Thayumanavar Songs – திடமுறவே

  1. திடமுறவே

திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்தாளக்
கடன்உனக்கென் றெண்ணிநின்னைக் கைகுவித்தேன் நானலனோ
அடைவுகெட்ட பாழ்மாயை ஆழியிலே இன்னமல்லல்
படமுடியா தென்னாவிப் பற்றே பராபரமே. 1.

ஆராமை கண்டிங் கருட்குருவாய் நீயொருகால்
வாராயோ வந்து வருத்தமெல்லாந் தீராயோ
பூராய மாகஅருட் பூரணத்தில் அண்டமுதல்
பாராதி வைத்த பதியே பராபரமே. 2.

வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும்
ஆழாழி என்னஅரு ளானார் அழுக்காற்றோ
ளேழாய் எனவுலகம் ஏசுமினி நானொருவன்
பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரமே. 3.

உள்ளத்தி னுள்ளே ஒளித்தென்னை ஆட்டுகின்ற
கள்ளக் கருணையையான் காணுந் தரமாமோ
வெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும்
பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் பராபரமே. 4.

வாவிக் கமலமலர் வண்டாய்த் துவண்டுதுவண்
டாவிக்குள் நின்றவுனக் கன்புவைத்தார்க் கஞ்சலென்பாய்
பூவிற்கும் வான்கடையிற் புல்விற்போர் போலஒன்றைப்
பாவிக்க மாட்டேன் பதியே பராபரமே. 5.

விண்ணாறு வெற்பின் விழுந்தாங் கெனமார்பில்
கண்ணாறு பாய்ச்சிடுமென் காதல்வெள்ளங் கண்டிலையோ
தண்ணாறு சாந்தபதத் தற்பரமே நால்வேதப்
ப்ண்ணாறும் இன்பப் பதியே பராபரமே. 6.

கூடியநின் சீரடியார் கூட்டமென்றோ வாய்க்குமென
வாடியஎன் நெஞ்சம்முக வாட்டமும்நீ கண்டிலையோ
தேடியநின் சீரருளைத் திக்கனைத்துங் கைகுவித்துப்
பாடியநான் கண்டாய் பதியே பராபரமே. 7.

நெஞ்சத்தி னூடே நினைவாய் நினைவூடும்
அஞ்சலென வாழுமென தாவித் துணைநீயே
சஞ்சலமாற் றினைஇனிமேல் தாய்க்குபசா ரம்புகன்று
பஞ்சரிக்க நானார் பதியே பராபரமே. 8.

புத்திநெறி யாகஉனைப் போற்றிப் பலகாலும்
முத்திநெறி வேண்டாத மூடனேன் ஆகெடுவேன்
சித்திநெறிக் கென்கடவேன் சீரடியார்க் கேவல்செயும்
பத்திநெறிக் கேனும்முகம் பார்நீ பராபரமே. 9.

கண்டறியேன் கேட்டறியேன் காட்டும்நினை யேஇதயங்
கொண்டறியேன் முத்தி குறிக்குந் தரமுமுண்டோ
தொண்டறியாப் பேதைமையேன் சொல்லேன்நின் தொன்மை
பண்டறிவாய் நீயே பகராய் பராபரமே. 10.