- பொருளியல்பு
கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ. 1.
கேடில்பசு பாசமெல்லாங் கீழ்ப்படவுந் தானேமேல்
ஆடுஞ் சுகப்பொருளுக் கன்புறுவ தெந்நாளோ. 2.
ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐவகையாக்
காணவத்தைக் கப்பாலைக் காணுநாள் எந்நாளோ. 3.
நீக்கப் பிரியா நினைக்கமறக் கக்கூடாப்
போக்குவர வற்ற பொருளணைவ தெந்நாளோ. 4.
அண்டருக்கும் எய்ப்பில்வைப்பாம் ஆரமுதை என்அகத்தில்
கண்டுகொண்டு நின்று களிக்கும்நாள் எந்நாளோ. 5.
காட்டுந் திருவருளே கண்ணாகக் கண்டுபர
வீட்டின்ப மெய்ப்பொருளை மேவுநாள் எந்நாளோ. 6.
நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ. 7.
சிந்தை மறந்து திருவருளாய் நிற்பவர்பால்
வந்தபொருள் எம்மையுந்தான் வாழ்விப்ப தெந்நாளோ. 8.
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் வியாபகமாய்
உள்ளஒன்றை உள்ளபடி ஓருநாள் எந்நாளோ. 9.
அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ. 10.
ஆரணமுங் காணா அகண்டிதா காரபரி
பூரணம்வந் தெம்மைப் பொருந்துநாள் எந்நாளோ. 11.
சத்தொடுசித் தாகித் தயங்கியஆ னந்தபரி
சுத்த அகண்டசிவந் தோன்றுநாள் எந்நாளோ. 12.
எங்கெங்கும் பார்த்தாலும் இன்புருவாய் நீக்கமின்றித்
தங்குந் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளோ. 13.
அடிமுடிகாட் டாதசுத்த அம்பரமாஞ் சோதிக்
கடுவெளிவந் தென்னைக் கலக்குநாள் எந்நாளோ. 14.
ஒன்றனையுங் காட்டா உளத்திருளைச் சூறையிட்டு
நின்றபரஞ் சோதியுடன் நிற்குநாள் எந்நாளோ. 15.
எந்தச் சமயம் இசைந்தும்அறி வூடறிவாய்
வந்தபொரு ளேபொருளா வாஞ்சிப்ப தெந்நாளோ. 16.
எவ்வாறிங் குற்றுணர்ந்தார் யாவர் அவர்தமக்கே
அவ்வாறாய் நின்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ. 17.
பெண்ணாண் அலியெனவும் பேசாமல் என்அறிவின்
கண்ணூடே நின்றஒன்றைக் காணுநாள் எந்நாளோ. 18.
நினைப்பும் மறப்பும்அற நின்றபரஞ் சோதி
தனைப்புலமா என்னறிவிற் சந்திப்ப தெந்நாளோ. 19.