திருப்பாவைக்கு முன்னர் ஓதப்படுகின்ற சுலோகம்
நீளா துங்க ஸ்தன கிரி தடீம் ஸுப்த முத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத ஸிர: சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ச்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:
பொருள் :
நப்பின்னைப் பிராட்டியின் மலைகள் போன்ற தனங்களில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பி, நூற்றுக்கணக்கான வேத வேதாந்தங்களில் சொல்லியிருப்பதைப் போல், உயிராகிய தான் இறைவனாகிய திருமகள் கேள்வனான கண்ணனுக்கே உரிமையாக இருப்பதை அவனுக்கு உணர்த்தி, தான் சூடிக்கொடுத்த மாலைகளால் அவனை உரிமையுடன் கட்டி அவனை அனுபவித்த அந்த கோதைக்கே மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள் உரியதாகுக!
இந்த சுலோகம் வைணவ ஆசாரியரான பராசர பட்டர் இயற்றியது. இவர் கூரத்தாழ்வானின் திருமகனார்.