Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அன்புநிலை

  1. அன்புநிலை

தக்கரவி கண்ட சரோருகம்போல் என்னிதயம்
மிக்கஅருள் கண்டு விகசிப்ப தெந்நாளோ. 1.

வானமுகில் கண்ட மயூரபட்சி போலஐயன்
ஞானநடங் கண்டு நடிக்குநாள் எந்நாளோ. 2.

சந்திரனை நாடுஞ் சகோரபட்சி போல்அறிவில்
வந்தபரஞ் சோதியையான் வாஞ்சிப்ப தெந்நாளோ. 3.

சூத்திரமெய்ப் புற்றகத்துக் குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ்
சித்தனைஎன் கண்ணால் தரிசிப்ப தெந்நாளோ. 4.

அந்தரத்தே நின்றாடும் ஆனந்தக் கூத்தனுக்கென்
சிந்தை திறைகொடுத்துச் சேவிப்ப தெந்நாளோ. 5.

கள்ளனிவன் என்றுமெள்ளக் கைவிடுதல் காரியமோ
வள்ளலே என்று வருந்துநாள் எந்நாளோ. 6.

விண்ணாடர் காணா விமலா பரஞ்சோதி
அண்ணாவா வாவென் றரற்றுநாள் எந்நாளோ. 7.

ஏதேது செய்தாலும் என்பணிபோய் நின்பணியாம்
மாதேவா என்று வருந்துநாள் எந்நாளோ. 8.

பண்டுங்கா ணேன்நான் பழம்பொருளே இன்றும்உனைக்
கண்டுங்கா ணேன்எனவுங் கைகுவிப்ப தெந்நாளோ. 9.

பொங்கேத மான புழுக்கமெலாந் தீரஇன்பம்
எங்கேஎங் கேஎன் றிரங்குநாள் எந்நாளோ. 10.

கடலின்மடை கண்டதுபோற் கண்ணீ ராறாக
உடல்வெதும்பி மூர்ச்சித் துருகுநாள் எந்நாளோ. 11.

புலர்ந்தேன் முகஞ்சருகாய்ப் போனேன்நிற் காண
அலந்தேன்என் றேங்கி அழுங்குநாள் எந்நாளோ. 12.

புண்ணீர்மை யாளர் புலம்புமா போற்புலம்பிக்
கண்ணீருங் கம்பலையுங் காட்டுநாள் எந்நாளோ. 13.

போற்றேனென் றாலும்என்னைப் புந்திசெயும் வேதனைக்கிங்
காற்றேன்ஆற் றேனென் றரற்றுநாள் எந்நாளோ. 14.

பொய்ம்முடங்கும் பூமிசில போட்டலறப் பூங்கமலன்
கைம்முடங்க நான்சனனக் கட்டறுவ தெந்நாளோ. 15.

கற்குணத்தைப் போன்றவஞ்சக் காரர்கள்கை கோவாமல்
நற்குணத்தார் கைகோத்து நான்திரிவ தெந்நாளோ. 16.

துட்டனைமா மாயைச் சுழல்நீக்கி அந்தரமே
விட்டனையோ என்று வியக்குநாள் எந்நாளோ. 17.