Thayumanavar Songs – வம்பனேன்

21. வம்பனேன்

வம்பனேன் கள்ளங் கண்டு மன்னருள் வெள்ள ராய
உம்பர்பால் ஏவல் செய்யென் றுணர்த்தினை ஓகோ வானோர்
தம்பிரா னேநீ செய்த தயவுக்குங் கைம்மா றுண்டோ
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனியொன்றுங் குறைவிலேனே. 1.

குறைவிலா நிறைவாய் ஞானக் கோதிலா னந்த வெள்ளத்
துறையிலே படிந்து மூழ்கித் துளைந்துநான் தோன்றா வாறுள்
உறையிலே யுணர்த்தி மோன வொண்சுடர் வைவாள் தந்த
இறைவனே யுனைப்பி ரிந்திங் கிருக்கிலேன் இருக்கி லேனே. 2.

இருநில மாதி நாதம் ஈறதாம் இவைக டந்த
பெருநில மாய தூய பேரொளிப் பிழம்பாய் நின்றுங்
கருதரும் அகண்டா னந்தக் கடவுள்நின் காட்சி காண
வருகவென் றழைத்தா லன்றி வாழ்வுண்டோ வஞ்ச னேற்கே. 3.

வஞ்சனை அழுக்கா றாதி வைத்திடும் பாண்ட மான
நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக் குருகப் பண்ணி
அஞ்சலி செய்யுங் கையும் அருவிநீர் விழியு மாகத்
தஞ்சமென் றிரங்கிக் காக்கத் தற்பரா பரமு னக்கே. 4.

உனக்குநா னடித்தொண் டாகி உன்னடிக் கன்பு செய்ய
எனக்குநீ தோற்றி அஞ்சேல் என்னுநா ளெந்த நாளோ
மனக்கிலே சங்கள் தீர்ந்த மாதவர்க் கிரண்டற் றோங்குந்
தனக்குநே ரில்லா ஒன்றே சச்சிதா னந்த வாழ்வே. 5.

வாழ்வென வயங்கி என்னை வசஞ்செய்து மருட்டும் பாழ்த்த
ஊழ்வினைப் பகுதி கெட்டிங் குன்னையுங் கிட்டு வேனோ
தாழ்வெனுஞ் சமய நீங்கித் தமையுணர்ந் தோர்கட் கெல்லாஞ்
சூழ்வெளிப் பொருளே முக்கட் சோதியே அமர ரேறே. 6.

ஏறுவாம் பரியா ஆடை இருங்கலை உரியா என்றும்
நாறுநற் சாந்த நீறு நஞ்சமே அமுதாக் கொண்ட
கூறருங் குணத்தோய உன்றன் குரைகழல் குறுகி னல்லால்
ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல் தானே. 7.

தானமும் தவமும் யோகத் தன்மையும் உணரா என்பால்
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்கு வாயோ
பானலங் கவர்ந்த தீஞ்சொற் பச்சிளங் கிள்ளை காண
வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தி னானே. 8.

நடத்திஇவ் வுலகை யெல்லாம் நாதநீ நிறைந்த தன்மை
திடத்துட னறிந்தா னந்தத் தெள்ளமு தருந்தி டாதே
விடத்திர ளனைய காம வேட்கையி லழுந்தி மாயைச்
சடத்தினை மெய்யென் றெண்ணித் தளரவோ தனிய னேனே. 9.

தனிவளர் பொருளே மாறாத் தண்ணருங் கருணை பூத்த
இனியகற் பகமே முக்கண் எந்தையே நினக்கன் பின்றி
நனிபெருங் குடிலங் காட்டு நயனவேற் கரிய கூந்தல்
வனிதையர் மயக்கி லாழ்ந்து வருந்தவோ வம்பனேனே. 10.