலும் அரற்றுவதென்-நல்லசிவ
ஞானமயம் பெற்றோர்கள் நாமில்லை என்பர்அந்தோ
மோனமய மான முறை. 25.
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக வோர்சொல் விளம்பினர்யார்-வையகத்தோர்
சாற்றரிதென் றேசற்றார் தன்னனையாய் முக்கண்எந்தை
நாற்றிசைக்கும் கைகாட்டி னான். 26.
காதற்றுப் போனமுறி கட்டிவைத்தால் ஆவதுண்டோ
தீ தற்ற காயமும்அச் செய்கையே-போதமாய்
நிற்பரல்லால் இச்சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினுந்
தற்பரமாக் கண்டிருப்பார் தாம். 27.
வெள்ளங் குலாவுசடை வெள்ளக் கருணையினான்
கள்ளங் குலாவுவஞ்சக் கள்ளனேன் – உள்ளத்தில்
இல்லனென்றால் அன்னவன்றான் எங்கும் வியாபகத்தான்
அல்லனென்றுஞ் சொல்லவழக் காம். 28.
தத்துவப்பே யோடே தலையடித்துக் கொள்ளாமல்
வைத்த அருள்மோன வள்ளலையே-நித்தம்அன்பு
பூணக் கருதுநெஞ்சு போற்றக் கரமெழும்பும்
காணத் துடிக்குமிரு கண். 29.
தொல்லைவினைக் கீடாய்ச் சுழல்கின்ற நானொருவன்
எல்லையிலா நின்கருணை எய்துவனோ-வல்லவனாம்
மோன குருவே முழுதினையுந் தானுணர்ந்த
ஞான குருவே நவில். 30.
மூன்றுகண்ணா முத்தொழிலா மும்முதலா மூவுலகுந்
தோன்றக் கருணைபொழி தோன்றலே-ஈன்றஅன்னை
தன்னைப்போல் அன்பு தழைத்தோய் ஒருதெய்வம்
உன்னைப்போ லுண்டோ வுரை. 31.
நேசிக்குஞ் சிந்தை நினைவுக்குள் உன்னைவைத்துப்
பூசிக்குந் தான்நிறைந்து பூரணமாய்-யோசித்து
நின்றதல்லால் மோனா நிருவிகற்ப நிட்டைநிலை
என்றுவரு மோஅறியே னே. 32.
அறிவில் அறியாமை அற்றறிவாய் நின்று
பிறிவறஆ னந்தமயம் பெற்றுக்-குறியவிழ்ந்தால்
அன்றைக் குடல்வேண்டேன் ஐயாஇவ் ஆக்கையையே.
என்றைக்கும் வேண்டுவனே யான். 33.
உடலைப் பழ்¢த்திங் குணவுங் கொடாமல்
விடவிடவே நாடுவரோ மெய்யைப்-படபடென
வேண்டுவேன் இந்தவுடல் மெய்யுணராப் பொய்யன்நான்
ஆண்டநீ தானே அறி. 34.
அறியாயோ என்னையுநீ ஆண்டநீ சுத்த
வெறியாய் மயங்கவுமேன் விட்டாய்-நெறிமயங்கிக்
குன்றுஞ் செடியுங் குறுகுமோ ஐயாவே
கன்றுகெட்டால் தாயருகே காண். 35.
ஏதுக் குடற்சுமைகொண் டேனிருந்தேன் ஐயனே
ஆதிக்க மோன அருள்தாயே-சோதியாம்
மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே
பின்னமற நில்லாத பின். 36.
பின்னும் உடற்சுமையாப் பேசும் வழக்கதனால்
என்னபலன் நாமுற் றிருந்தோமே-அன்னதனால்
ஆனந்தந் தானேதாம் ஆகுமெம் ஐயனே
ஏனிந்தத் துன்பம் இனி. 37.
துன்பக் கடலில் திளைந்ததெலாந் தீர்ந்ததே
இன்பக் கடலில் இருமென்ன-அன்பில்
கரைந்து கரைந்துருகிக் கண்ணருவி காட்ட
விரைந்துவரும் ஆனந்தே மே. 38.
