ஆறுமுக சுவாமி விருத்தம்
அறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்
அலங்கார ஆபரண மணிந்த மார்பும்
திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும்
ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா
முருகா சரவணபவனே கார்த்திகேயா
முக்கணனார் புத்திரனே உக்ரவேலா
இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா
இதுசமயம் அடியாரை ரட்சிப்பாயே !
மயிலேறி விளையாடும் சுப்ரமண்யா
வடிவேலா உன்பாதம் நம்பினேனே
உயிரிழந்து அபகீர்த்தியாகும் வேளை
உன்செயலால் இதுசமயம் உயிரைக்காத்தாய்
தயவாக இனிமேலும் உயிரைக் காத்து
சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்
வயிபோக மானமலைப் பழநிவேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
வருந்துமடியார் உயிரைக்காக்குந் தெய்வம்
வையகத்தில் வேறொருவரில்லை யென்று
அறிந்துநான் உனைப்பணிந்தேன் சுப்ரமண்யா
ஆதரித்துப் பிராணபயம் தீருமையா
திரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச்
சிறையிலிருந்து தøளீப்பூண்டு சின்னமாளேன்
பறந்துவரு மயிலேறும் பழநிவேலா
பண்பாக உயிர்காத்து ரட்சிப்பாயே !
பெருவேங்கைப் புலிபுடித்த பசுவைப்போல
பிதுர்கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமே
இருவருமே உனைக்கூவச் செவிகேளாதோ
இதுசமயந் தாமதா யிருக்கலாமோ
குருவாகித் தந்தையாய் நீயேயாகில்
குமரேசா பிராணபயந் தீருமையா
முருகேசா இதுசமயம் பழநிவேலா
முன்வந்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
பாம்பின்வாய் சிக்கியதோர் தேரை.போல
பதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள்
தேம்பியே புலம்புகிறோம் துயரமாகித்
தென்னவனே உன்செவிக்குக் கேளாதோதான்
நான்புவியல் உன்னைநம்பி மகிழ்ந்திருந்தேன்
நாயேனுக்கு அபாயம்வர நியாயமோதான்
சாம்பசிவன் புத்திரனே பழநிவேலா
சமயமிது உயிர்காத்து ரட்சிப்பாயே !
வலைப்பட்ட உயிரதுபோல் மயங்குகின்றோம்
வடிவேலா இதுசமயம் துயரந்தீர்ப்பாய்
கொலைகளவு பாதகங்கள் பொய்களெல்லாம்
கொடும்பழிகள் வஞ்சனைகள் பில்லிசூன்யம்
தொலையாத சிறுபிணிவல் வினைகளெல்லாம்
துரத்துமையா மயிலேறும் சுப்ரமண்யா
மலையிலுறை வாசனே பழநிவேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
நாகமது கெருடனைக் கண்டலைந்தாற் போல
நான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனே
தாகமது தீருமையா தவிக்கும் வேளை
சண்முகனே இதுசமயம் அடியேனுக்கு
மேகமது பயிர்க்குதவி செய்தாற்போலே
வேலவனே வரவேணும் பழநிவேலா
வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
பூனைகையில் சிக்கியதோர் கிளியைப்போலப்
புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகி
நானடிமை உமைநம்பி யிருக்கும் வேளை
நாயகனே பாராமுகமாய் இருக்கலாமோ
மானீன்ற வள்ளியம்மை தெய்வானை
மணவாளா சரவணனே கருணைசெய்வாய்
கானமயில் வாகனனே பழநிவேலா
கடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே !
தூண்டிலகப்பட்ட மீன்போல் துடிக்கிறேனே
சுப்ரமண்யா இதுசமயம் அடியேனுக்கு
வேண்டுவரம் கொடுப்பதற்கு உன்னையன்றி
வேறொருவ ரில்லையென்று நம்பினேனே
மீண்டுவரும் வினையகற்றித் துயரந் தீர்ப்பாய்
வேலவனே சூர சங்காரவேலா
ஆண்டவனே உனைப்பணிந்தேன் பழநிவேலா
அடியார்கள் உயிர்காத்து ரட்சிப்பாயே !
நஞ்சுபட்டு விஷமேறி மயங்குமாப்போல்
நடுநடுங்கிக் கிடுகிடுடென்று பயந்துநாங்கள்
தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் திருத்தணிகை வாசா
சற்குருவே பிராணபயந் தீருமையா
பஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையைவாங்கிப்
பாடமெல்லாம் பரிகரித்துப் பதமேதந்தாய் !
வஞ்சனைகள் செய்யாமல் பழநிவேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே !
அத்திமுகனே முக்கணனுக்கு இளையவேலா
அறுமுகனே தணிகையிலே அமர்ந்தவாசா
வித்தகத்திற் பேசாத மூடனேனும்
வேலவனே நின்னருளால் கவியைப்போலே
பத்துமே பதிகமாய்ப் பாடிச்சொன்னேன்
என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தேயாள்வாய்
சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் அய்யா
சண்முகனே அடியாரை ரட்சிப்பாயே.