Thayumanavar Songs – பன்மாலை

16. பன்மாலை

பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர்
பாமாலைக் கேநீதான் பட்ச மென்று
நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர்
நலமறிந்து கல்லாத நானுஞ் சொன்னேன்
சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத்
தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன்
என்மாலை யறிந்திங்கே வாவா என்றே
எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே. 1.

கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன்
கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க
ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும்
ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ
இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும்
இடர்செயுமைம் புலனுங்கா மாதி யாறும்
வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான
மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே. 2.

வடிவனைத்துந் தந்தவடி வில்லாச் சுத்த
வான்பொருளே எளியனேன் மனமா மாயைக்
குடிகெடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மோன
குருவேஎன் தெய்வமே கோதி லாத
படியெனக்கா னந்தவெள்ளம் வந்து தேக்கும்
படியெனக்குன் திருக்கருணை ப்ற்று மாறே
அடியெடுத்தென் முடியிலின்னம் வைக்க வேண்டும்
அடிமுடியொன் றில்லாத அகண்ட வாழ்வே. 3.

வாழ்வனைத்தும் மயக்கமெனத் தேர்ந்தேன் தேர்ந்த
வாறேநான் அப்பாலோர் வழிபா ராமல்
தாழ்வுபெற்றிங் கிருந்தேன்ஈ தென்ன மாயந்
தடையுற்றால் மேற்கதியுந் தடைய தாமே
ஊழ்வலியோ அல்லதுன்றன் திருக்கூத் தோஇங்
கொருதமியேன் மேற்குறையோ வுணர்த்தா யின்னம்
பாழ் அவதிப் படஎனக்கு முடியா தெல்லாம்
படைத்தளித்துத் துடைக்கவல்ல பரிசி னானே. 4.

நானானிங் கெனுமகந்தை எனக்கேன் வைத்தாய்
நல்வினைதீ வினைஎனவே நடுவே நாட்டி
ஊனாரும் உடற்சுமைஎன் மீதேன் வைத்தாய்
உயிரெனவு மென்னையொன்றா வுள்ளேன் வைத்தாய்
ஆனாமை யாயகில நிகில பேதம்
அனைத்தினுள்ளுந் தானாகி அறிவா னந்தத்
தேனாகிப் பாலாகிக் கனியாய்க் கன்னல்
செழும்பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த வொன்றே. 5.

ஒன்றியொன்றி நின்றுநின்றும் என்னை என்னை
உன்னியுன்னும் பொருளலைநீ உன்பால் அன்பால்
நின்றதன்மைக் கிரங்கும்வயி ராக்கிய னல்லேன்
நிவர்த்தியவை வேண்டுமிந்த நீல னுக்கே
என்றுமென்றும் இந்நெறியோர் குணமு மில்லை
இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ
கன்றுமனத் துடனஆடு தழைதின் றாற்போல்
கல்வியுங்கேள் வியுமாகிக் கலக்குற் றேனே. 6.

உற்றதுணை நீயல்லாற் பற்று வேறொன்
றுன்னேன்பன் னாள்உலகத் தோடி யாடிக்
கற்றதுங்கேட் டதுமிதனுக் கேது வாகுங்
கற்பதுங்கேட் பதுமமையுங் காணா நீத
நற்றுணையே அருள்தாயே இன்ப மான
நாதாந்த பரம்பொருளே நார ணாதி
சுற்றமுமாய் நல்லன்பர் தமைச்சே யாகத்
தொழும்புகொளுங் கனாகனமே சோதிக் குன்றே. 7.

குன்றாத மூவருவாய் அருவாய் ஞானக்
கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி
நின்றாயே மாயைஎனுந் திரையை நீக்கி
நின்னையா ரறியவல்லார் நினைப்போர் நெஞ்சம்
மன்றாக இன்பக்கூத் தாட வல்ல
மணியேஎன் கண்ணேமா மருந்தே நால்வர்க்
கன்றாலின் கீழிருந்து மோன ஞானம்
அமைத்தசின்முத் திரைக்கடலே அமர ரேறே. 8.

திரையில்லாக் கடல்போலச் சலனந் தீர்ந்து
தெளிந்துருகும் பொன்போலச் செகத்தை எல்லாங்
கரையவே கனிந்துருக்கும் முகத்தி லேநீ
கனிந்தபர மானந்தக் கட்டி இந்நாள்
வரையிலே வரக்காணேன் என்னாற் கட்டி
வார்த்தைசொன்னாற் சுகம்வருமோ வஞ்ச னேனை
இரையிலே யிருத்திநிரு விகற்ப மான
இன்பநிட்டை கொடுப்பதையா எந்த நாளோ. 9.

எந்தநா ளுனக்கடிமை யாகு நாளோ
எந்நாளோ கதிவருநாள் எளிய னேன்றன்
சிந்தைநா ளதுவரைக்கும் மயங்கிற் றல்லால்
தெளிந்ததுண்டோ மௌனியாய்த் தெளிய ஓர்சொல்
தந்தநாள் முதலின்பக் கால்சற் றல்லால்
தடையறஆ னந்தவெள்ளந் தானே பொங்கி
வந்தநா ளில்லைமெத்த அலைந்தே னுன்னை
மறவாவின் பத்தாலே வாழ்கின் றேனே. 10.