கரைந்து கரைந்துருகிக் கண்ணீரா றாக
விரைந்தே நிருவிற்கப மெய்த-நிரந்தரமும்
நின்னையே ச்¢ந்திக்க நீகொடுத்தாய் மோனாநான்
என்னைமுழு துங்கொடுத்தே னே. 39.
அல்லும் பகலும்பே ரன்புடனே தானிருந்தால்
கல்லும் உருகாதோ கல்நெஞ்சே-பொல்லாத
தப்புவழி என்நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த
எய்ப்பிலே ஆனந்த மே. 40.
கொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம்
மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே-அடுத்தேனே
பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மஅல்லல்
இற்றேனே ஏழைஅடி யேன். 41.
பெற்றோம் பிறவாமை பேசாமை யாயிருக்கக்
கற்றோம் எனவுரைக்கக் காரியமென்-சற்றேனும்
நீக்கற்ற இன்ப நிலைபொருந்தி ஏசற்று
வாக்கற்றாற் பேசுமோ வாய். 42.
காலன் தனையுதைத்தான் காமன் தனையெரித்தான்
பாலன் பசிக்கிரங்கிப் பாற்கடலை-ஞாலமெச்சப்
பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்
கென்னே நடக்கை யினி. 43.
விண்ணருவி மேன்மேல் விளங்குவபோ லேஇரண்டு
கண்ணருவி வெள்ளமொடு கைகூப்பித்-தண்ணயிர்த
வெள்ளமே ஆனந்த வெற்பே எனத்தொழுவோர்
உள்ளமே ஞான வொளி. 44.
பிள்ளைமதிச் செஞ்சடையான் பேசாப் பெருமையினான்
கள்ளவிழும் பூங்கொன்றைக் கண்ணியான்-உள்ளபடி
கல்லாலின் கீழிருந்து கற்பித்தான் ஓர்வசனம்
எல்லாரும் ஈடேற வே. 45.
புலனைந்துந் தானே பொரமயங்கிச் சிந்தை
அலமந் துழலும் அடிமை – நலமிகுந்த
சித்தான மோன சிவனேநின் சேவடிக்கே
பித்தானால் உண்டோ பிறப்பு. 46.
நிறைகுடந்தான் நீர்கொளுமோ நிச்சயமா மோன
முறையுணர்ந்தார் யாதை முயல்வார்-பிறையணிந்த
மிக்ககயி லாயமலை வித்தகனே வேதியனே
செக்கரணி மேனியனே செப்பு. 47.
துங்கமழு மானுடையாய் சூலப் படையுடையாய்
திங்களணி செஞ்சுடையாய் சேவுடையாய்-மங்கையொரு
பாலுடையாய் செங்கட் பணியாய்என் சென்னியின்மேல்
காலுடையாய் நீயே கதி. 48.
இனிய கருணைமுகில் எம்பிரான் முக்கட்
கனியமிர்த வாரியின்பக் கட்டி-தனிமுதல்வன்
நித்தன் பரமன் நிமலன்நிறை வாய்நிறைந்த
சுத்தன் நமக்கென்றுந் துணை. 49.
நீதியாய்க் கல்லாலின் நீழலின்கீ ழேயிருந்து
போதியா உண்மையெல்லாம் போதித்தான் – ஏதில்
சனகாதி யாய தவத்தோர்க்கு ஞான
தினகரனாம் மவுன சிவன். 50.
தேகச் செயல்தானுஞ் சிந்தையுட னேகுழையில்
யோகநிலை ஞானிகளுக் கொப்புவதோ-மோகநிலை
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீயற்ற
எல்லையிலே சும்மா இரு. 51.
சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே
இம்மாயா யோகமினி ஏனடா-தம்மறிவின்
சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம
நிட்டா சிறுபிள்ளாய் நீ. 52.
நீயற்ற அந்நிலையே நிட்டையதில் நீயிலையோ
வாயற் றவனே மயங்காதே போயற்
றிருந்தாலும் நீபோகாய் என்றுமுள்ளாய் சும்மா
வருந்தாதே இன்பமுண்டு வா. 53.
வாவாவென் றின்பம் வரவழைக்குங் கண்ணீரோ
டாவாவென் றேயழுத அப்பனே-நீவாடா
எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி
நில்லாய் அதுவே நிலை. 54.
