- எடுத்த தேகம்
எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீ
எனக்கொன் றில்லை எனமோன நன்னெறி
கொடுத்த போது கொடுத்ததன் றோபினுங்
குளறி நானென்று கூத்தாட மாயையை
விடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலை
விலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத்
தடுத்த வாறும் புகலாய் சிரகிரித்
தாயுமான தயாபர மூர்த்தியே. 1.
நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின்
நூலிற் சொன்ன முறைஇய மாதிநான்
தோயும் வண்ணம் எனைக்காக்குங் காவலுந்
தொழும்பு கொள்ளுஞ் சுவாமியு நீகண்டாய்
ஓயுஞ் சன்மம் இனியஞ்சல் அஞ்சலென்
றுலகங்கண்டு தொழவோர் உருவிலே
தாயுந் தந்தையும் ஆனோய் சிரகிரித்திடமுறவே
தாயு மான தயாபர மூர்த்தியே. 2.