- பெற்றவட்கே
பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார். 1.
ஆவாவென் றழுதுதொழுங் கைய ராகி
அப்பனே ஆனந்த அடிக ளேநீ
வாவாவென் றவர்க்கருளுங் கருணை எந்தாய்
வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ் வாறு நீயே. 2.
நீயேஇங் கெளியேற்குந் தாக மோக
நினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலே
பேயேற்குந் தனக்கெனவோர் அன்பு முண்டோ
பெம்மானே இன்னமன்பு பெருகப் பாராய். 3.
பாராயோ என்துயரம் எல்லாம் ஐயா
பகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்
வாராயோ இன்னமொரு காலா னாலும்
மலர்க்காலென் சென்னிமிசை வைத்தி டாயோ. 4.
வைத்திடுங்கா லைப்பிடித்துக் கண்ணின் மார்பில்
வைத்தணைத்துக் கொண்டுகையால் வளைத்துக் கட்டிச்
சித்தமிசைப் புகஇருத்திப் பிடித்துக் கொண்டு
தியக்கமற இன்பசுகஞ் சேர்வ தென்றோ. 5.
சேராமற் சிற்றினத்தைப் பிரிந்தெந் நாளுந்
திருவடிப்பே ரினத்துடனே சேரா வண்ணம்
ஆராக நான்அலைந்தேன் அரசே நீதான்
அறிந்திருந்தும் மாயையிலேன் அழுந்த வைத்தாய். 6.
வைத்தபொருள் உடலாவி மூன்றும் நின்கை
வசமெனவே யான்கொடுக்க வாங்கிக் கொண்டு
சித்தமிசைப் புகுந்ததுதான் மெய்யோ பொய்யோ
சிறியேற்கிங் குளவுரையாய் திகையா வண்ணம். 7.
திகையாதோ எந்நாளும் பேரா னந்தத்
தெள்ளமுதம் உதவாமல் திவலை காட்டி
வகையாக அலக்கழித்தாய் உண்டு டுத்து
வாழ்ந்தேன்நான் இரண்டுகால் மாடு போலே. 8.
மாடுமக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை
வைத்தகன தனமேடை மாட கூடம்
வீடுமென்பால் தொடர்ச்சியோ இடைவி டாமல்
மிக்ககதி வீடன்றோ விளங்கல் வேண்டும். 9.
விளங்கவெனக் குள்ளுள்ளே விளங்கா நின்ற
வேதகமே போதகமே விமல வாழ்வே
களங்கரகி தப்பொருளே யென்னை நீங்காக்
கண்ணுதலே நாதாந்தக் காட்சிப் பேறே. 10.
நாதமே நாதந்த வெளியே சுத்த
ஞாதுருவே ஞானமே ஞேய மேநல்
வேதமே வேதமுடி வான மோன
வித்தேயிங் கென்னையினி விட்டி டாதே. 11.