நில்லாப் பொருளை நினையாதே நின்னையுள்ளோர்
சொல்லாப் பொருட்டிரளைச் சொல்லாதே-கல்லாத
சிந்தை குழைந்துசுகஞ் சேரக் குருவருளால்
வந்தவழி நல்ல வழி. 55.
வழியிதென்றும் அல்லா வழியிதென்றுஞ் சொல்லில்
பழிபழியாம் நல்லருளாற் பார்த்தோர்-மொழியுனக்கே
ஏற்றிருக்கச் சொன்னவன்றே எங்கும் பெருவெளியாம்
பார்த்தவிட மெல்லாநீ பார். 56.
பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல்
ஆருந் துறக்கை அரிதரிது-நேரே
மனத்துறவும் அப்படியே மாணா இவற்றில்
உனக்கிசைந்த வாறொன்றே ஓர். 57.
ஓராம லேஒருகால் உன்னாமல் உள்ளளியைப்
பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால்-வாராதோ
பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்தவெள்ளந்
தத்திக் கரைபுரண்டு தான். 58.
தானான தன்மைவந்து தாக்கினால் அவ்விடத்தே
வானாதி மாயை வழங்காதோ-ஞானாகேள்
உன்னுள்ளே தோன்றா வுறவாகி நின்றதென
என்னுள்ளே யென்று மிரு. 59.
என்னையுன்னை இன்னதிது என்னாமல் நிற்குநிலை
தன்னையரு ளென்ற தருணத்தில்-அன்னைபெற்ற
பிள்ளைக்குஞ் சொல்லாத பெற்றிகண்டாய் ஐயனே
உள்ளத்தின் உள்ளே உணர். 60.
சொன்னவர்தாம் நிட்டை தொகுத்திரார் நிட்டையிலே
மன்னினவர் போதியார் மாமவுனன்-தன்னுள்
விருப்பாகக் கைகாட்டி மிக்கவட நீழல்
இருப்பான் நிருவிகற்பத் தே. 61.
இந்த நிருவிகற்பத் தெந்தை யிருக்கநிட்டை
சிந்தைநீ தேறாய் செகமனைத்தும்-வந்ததொடர்ப்
பாடுகெட அன்றோவோர் பாத்திரத்துக் காடல்அல்லால்
ஆடுவதேன் ஆட்டு மவன். 62.
அவனே பரமும் அவனே குருவும்
அவனே அகில மனைத்தும்-அவனேதாம்
ஆனவரே சொன்னால் அவனே குருவெனக்கு
நான்அவனாய் நிற்பதெந்த நாள். 63.
நாளவங்கள் போகாமல் நாள்தோறும் நந்தமையே
ஆளவந்தார் தாளின்கீழ் ஆட்புகுந்தாய்-மீளஉன்னைக்
காட்டாமல் நிற்குங் கருத்தறிந்தால் நெஞ்சேஉன்
ஆள்தானான் ஐயமில்லை யால். 64.
யான்தான் எனல்அறவே இன்பநிட்டை என்றருணைக்
கோன்றா னுரைத்தமொழி கொள்ளாயோ-தோன்றி
இழுக்கடித்தாய் நெஞ்சேநீ என்கலைகள் சோர
அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய். 65.
எங்குஞ் சிவமே இரண்டற்று நிற்கில்நெஞ்சே
தங்குஞ் சுகநீ சலியாதே-அங்கிங்கென்
றெண்ணாதே பாழி லிறந்து பிறந்துழலப்
பண்ணாதே யானுன் பரம். 66.
மெய்யைப்பொய் என்றிடவும் மெய்யணையாப் பொய்ந்நெஞ்சே
பொய்யைத்தான் மெய்எனவும் போகுமோ-ஐயமறத்
தன்மயத்தை மெய்யெனவே சார்ந்தனையேல் ஆனந்தம்
என்மயமும் நின்மயமு மே. 67.
பூங்கா வனநிழலும் புத்தமுதுஞ் சாந்தபதம்
வாங்காத ஆனந்த மாமழையும்-நீங்காவாஞ்
சொல்லிறந்து மாண்டவர்போல் தூமவுன பூமியினான்
இல்லையென நின்ற இடம். 68.
