மகாசாஸ்தா அஷ்டகம் | Maha Sastha Ashtakam

மகாசாஸ்தா அஷ்டகம்

அருள், பொருள், ஆரோக்யம் பெற – கார்த்திகை மாதம் காலை/ மாலை.

நீலவர்ணமான குதிரையின் மேல் அமர்ந்து பவனி வருபவரும், அடியார்களின் குறைகளைத் தீர்ப்பதிலேயே கருத்துள்ளவரும் சாதுக்களுக்கு எப்போதும் நன்மை செய்கின்றவரும், மகானும், ஈஸ்வரினின் மகனுமான ஐயப்பனை நான் சரணடைகின்றேன்.

ஹரிஹர சுதனும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் ஆகியவர்களால் வணங்கப்படுபவரும், சிறந்த கம்பீரமான வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனை வணங்குகின்றேன்

அநீதி நிறைந்த காட்டில் எப்பொழுதும் வேட்டையாடுகின்றவரும், அசுர குலத்துக்கே முடிவு கட்டுபவரும், உயரத்தூக்கிய கையில் குந்தம் என்ற ஆயுதத்தை உடையவரும், பொன் மற்றும் ரத்னங்களாலான ஆபரணங்களை அணிந்தவரும், பிரசித்தவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் பெரியவருமான ஐயப்பனை துதிக்கிறேன்.

அந்திப் பொழுதில் தோன்றும் பூரண நிலவைப் பொன்ற முகத்தை உடையவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரைத் தன் கண்களாக உடையவரும், பாரிஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரீரத்தை உடையவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் தலைவருமான ஐயப்பனை சரணடைந்து வணங்குகின்றேன்.

காட்டில் சனகர் முதலிய யோகிளால் நமஸ்கரிக்கப்படுபவரும், உத்தமமான மனிதர்களால் எப்பொதும் பூஜிக்கப்படுபவரும், பிறப்பு இறப்பு ஆகிய பயங்களைப் போக்குகின்றவரும் ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைப் பணிகின்றேன்.

ப்ரணவமாகிய மரத்தில் பறவை போல்விளங்கும் முக்யதேவனாய் இருப்பவரும், முக்குணங்களால் உண்டான பிறப்பு, இறப்பு என்ற காட்டை அழிக்கக்கூடிய அக்கினியாக இருப்பவரும், கணபதி மற்றும் முருகனால் துதிக்கப்படுபவரும், சிறந்த மகிமை உடையவரும், ஈஸ்வரர்களுக்குகெல்லாம் பெரியவருமான ஐயப்பனைப் பணிகின்றேன்.

தேவாதி தேவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட பாத கமலங்களை உடையவரும், எல்லா ஞானிகளுக்கும் குருவாக இருப்பவரும், சுத்த மனமுள்ளவரும், சபரிமலையின் குகையில் அமர்ந்திருப்பவரும் ஈஸ்வரர்களின் தலைவருமான பிரகதீஸ்வரரை வணங்குகின்றேன்.

கர்ப்பவாசமில்லாதவரும், தேவநாயகனும், மிகச் சிறந்தவரும், சிங்கத்தின் வடிவிலான ரத்ன மயமான ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும், மன்மதனையே தன்னழகால் வென்றவரும், உத்தமானவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்.

நிகரற்ற சிவகுமாரனாகிய ஐயப்பனின் இந்த துதியை, யாரொருவர் முழுமனதாக ஐயப்பனை நினைத்துக் கொண்டு சொல்கின்றாரோ, அவர் ஐயப்பனுடைய கருணையால் பசுக்கள், புத்ரர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களௌம் பெற்று ஆரோக்யமான ஆனந்த வாழ்வு பெறுவர், அவர்தம் இல்லத்தில் என்றும் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும்.