திருவெம்பாவை பாடல் 15
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள்:
அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி “எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.