இடம்கானம் நல்லபொரு ளின்பம் எனக்கேவல்
அடங்காக் கருவி அனைத்தும்-உடனுதவ
மந்தார தாருவென வந்து மவுனகுரு
தந்தானோர் சொற்கொண்டு தான். 69.
தானந் தவம்ஞானஞ் சாற்றரிய சித்திமுத்தி
ஆனவையெல் லாந்தாமே யாகுமே-மோனகுரு
சொன்னவொரு சொல்லாற் சுகமா யிருமனமே
இன்ன மயக்கமுனக் கேன். 70.
உன்னை உடலை உறுபொருளைத் தாஎனவே
என்னை அடிமைக் கிருத்தினான்-சொன்னஒரு
சொல்லை மறவாமல் தோய்ந்தால்நெஞ் சேஉன்னால்
இல்லை பிறப்பதெனக் கே. 71.
எனக்கும் உனக்கும்உற வில்லையெனத் தேர்ந்து
நினைக்கஅரி தானஇன்ப நிட்டை-தனைக்கொடுத்தே
ஆசான் மவுனி அளித்தான்நெஞ் சேஉனையோர்
காசா மதியேன்நான் காண். 72.
ஆனந்த மோனகுரு வாமெனவே என்னறிவின்
மோனந் தனக்கிசைய முற்றியதால்-தேனுந்து
சொல்லெல்லாம் மோனந் தொழிலாதி யும்மோனம்
எல்லாம்நல் மோனவடி வே. 73.
எல்லாமே மோனநிறை வெய்துதலால் எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார்-பொல்லாத
நானெனஇங் கொன்றை நடுவே முளைக்கவிட்டிங்
கேனலைந்தேன் மோனகுரு வே. 74.
மோன குருவளித்த மோனமே யானந்தம்
ஞானம் அருளுமது நானுமது-வானாதி
நின்ற நிலையுமது நெஞ்சப் பிறப்புமது
என்றறிந்தேன் ஆனந்த மே. 75.
அறிந்தஅறி வெல்லாம் அறிவன்றி யில்லை
மறிந்தமனம் அற்ற மவுனஞ்-செறிந்திடவே
நாட்டினான் ஆனந்த நாட்டிற் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு. 76.
குருவாகித் தண்ணருளைக் கூறுமுன்னே மோனா
உருநீ டுயிர்பொருளும் ஒக்கத்-தருதியென
வாங்கினையே வேறும்உண்மை வைத்திடவுங் கேட்டிடவும்
ஈங்கொருவர் உண்டோ இனி. 77.
இனிய கருப்புவட்டை என்னாவி லிட்டான்
நனியிரதம் மாறாது நானுந்-தனியிருக்கப்
பெற்றிலேன் மோனம் பிறந்தஅன்றே மோனமல்லால்
கற்றிலேன் ஏதுங் கதி. 78.
ஏதுக்குஞ் சும்மா இருநீ எனவுரைத்த
சூதுக்கோ தோன்றாத் துணையாகிப்-போதித்து
நின்றதற்கோ என்ஐயா நீக்கிப் பிரியாமல்
கொன்றதற்கோ பேசாக் குறி. 79.
குறியுங் குணமுமறக் கூடாத கூட்டத்
தறிவறிவாய் நின்றுவிட ஆங்கே-பிறிவறவுஞ்
சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோனநின்பால்
கைம்மாறு நானொழிதல் காண். 80.
நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால் என்னாணை
வானதான் எனநிறைய மாட்டாய்நீ-ஊன்றாமல்
வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
துய்த்துவிடும் ஞான சுகம். 81.
ஞானநெறிக் கேற்றகுரு நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமந் தழைத்தகுரு-மானமொடு
தாயெனவும் தந்தென்னைத் தந்தகுரு என்சிந்தை
கோயிலென வாழுங் குரு. 82.
சித்துஞ் சடமுஞ் சிவத்தைவிட இல்லைஎன்ற
நித்தன் பரமகுரு நேசத்தாற்-சுத்தநிலை
பெற்றோமே நெஞ்சே பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் கரு. 83.