Thayumanavar Songs – ஆரணம்

ஆரணம்

ஆரண மார்க்கத் தாகம வாசி
அற்புத மாய்நடந் தருளுங்
காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங்
கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
பூரண அறிவிற் கண்டிலம் அதனாற்
போற்றிஇப் புந்தியோ டிருந்து
தாரணி யுள்ள மட்டுமே வணங்கத்
தமியனேன் வேண்டிடத் தகுமே. 1.

இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட்
டெவ்வுல கத்தையு மீன்றுந்
தடமுறும் அகில மடங்குநா ளம்மை
தன்னையு மொழித்துவிண் ணெனவே
படருறு சோதிக் கருணையங் கடலே
பாயிருட் படுகரிற் கிடக்கக்
கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக்
கவர்ந்தெனை வளர்ப்பதுன் கடனே. 2.

வளம்பெறு ஞான வாரிவாய் மடுத்து
மண்ணையும் விண்ணையுந் தெரியா
தளம்பெறுந் துரும்பொத் தாவியோ டாக்கை
ஆனந்த மாகவே யலந்தேன்
களம்பெறு வஞ்ச நெஞ்சினர் காணாக்
காட்சியே சாட்சியே அறிஞர்
உளம்பெறுந் துணையே பொதுவினில் நடிக்கும்
உண்மையே உள்ளவா றிதுவே. 3.

உள்ளமே நீங்கா என்னைவா வாவென்
றுலப்பிலா ஆனந்த மான
வெள்ளமே பொழியுங் கருணைவான் முகிலே
வெப்பிலாத் தண்ணருள் விளக்கே
கள்ளமே துரக்குந் தூவெளிப் பரப்பே
கருவெனக் கிடந்தபாழ் மாயப்
பள்ளமே வீழா தெனைக்கரை யேற்றிப்
பாலிப்ப துன்னருட் பரமே. 4.

பரம்பர மாகிப் பக்குவம் பழுத்த
பழவடி யார்க்கருள் பழுத்துச்
சுரந்தினி திரங்குந் தானகற் பகமே
சோதியே தொண்டனேன் நின்னை
இரந்துநெஞ் சுடைந்து கண்துயில் பெறாம
லிருந்ததும் என்கணில் இருட்டைக்
கரந்துநின் கண்ணால் துயில்பெறல் வேண்டிக்
கருதினேன் கருத்திது தானே. 5.

கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்துங்
காரணங் கண்டுசும் மாதான்
வருத்தமற் றிருந்து சுகம்பெறா வண்ணம்
வருந்தினேன் மதியின்மை தீர்ப்பார்
ஒருத்தரார் உளப்பா டுணர்பவர் யாவர்
உலகவர் பன்னெறி எனக்குப்
பொருத்தமோ சொல்லாய் மௌனசற் குருவே
போற்றிநின் பொன்னடிப் போதே. 6.

அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும்
அறிந்திடின் நிர்க்குண நிறைவும்
முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும்
மொழிந்திடிற் சுகமன மாயைக்
குடிகெட வேண்டிற் பணியற நிற்றல்
குணமெனப் புன்னகை காட்டிப்
படிமிசை மௌனி யாகிநீ யாளப்
பாக்கியம் என்செய்தேன் பரனே. 7.

என்செய லின்றி யாவுநின் செயலென்
றெண்ணுவேன் ஒவ்வொரு காலம்
புன்செயல் மாயை மயக்கின்என் செயலாப்
பொருந்துவே ன·தொரு காலம்
பின்செயல் யாது நினைவின்றிக் கிடப்பேன்
பித்தனேன் நன்னிலை பெறநின்
தன்செய லாக முடித்திடல் வேண்டுஞ்
சச்சிதா னந்தசற் குருவே. 8.

குருவுரு வாகி மௌனியாய் மௌனக்
கொள்கையை உணர்த்தினை அதனால்
கருவுரு வாவ தெனக்கிலை இந்தக்
காயமோ பொய்யெனக் கண்ட
திருவுரு வாளர் அநுபவ நிலையுஞ்
சேருமோ ஆவலோ மெத்த
அருவுரு வாகி அல்லவாய்ச் சமயம்
அளவிடா ஆனந்த வடிவே. 9.

வடிவிலா வடிவாய் மனநினை வணுகா
மார்க்கமாய் நீக்கருஞ் சுகமாய்
முடிவிலா வீட்டின் வாழ்க்கைவேண் டினர்க்குன்
மோனமல் லால்வழி யுண்டோ
படியிரு ளகலச் சின்மயம் பூத்த
பசுங்கொம்பை யடக்கியோர் கல்லால்
அடியிலே யிருந்த ஆனந்த அரசே
அன்பரைப் பருகும்ஆ ரமுதே. 10.