ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி | Sri Dakshinamurthy Stotram

குழந்தைபருவம், வாலிபம், முதுமை, விழிப்பு, சொப்பனம் முதலிய மாறுபாடுகள் ஊடே ‘நான்’ என என்றும் மாறுபடாமல்-சிவன் தன்னை வெளிப்படுத்துதல்- வியாழன் மற்றும் பௌர்ணமி நாட்களில் சொல்ல வேண்டிய ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி

தன் இடது மடியில் இருத்தி பர்வத ரஜகுமாரியாகிய பார்வதிதேவியை அனைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமைமிக்கவளாய் சந்திர ஒளிபோன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அனைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும் கீழ்க்கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும் இன்னொரு கரத்தில் ஞானமுத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே, உமக்கு எனது வணக்கங்கள்.

மௌனமான விளக்கத்தாலேயே பரப்பிரம்ம தத்துவத்தைப் பிரகடனம் செய்பவரும், யுவவடிவினரும் மிகவும் கிழவர்களான பிரம்ம நிஷ்டர்களான ரிஷிகளாகிய சிஷ்யர்களால் சூழ்ப்பட்டவரும், ஆனந்தரூபியும், தன் ஆன்மாவிலேயே ரசிப்பவரும், நகைமுகத்தினருமான தக்ஷிணாமூர்த்தியே உமக்கு எனது வணக்கங்கள்.

கண்ணாடியில் காணும் நகரம் போன்றதும், தனக்குள்ளேயே இருப்பதுமான இவ்வுலகை, தூக்கத்தில் தன்னொருவனிடமிருந்தே பலவற்றை உண்டாக்கிக் கனவு காண்பதுபோல் மாயையினால் வெளியில் உண்டானதைப்போல் பார்த்துக் கொண்டு எந்த ஜீவன் தூங்கி விழித்த சமயம்- ஞானம் வந்த சமயத்தில், இரண்டில்லாத யாவற்றிற்கும் காரணமாகிய தன் ஆத்மாவையே நேரில் நான்தான் அந்த ஆத்மா என்று உணருகிறானோ, அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய தெய்வமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு இந்த எனது வணக்கங்கள் உரித்தாகுக.

விதையின் உள்ளே முளையிருப்பது போல் சிருஷ்டிக்கு முன்பு வேற்றுமையில்லாததும் சிருஷ்டிக்குப் பிறகு ஈசனின் சக்தியாகிய மாயையினால் கற்பித்த தேசம் காலம் அவற்றின் சேர்க்கை ஆகிய வேற்றுமையினால் பற்பல விதமாயிருக்கின்றதுமான இந்த உலகை, எவர் இந்திரஜாலம் செய்பவனைப் போலவும் தன் இஷ்டத்தினாலேயே சிருஷ்டிக்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய தெய்வமான ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த பரமாத்மாவினுடைய சத்ரூபமானது, எக்காலத்திலும் எந்த தேசத்திலும் இருக்கிறது என்ற அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயமான, வெளிப்பாடே இல்லாமலிருக்கும் பொருளுக்கு ஒப்பான வெளி வஸ்துகளை அடைந்து விளங்குகிறதோ, அதாவது புறபிரபஞ்சம் போல விளங்குகின்றதோ, சரணம் அடைந்தவர்களை நியே பரமாத்மாவாக இருக்கிறாய், தத்துவம் அஸி என்ற வேத வாக்யத்தினால் நேருக்கு நேராகவே எவர் தத்வஸ்வரூபமான ஆத்மாவை அறிவிக்கிறாரோ, எவரை நேராக அனுபவிப்பதால் பிறவியென்னும் கடலில் மறுமுறை வருகை உண்டாகாதோ, அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

