திருப்புகழ் பாடல் 360 – திருவானைக்காவல்: கருமுகில் திரளாக | Thiruppugazh Song 360
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன – தனதான
பாடல்
கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள் – புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக் காரிகள் – மயலாலே
பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள் – முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் கோரருள் – புரிவாயே
மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண வாளக் கோலமு – முடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய – அதிதீரா
அரவணைதனி லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும் – அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக்ட காவுறை – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !