Thayumanavar Songs – கல்லாலின்

  1. கல்லாலின்

கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்குங்
கடவுள்நீ உணர்த்துவதுங் கைகாட் டென்றால்
சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மை
துரும்புபற்றிக் கடல்கடக்குந் துணிபே யன்றோ. 1.

அன்றோஆ மோஎனவுஞ் சமய கோடி
அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே
நின்றாயே நினைப்பெறுமா றெவ்வா றாங்கே
நின்னருள்கொண் டறிவதல்லால் நெறிவே றுண்டோ. 2.

நெறிபார்க்கின் நின்னையன்றி அகிலம் வேறோ
நிலநீர்தீக் கால்வானும் நீய லாத
குறியாதும் இல்லையென்றால் யாங்கள் வேறோ
கோதையொரு கூறுடையாய் கூறாய் கூறாய். 3.

கூறாய ஐம்பூதச் சுமையைத் தாங்கிக்
குணமிலா மனமெனும்பேய்க் குரங்கின் பின்னே
மாறாத கவலையுடன் சுழல என்னை
வைத்தனையே பரமேநின் மகிமை நன்றே. 4.

நன்றெனவுந் தீதெனவும் எனக்கிங் குண்டோ
நானாகி நீயிருந்த நியாயஞ் சற்றே
இன்றெனக்கு வெளியானால் எல்லாம் வல்ல
இறைவாநின் அடியருடன் இருந்து வாழ்வேன். 5.

வாழ்வெனவுந் தாழ்வெனவும் இரண்டாப் பேசும்
வையகத்தார் கற்பனையாம் மயக்க மான
பாழ்வலையைக் கிழித்துதறிச் செயல்போய் வாழப்
பரமேநின் ஆனந்தப் பார்வை யெங்கே. 6.

எங்கேயெங் கேஅருளென் றெமையி ரந்தான்
ஏழையிவன் எனவுமெண்ணி யிச்சை கூரும்
அங்கேயங் கேயெளிவந் தென்னை ஆண்ட
ஆரமுதே உனைக்காண்பான் அலந்து போனேன். 7.

போனநாட் கிரங்குவதே தொழிலா இங்ஙன்
பொருந்துநாள் அத்தனையும் போக்கி னேன்என்
ஞானநா யகனேநின் மோன ஞான
நாட்டமுற்று வாழ்ந்திருக்கும் நாளெந் நாளோ. 8.

நாள்பட்ட கமலமென்ன இதயம் மேவும்
நறுந்தேனே துன்மார்க்க நாரி மார்கண்
வாள்பட்ட காயமிந்தக் காய மென்றோ
வன்கூற்றும் உயிர்பிடிக்க வருமந் நீதி. 9.

நீதியெங்கே மறையெங்கே மண்விண் எங்கே
நித்தியராம் அவர்களெங்கே நெறிதப் பாத
சாதியெங்கே ஒழுக்கமெங்கே யாங்க ளெங்கே
தற்பரநீ பின்னுமொன்றைச் சமைப்ப தானால். 10.

ஆனாலும் யான்எனதிங் கற்ற எல்லை
அதுபோதும் அதுகதிதான் அல்ல வென்று
போனாலும் யான்போவன் அல்லால் மோனப்
புண்ணியனே வேறுமொரு பொருளை நாடேன். 11.

பொருளேநின் பூரணமே லிட்ட காலம்
போக்குவர வுண்டோதற் போத முண்டோ
இருள்தானுண் டோஅல்லால் வெளிதான் உண்டோ
இன்பமுண்டோ துன்பமுண்டோ யாமங் குண்டோ. 12.

உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல்
ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக்
கண்டேயும் எள்ளளவுந் துறவு மின்றிக்
காசினிக்குள் அலைந்தவரார் காட்டாய் தேவே. 13.

தேவரெலாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட்
செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப் பாக
மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செ விக்கே
மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான். 14.

முற்றுமோ எனக்கினியா னந்த வாழ்வு
மூதறிவுக் கினியாய்நின் முளரித் தாளில்
பற்றுமோ சற்றுமில்லை ஐயோ ஐயோ
பாவிபடுங் கட்கலக்கம் பார்த்தி லாயோ. 15.

