திருப்பாவை பாடல் 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
விளக்கம்: பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.