பற்பல ஓட்டைகளோடு கூடிய குடத்தின் உள்ளே இருக்கின்ற விளக்கின் ஒளி அந்த ஒட்டைகள் மூலம் கசிவது போல் எந்த ஆத்மாவினுடைய அறிவு, கண் முதலிய புலன்கள் வழியாக வெளியில் செல்லுகிறதோ, நான் அறிகிறேன் என்று விளங்குகிற அந்த ஆத்மாவான யாதொன்றையே இந்த எல்லாமான உலகமும் பின்பற்றி விளங்குகிறதோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

உடலையும், உயிர் மூச்சையும் புலன்களையும் கணத்திற்கோர்முறை மாறுகின்ற புத்தியையும் ஒன்றுமில்லாத சூன்ய நிலையையும் ‘தான்’ என்று தத்வவாதிகள், பெண்கள், குழந்தைகள், அறிவற்றவர்கள் இவர்களுக்கு ஒப்பாக மிகவும் ஏமாந்தவர்களாக அறிந்தார்கள். இவ்வாறு மாயா சக்தியின் விலாசங்களால் உண்டாக்கப்பட பெரும் மயக்கத்தை அகற்றும் அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த ஆத்மா தூக்கத்தில் மாயையினால் மூடப்பட்டிருப்பதால் ராகு மறைத்த சூர்ய சந்திரர்களுக்கு ஒப்பாக ஸத் (இருத்தல்) ரூபமாக மட்டும் இருந்து கொண்டு இந்திரியங்களை செயலற்றவனாக அடக்கி இருந்தானோ, எந்த ஆத்மா விழித்துக்கொண்ட சமயத்தில் முன்பு இதுவரையில் தூங்கினேன் என்று நினைக்கப்படுகின்றானோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

குழந்தைப் பருவம், இளமை, முதுமை முதலானதும் அப்படியே ஜாக்ரத்- விழிப்பு, கனவு, தூக்கம் முதலானதுமான வேறுபட்ட எல்ல அவஸ்தைகளிலும் வேறுபடாமல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதும், எப்பொழுதும் நான் என்று உள்ளே விளங்குவதுமான தன்னைக் காட்டிலும் வேற்றுமை இல்லாத பரமாத்மாவை, தன்னை சேவிப்பவர்களுக்கு எந்த தக்ஷிணாமூர்த்தி மங்களமான சின் முத்திரையினால் பிரத்யட்சமாகக் காண்பிக்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

தூக்கத்திலோ, விழிப்பிலோ எந்தஒரு ஆத்மா மாயையினால் பற்பல மருளை அடைவிக்கப்பட்டவராக இந்த உலகை காரிய காரணத்தன்மையோடும், தான்- தன் தலைவன் என்ற உறவோடும், சீடன்- ஆசான் என்ற தன்மையோடும், அப்படியே தகப்பன் மகன் என்றும் பற்பல வேற்றுமையை உடையதாகப் பார்க்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த பரமேஸ்வரனுக்கே பூமி, ஜலம், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், உயிர் என்று இவ்விதம் இந்த அசைகின்றதும் அசையாததுமான எட்டு உருவம் பிரகாசிக்கின்றதோ, உலகத்தின் உண்மையை சோதிக்கின்றவர்களுக்கு எங்கும் நிறைந்த எந்த பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லையோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

இந்த துதியில் எல்லாம் ஒரே ஆத்மரூபம் என்ற தத்துவம் எவ்வாறு விளக்கப் பெற்றிருக்கிறதோ அவ்வாறு அறிவதால், இந்த துதியை கேட்டாலும், இதன் பொருளை மனதால் சிந்திப்பதாலும், தியானம் செய்வதாலும் பிறருக்கு நன்றாகச் சொல்வதாலும் எல்லாமும் ஒரே ஆத்மாவாக இருக்கும் நிலையாகிய பெரிய ஐச்வர்யத்தோடு கூடிய பரமாத்ம தன்மை ஏற்படும். மேலும் எட்டாக வகுக்கப்பட்ட அணிமாதி சித்திகளான ஐச்வர்யம் தானாக கைகூடும்.