பார்த்தனவெல் லாமழியும் அதனாற் சுட்டிப்
பாராதே பார்த்திருக்கப் பரமே மோன
மூர்த்திவடி வாயுணர்த்துங் கைகாட் டுண்மை
முற்றியென தல்லல்வினை முடிவ தென்றோ. 16.

என்றுளைநீ அன்றுளம்யாம் என்பதென்னை
இதுநிற்க எல்லாந்தாம் இல்லை யென்றே
பொன்றிடச்செய் வல்லவன்நீ யெமைப்ப டைக்கும்
பொற்புடையாய் என்னின்அது பொருந்தி டாதே. 17.

பொருந்துசகம் அனைத்தினையும் பொய்பொய் யென்று
புகன்றபடி மெய்யென்றே போத ரூபத்
இருந்தபடி யென்றிருப்ப தன்றே யன்றோ
எம்பெருமான் யான்கவலை யெய்தாக் காலம். 18.

காலமே காலமொரு மூன்றுங் காட்டுங்
காரணமே காரணகா ரியங்கள் இல்லாக்
கோலமே எனைவாவா என்று கூவிக்
குறைவறநின் அருள்கொடுத்தாற் குறைவோ சொல்லாய். 19.

சொல்லாய தொகுதியெல்லாங் கடந்து நின்ற
சொரூபானந் தச்சுடரே தொண்ட னேனைக்
கல்லாகப் படைத்தாலும் மெத்த நன்றே
கரணமுடன் நான்உறவு கலக்க மாட்டேன். 20.

கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர்
கடவுளுனைக் காணவே காய மாதி
புலம்காணார் நானொருவன் ஞானம் பேசிப்
பொய்க்கூடு காத்ததென்ன புதுமை கண்டாய். 21.

கண்டிலையோ யான்படும்பா டெல்லாம் மூன்று
கண்ணிருந்துந் தெரியாதோ கசிந்துள் ளன்பார்
தொண்டரடித் தொண்டனன்றோ கருணை நீங்காச்
சுத்தபரி பூரணமாஞ் சோதி நாதா. 22.

சோதியாய் இருட்பிழம்பைச் சூறை யாடுந்
தூவெளியே எனைத்தொடர்ந்து தொடர்ந்தெந் நாளும்
வாதியா நின்றவினைப் பகையை வென்ற
வாழ்வேஇங் குனைப்பிரிந்து மயங்கு கின்றேன். 23.

மயக்குறுமென் மனமணுகாப் பாதை காட்டி
வல்வினையைப் பறித்தனையேவாழ்வே நானென்
செயக்கடவேன் செயலெல்லாம் நினதே என்று
செங்கைகுவிப் பேன்அல்லாற் செயல்வே றில்லை. 24.

வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா. 25.

அம்மாஈ ததிசயந்தான் அன்றோ அன்றோ
அண்டநிலை யாக்கிஎன்னை அறிவாம் வண்ணஞ்
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே
சுகமயமாய் இருப்பதல்லாற் சொல்வான் என்னே. 26.

என்னேநான் பிறந்துழல வந்த வாறிங்(கு)
எனக்கெனஓர் செயலிலையே ஏழை யேன்பால்
முன்னேசெய் வினையெனவும் பின்னே வந்து
மூளும்வினை யெனவும்வர முறையேன் எந்தாய். 27.

தாயான தண்ணருளை நிரம்ப வைத்துத்
தமியேனைப் புரவாமல் தள்ளித் தள்ளிப்
போயான தென்கொல்ஐயா ஏக தேசம்
பூரணத்துக் குண்டோதான் புகலல் வேண்டும். 28.

புகலரிய நின்விளையாட் டென்னே எந்தாய்
புன்மையறி வுடையஎன்னைப் பொருளாப் பண்ணி
இகல்விளைக்கும் மலமாயை கன்மத் தூடே
இடருறவுஞ் செய்தனையே இரக்க மீதோ. 29.

இரக்கமொடு பொறைஈதல் அறிவா சாரம்
இல்லேன்நான் நல்லோர்கள் ஈட்டங் கண்டால்
கரக்குமியல் புடையேன்பாழ் நெஞ்சம் எந்தாய்
கருந்தாதோ வல்லுருக்கோ கரிய கல்லோ. 30.