Thayumanavar Songs – காடுங்கரையும்

  1. காடுங்கரையும்

காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே

ஓடுந் தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவா யுயிர்க்குயிராய்

ஆடுங் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற் கன்புநிலை

தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாருஞ் சகத்தீரே. 1.

சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக்

கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப்

பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதருந்

தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 2.

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ

போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய்

ஏக வுருவாய்க் கிடக்குதையோ இன்புற் றிடநாம் இனிஎடுத்த

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 3.