- ஏசற்ற அந்நிலை
ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய்
மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமே
ஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால்
பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே. 1.
பாழாகி அண்டப் பரப்பை எலாம் வாய்மடுத்தும்
ஆழாழி இன்பத் தழுந்தப் படியாயோ
தாழாயோ எந்தையருள் தாள்கீழ்நெஞ் சேஎனைப்போல்
வாழாது வாழ்ந்தழியா வண்ண மிருப்பாயே. 2.
இருப்பாய் இருந்திடப்பே ரின்பவெளிக் கேநமக்குக்
குருப்பார்வை யல்லாமற் கூடக் கிடைத்திடுமோ
அருட்பாய் நமக்காக ஆளவந்தார் பொன்னடிக்கீழ்
மருட்பேயர் போலிருக்க வாகண்டாய் வஞ்சநெஞ்சே. 3.
வஞ்சமோ பண்டையுள வாதனையால் நீஅலைந்து
கொஞ்சமுற் றாயுன்னைக் குறைசொல்ல வாயுமுண்டோ
அஞ்சல் அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த மாகடற்கீழ்
நெஞ்சமே என்போல நீயழுந்த வாராயோ. 4.
வாரா வரவாய் வடநிழற்கீழ் வீற்றிருந்த
பூராயம் ந்ம்மைப் புலப்படுத்த வேண்டியன்றோ
ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து
பாராயோ அவ்வுருவைப் பார்க்கநிறை வாய்விடுமே. 5.
வாயாதோ இன்பவெள்ளம் வந்துன் வழியாகப்
பாயாதோ நானும் பயிராய்ப் பிழையேனோ
ஓயாமல் உன்னி உருகுநெஞ்சே அந்நிலைக்கே
தாயான மோனனருள் சந்திக்க வந்திடுமே. 6.
வந்த வரவை மறந்துலகாய் வாழ்ந்துகன்ம
பந்தமுற உன்னைப் படிப்பிக்கக் கற்றவர்யார்
இந்தமதி ஏன்உனக்கிங் கென்மதிகேள் என்னாலே
சந்ததநெஞ் சேபரத்திற் சாரின்இன்பம் உண்டாமே. 7.
இன்பமய மாயுலக மெல்லாம் பிழைப்பதற்குன்
அன்புநிலை என்பார் அதுவும்நினை யன்றியுண்டோ
உன்புலத்தை ஓரின்அருட் கொப்பாவாய் நெஞ்சேநீ
தென்புலத்தா ரோடிருந்து செய்பூசை கொண்டருளே. 8.
அருளேயோ ராலயமா ஆனந்த மாயிருந்த
பொருளோடு யானிருக்கப் போயொளித்த நெஞ்சேநீ
மருள்தீர் முயற்கோடோ வான்மலரோ பேய்த்தேரோ
இருள்தீர நீயுறைந்த தெவ்விடமோ காணேனே. 9.
எவ்விடத்தும் பூரணமாம் எந்தைபிரான் தண்ணருளே
அவ்விடத்தே உன்னைநெஞ்சே ஆராயிற் கண்டிலனே
அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமுஞ்
செவ்விடமே நீயுஞ் செனனமற்று வாழியவே. 10.